பங்களாதேஷில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை ஏ அணி

498
Sri Lanka A vs Bangladesh A

சுற்றுலா இலங்கை ஏ அணிக்கும் பங்களாதேஷ் ஏ அணிக்குமிடையிலான மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை ஏ அணி இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.  

ஜயசூரியவின் அபார சதத்தால் இலங்கை A அணி வலுவான நிலையில்

பங்களாதேஷுக்கு சுற்றும் பயணம் மேற்கொண்டுள்ள..

மூன்று உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் மற்றும் மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஏ அணி அதன் முதற்கட்டமாக நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணியுடன் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவுற்ற நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (10) சில்ஹெட்டில் ஆரம்பமானது.

இதன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை ஏ அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷ் ஏ அணியை விட 145 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

எனவே, 145 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் ஏ அணி நேற்றைய (11) இரண்டாம் நாள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதனால்,  88 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய (12) மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் ஏ அணி, இன்றைய தினத்தில் மேலதிகமாக 50 ஓட்டங்களை மட்டுமே பெற்று 107 என்ற மொத்த ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.  

இலங்கை ‘A’ அணியின் தலைவராக திசர பெரேரா

பங்களாதேஷ் ‘A’ அணிக்கு எதிரான மூன்று போட்டிகளைக்..

பங்களாதேஷ் ஏ அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சௌமிய சர்க்கர் 28 ஓட்டங்களை பெற்றதுடன் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் இலங்கை ஏ அணி சார்பாக மலிந்த புஷ்பகுமார 46 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும் ஷெஹான் ஜயசூரிய மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தி போட்டியை 3 நாட்களுக்குள் முடிப்பதற்கு அணிக்கு பங்காற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை ஏ அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷெஹான் ஜயசூரிய தெரிவானார். அவர் இப்போட்டியில் துடுப்பாட்டத்தில் 142 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர் நாயகனாக, மூன்றாவது போட்டிக்கு இலங்கை ஏ அணியை தலைமை தாங்கிய லஹிரு திரிமான்ன தெரிவு செய்யப்பட்டார். அவர் இத்தொடரில் மூன்று போட்டிகளிலும் நான்கு இன்னிங்ஸ் விளையாடி இரண்டு சதங்கள் உட்பட 347 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் ஏ அணி – (முதல் இன்னிங்ஸ்) 167 (62.3) – சாகிர் ஹசன் 42, சன்சமுல் இஸ்லாம் 41, பிரபாத் ஜயசூரிய 3/12, ஷெஹான் ஜயசூரிய 3/47, மலிந்த புஷ்பகுமார 3/48

இலங்கை ஏ அணி – (முதல் இன்னிங்ஸ்) 312 (81.1) – ஷெஹான் ஜயசூரிய 142, ஷம்மு அஷான் 60, சன்சமுல் இஸ்லாம் 4/104, முஸ்தபிஷுர் ரஹ்மான் 3/44

பங்களாதேஷ் ஏ அணி – (இரண்டாம் இன்னிங்ஸ்) 107 (45.3) – சௌமியா சர்க்கார் 28, மலிந்த புஷ்பகுமார 6/46 , பிரபாத் ஜயசூரிய 2/22, ஷெஹான் ஜயசூரிய 2/23

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<