இலங்கை – பாகிஸ்தான் இளையோர் ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

107

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (26) முதல் அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் காரணமாக உள்ளூரில் நடைபெறவிருந்த அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கை வருகிறது பாகிஸ்தான் இளையோர் அணி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக…

இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இம்மதாத முற்பகுதியில் ஆரம்பமாகவிருந்த 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிராக நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டிகளை தற்காலிகமாக இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, சர்வதேச தீவிரவாதத்தை முறியடிக்கும் நோக்கில் அண்டை நாடொன்றாக இலங்கைக்கு உதவும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியை அனுப்புவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, ஏற்கனவே நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி கடந்த 23 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது.

Photos: Joint Media Briefing: Sri Lanka – Pakistan Under 19 Cricket Series

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று (24) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவர் நிபுன் தனஞ்சய, ”அண்மையில் நிறைவுக்கு வந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய ஒருசில வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ளனர். இதனால் பாகிஸ்தான் அணிக்கு நல்ல போட்டியொன்றை கொடுக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம். அதேபோல எமது அணியில் திறமையான பல வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனாலும் பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. எனினும், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக” அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பயிற்சியாளர் ஹஷான் திலகரத்ன இந்த தொடருக்கான ஆயத்தம் குறித்து கருத்து வெளியிடுகையில், ”எமது அணியில் ஏழு திறமையான துடுப்பாட்ட வீரர்களும், ஐந்து சுழல் பந்துவீச்சாளர்களும், நான்கு வேகப் பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடருக்காக (டெஸ்ட், ஒருநாள்) நாங்கள் 21 வீரர்களை ஏற்கனவே தெரிவு செய்திருந்தோம். எனினும், டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இரண்டு ஒருநாள் குழாங்களை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

அதேபோல, மிக விரைவில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக சமபலமிக்க அணியொன்றை தெரிவு செய்வதற்கான போட்டித் தொடராகவும் இது அமையும்” என அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை இளையோர் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் இளையோர் அணியுடனான ஐந்து…

இதேநேரம், கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டிருந்தோம். எமது வீரர்கள் அனைவரும் சிறந்த மனநிலையுடன் உள்ளனர். எனவே, அந்த நம்பிக்கையுடன் இலங்கை இளையோர் அணியை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணித் தலைவர் ரொஹைல் நாசிர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோர் சகலதுறை வீரர்கள் ஆவர். எனவே, இந்த தொடரின் மூலம் எதிர்காலத்தில் பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடவுள்ள திறமையான வீரர்களை இனங்காண்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் பயிற்சியாளர் அசாம் கான் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”பாகிஸ்தானிலும் இவ்வாறான அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் இலங்கை கிரிக்கெட் அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியிருந்தது. அது பாகிஸ்தானின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்தது. அதேபோல, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாங்கள் இங்கு வந்து விளையாடுவது இரு நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது” என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் பாகிஸ்தான் அணியை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜெரெம் ஜயரத்ன இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பாக். இளையோர் அணி அறிவிப்பு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு….

போட்டி அட்டவணை

  • 26 மே – முதலாவது ஒருநாள் போட்டி
  • 28 மே – இரண்டாவது ஒருநாள் போட்டி
  • 31 மே – மூன்றாவது ஒருநாள் போட்டி
  • 2 ஜூன் – நான்காவது ஒருநாள் போட்டி
  • 5 ஜூன் – ஐந்தாவது ஒருநாள் போட்டி

(அனைத்து போட்டிகளும் அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<