குசல், சந்திமால், தரங்க துடுப்பாட்டத்தில் பிரகாசம்: பயிற்சிப் போட்டி சமநிலையில் முடிவு

1477
South African Invitation XI v Sri Lankan

தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, தென் ஆபிரிக்க பதினொருவர் அணிக்கெதிரான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் விளையாடிவருகிறது. மூன்றாவதும் இறுதியுமான நாளான இன்று போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

இதன் போது இலங்கை அணியில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இணைந்து கொண்ட அணித் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ், தினேஷ் சந்திமால் உட்பட மற்றும் பலர் திறமைகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முன்னைய செய்திகள் : இக்கட்டான நிலையிலிருந்து தென் ஆபிரிக்க பதினொருவர் அணியை மீட்ட லியஸ் டு ப்லோய்

மூன்றாவதும் இறுதியுமான நாளான இன்று 285 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய தென் ஆபிரிக்க பதினொருவர் அணி 69.5 ஓவர்களில் 289 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதி இரண்டு விக்கெட்டுகளையும் நுவன் பிரதீப் கைப்பற்றினார்.

தென் ஆபிரிக்க பதினொருவர் அணி சார்பாக லியஸ் டு ப்லோய் 25 பவுண்டரிகள் அடங்கலாக 142 ஓட்டங்களையும், ஜோர்ஜ் லிண்டே 29 ஓட்டங்களையும், காயா சொண்டோ 25 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி சார்பாக கடந்த ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிய லஹிரு குமார மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், எஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் தில்ருவன் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர்.

வேகப் பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர மற்றும் சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் இலங்கை அணி சார்பாக ஒரு விக்கெட்டையேனும் கைப்பற்ற முடியவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்

அதனை தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் உபுல் தரங்க முதல் விக்கெட்டுக்காக 91 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இருவரும் அரைச் சதம் கடந்த நிலையில் ஓய்வினை அறிவித்து ஏனைய வீரர்களுக்கு துடுப்பாடும் வாய்ப்பினை வழங்கினர்.

இலங்கை அணி 47.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மூன்று நாட்கள் கொண்ட இந்த பயிற்சி போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் 60 ஓட்டங்களையும், குசல் பெரேரா 51 ஓட்டங்களையும் மற்றும் உபுல் தரங்க 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னைய செய்திகள் : மதுஷங்க, கமகே, குணரத்ன மற்றும் குமார ஆகியோர் ஜிம்பாப்வே தொடருக்காக தெரிவு

இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம் 26ஆம் திகதி போர்ட் எலிசபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்) : 373 (98.5) – திமுத் கருணாரத்ன 71(ஓய்வு), கௌஷால் சில்வா 80(ஓய்வு), குசல் மென்டிஸ் 51, தனஞ்சய டி சில்வா 62, குசல் ஜனித் பெரேரா 25, உபுல் தரங்க 20, டுவனோ ஒலிவியர் 54/4, ஜோர்ஜ் லின்டே 85/3, ஜேசன் ஸ்மித் 37/1

தென் ஆபிரிக்க பதினொருவர் அணி (முதல் இன்னிங்ஸ்) : 289 (69.5) – லியஸ் டு ப்லோய் 142, கயா சொண்டோ 25, ஜேசன் ஸ்மித் 22, மார்கஸ் அக்கேர்மன் 19, மங்கலிசோ மொசெஹலா 18, எய்டன் மர்க்ரம் 16, ஜோர்ஜ் லின்டே 29, லஹிறு குமார 36/3, தில்ருவன் பெரேரா 22/2, எஞ்சேலோ மெத்திவ்ஸ் 15/2, நுவன் பிரதீப் 33/3

இலங்கை அணி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 212/5 (47.1) – குசல் பெரேரா 51(ஓய்வு), உபுல் தரங்க 50(ஓய்வு), தினேஷ் சந்திமால் 60, எஞ்சலோ மெத்திவ்ஸ் 37, பிஜோர்ன் போர்டியூ 36/2, லியஸ் டு ப்லோய் 6/1