2018ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள 23 வயதிற்கு உட்பட்ட ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரிற்கான தகுதிகாண் போட்டித் தொடரின் குழு A இல் இலங்கை அணி இடம்பிடித்துள்ளது.

சீனாவில் இடம்பெறும் இத்தொடரில் மொத்தமாக 40 அணிகள் பங்குபெறவிருக்கின்றன. இவ்வணிகள் கிழக்கு வலயம், மேற்கு வலயம் என இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வலயத்திலும் 20 அணிகள் போட்டியிடவுள்ளதுடன் அவ்வணிகள் 5 குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை அணியானது குழு A இல் இடம்பிடித்துள்ளதுடன், அக்குழுவில் ஈரான், ஓமான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய முன்னணி அணிகள் காணப்படுகின்றன.

இந்த தகுதிகாண் தொடரின் நிறைவில் 10 குழுக்களிலும் முதலிடத்தை பெறும் அணிகளும், இரண்டாம் இடத்தை பெறும் அணிகளில் மிகச் சிறந்த 5 அணிகளுமாக மொத்தம் 15 அணிகள் 2018ஆம் ஆண்டிற்கான ஆசிய சம்பியன்ஷிப் தொடரிற்கு தகுதிபெறவுள்ளன. 16ஆவது அணியாக சம்பியன்ஷிப் தொடரை நடாத்தும் சீன அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா குறித்த 15 அணிகளில் ஒன்றாக தகுதி பெறும் பட்சத்தில், இரண்டாம் இடத்தை பெறும் அணிகளில் மிகச் சிறந்த 6 அணிகள் சம்பியன்ஷிப் தொடரிற்கு தெரிவு செய்யப்படவுள்ளன. தகுதிகாண் போட்டிகள் இவ்வருடம் ஜூலை மாதம் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், பலஸ்தீனம், மியன்மார், வட கொரியா, தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளன.

தகுதிகாண் போட்டிகள் 19ஆம், 21ஆம், 23ஆம் திகதிகளில் நடைபெறுவதுடன், இலங்கை அணி தனது முதல் போட்டியில் பிரபல ஈரான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற 23 வயதிற்கு உட்பட்ட ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரிற்கான தகுதிகாண் போட்டித் தொடரின் போது இலங்கை அணி குழு D இல் இறுதி இடத்தையே பெற்றுக் கொண்டது. அத்தொடரில் இலங்கை அணியானது ஐக்கிய அரபு இராச்சியத்திடம் 4-0 என்றும், யெமன் அணியிடம் 5-0 எனவும், தஜிகிஸ்தான் அணியிடம் 5-1 என்ற கோல் அடிப்படையிலும் தோல்விகளை தழுவியிருந்தது.

மேற்கு வலயம் (மேற்கு, தெற்கு மற்றும் மத்திய பிராந்திய அணிகள்)

குழு A – ஈரான், ஓமான், கிர்கிஸ்தான்*, இலங்கை
குழு B – ஈராக், சவூதி அரேபியா*, பஹ்ரைன், ஆப்கானிஸ்தான்
குழு C – கட்டார்*, சிரியா, இந்தியா, துர்க்மெனிஸ்தான்
குழு D – ஐக்கிய அரபு இராச்சியம்*, உஸ்பெகிஸ்தான், லெபனான், நேபாளம்
குழு E – ஜோர்டான், தஜிகிஸ்தான், பலஸ்தீனம்*, பங்களாதேஷ்

கிழக்கு வலயம் (கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிராந்திய அணிகள்)

குழு F – அவுஸ்திரேலியா, மியன்மார்*, சிங்கப்பூர், புரூணை
குழு G – வட கொரியா*, லாவோஸ், சீன தாய்பேய், ஹொங் கொங்
குழு H – தாய்லாந்து*, இந்துனேஷியா, மலேஷியா, மொங்கோலியா
குழு I – தென் கொரியா, வியட்நாம்*, திமோர், மக்காவு
குழு J – ஜப்பான், சீனா*, கம்போடியா, பிலிப்பைன்ஸ்

*– போட்டிகளை நடாத்தும் நாடு