தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து பின்னடைவை எதிர்நோக்கி வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த வாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள்

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக….

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமக விஜேசூரியவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழுவில் முன்னாள் வீரர்களான அநுர தென்னகோன், அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் விளையாட்டு வைத்திய நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் லக்ஷ்மன் எதிரிசிங்க உள்ளிட்ட 5 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 15ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஊடகவியலாளர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்ட விசேட செயலமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் உள்ளடக்கிய திட்டங்களை ஆராயும் முகமாக இடம்பெற்ற முதலாவது சந்திப்பு விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று (03) மாலை இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான அரவிந்த டி சில்வா, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உள்ளிட்ட ஐவரடங்கிய கிரிக்கெட் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஆலோசனை செயற்குழுவின் முதல் சந்திப்பின்போது

சுமார் 2 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில், இலங்கை கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. அத்துடன், விரைவில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை வகுத்து ஆரம்ப கட்ட இடைக்கால அறிக்கையொன்றை கையளிக்குமாறு கிரிக்கெட் ஆலோசனை குழுவிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதன்படி, குறித்த விசேட குழுவினால் எதிர்வரும் 3 மாதங்களில் கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான இடைக்கால அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இதற்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.    

குறித்த முதல் சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர,

”ஹேமக விஜேரசூரியவின் தலைமையில் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர்களான சங்கா, மஹேல மற்றும் அரவிந்தவுடன் இன்று நாம் மிகவும் வெற்றிகரமான பேச்சுவார்த்தையொன்றை நடத்தினோம்.

இதன்படி, பின்னடைவை சந்தித்துள்ள கிரிக்கெட்டை எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது, உள்ளூர் கிரிக்கெட்டில் மறுசீரமைப்பு, புதிய முறையில் கிரிக்கெட் தேர்தலை நடத்துதல், பாடசாலை மட்ட கிரிக்கெட்டை மறுசீரமைத்தல், கிரிக்கெட் நிர்வாகம், உள்ளூர் கிரிக்கெட்டில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தல், 2019 உலகக் கிண்ணத்துக்காக தற்போது முதல் அணியை எவ்வாறு தயார்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினோம்.

எனவே, இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றிணைந்த தீர்வுத் திட்டமொன்றை குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால தவணை முறையில் எதிர்வரும் 2 வருடங்களுக்குள் இக்குழுவினர் என்னிடம் சமர்ப்பிக்கவுள்ளனர். எனினும், இக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை எதிர்வரும் 3 அல்லது 4 மாதங்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது. அதன்பிறகு உரிய மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

அத்துடன், கடந்த மாதம் நடைபெற்ற முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் 53 முக்கியமான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அவையனைத்தும் 10 பிரிவுகளின் கீழ் வகுக்கப்பட்டு அறிக்கையாக கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த காலங்களில் கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை. ஆனால், இந்த முறை எனது பணிப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட இக்குழுவிற்கு எந்தவொரு அறவீடும் செய்வதில்லை. அதேபோல இவர்கள் சம்பளத்துக்காக வேலை செய்பவர்கள் அல்ல. மாறாக எனது ஆலோசகர்களாக தமது பங்களிப்பினை இலவசமாக வழங்கவுள்ளனர். எனவே சுயாதீனமான முறையில் தயாரிக்கப்படுகின்ற இவ் அறிக்கையில் முன்மொழியப்படுகின்ற தீர்மானங்களை 100 சதவீதம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

அத்துடன், பின்னடைவை சந்தித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அணியை மீளக்கட்டியெழுப்ப விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இச் செயற்றிட்டத்துக்கு எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைப்பு வழங்க முன்வந்த சங்கக்கார, மஹேல, அரவிந்த டி சில்வா உள்ளிட்ட அனைத்து முன்னாள் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த பேச்சு வார்த்தையின் பிறகு முன்னாள் வீரர்களான சங்கக்கார, மஹேல மற்றும் அரவிந்த ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.

தற்காலிக தீர்மானங்களால் கிரிக்கெட் வளர்ச்சி அடையாதுகுமார் சங்கக்கார

இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இக்குழுவானது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் சுயாதீனமாக செயற்படுகின்ற குழுவாகும். இவ்வாறான பேச்சுவார்த்தைகள் உண்மையில் வரவேற்கத்தக்கது. அதன் காரணமாகவே நான் விளையாட்டுத்துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று இதில் கலந்துகொண்டேன்.

அத்துடன், இன்று நடைபெற்ற முதலாவது சந்தப்பில் நாம் ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் ஈடுபட்டோம். முதல் சந்திப்பிலேயே எல்லாவற்றையும் செய்ய முடியாது. எனவே அடுத்துவரும் சந்திப்புக்களின் போது எமது தீர்மானங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தி 3 மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்என சங்கக்கார தெரிவித்தார்.

ரங்கன ஹேரத் குறித்த உலக பிரபலங்களின் ஒரு பார்வை

அண்மைய நாட்களில் எப்போதும் தோல்விகளையே பார்த்து துவண்டு போன…

இந்நிலையில் இதற்கு முன்னரும் இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சங்கக்கார பதிலளிக்கையில்,

இதற்கு முன்னர் இவ்வாறான குழுக்கள் நியமிக்கப்பட்டதாக நான் உண்மையில் அறிந்திருக்கவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் ஞாபகமும் இல்லை. ஆனால் ஒவ்வொரு குழுக்களாலும் முன்வைக்கப்படுகின்ற தீர்வுகள் தொடர்பில் நம்பகத்தன்மை இல்லையென மக்கள் மத்தியில் பொதுவான கருத்து ஒன்று உள்ளது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் மஹேல

எனினும், நம்பிக்கை இருந்தாலோ, இல்லாவிட்டாலோ எம்மால் முடிந்த உதவிகளை இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக நாம் எப்பொழுதும் வழங்குவதற்கு தயாராகவுள்ளோம். எனவே, தற்காலிக தீர்மானங்களால் ஒருபோதும் கிரிக்கெட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முடியாது. மாறாக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நிச்சயம் அவதானம் செலுத்துவோம்.

எனவே விளையாட்டுத்துறை அமைச்சரினால் கிரிக்கெட்டின் எதிர்காலம் கருதி நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினால் சிறந்த தீர்வுத் திட்டமொன்றினை விரைவில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுதான் எனது கடைசி முயற்சிமஹேல ஜயவர்தன

விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க இக்குழுவில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தேன். இதன்படி எதிர்வரும் 3 மாதங்களில் முதலாவது இடைக்கால அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சமர்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன் குறுகியகால திட்டங்களை நிலைபெறச் செய்வதற்காக நீண்டகால திட்டங்களையும் நாம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம். எனவே, இத்திட்டங்கள் அனைத்தையும் செயற்படுத்துகின்ற பொறுப்பு விளையாட்டுத்துறை அமைச்சரிடம் உள்ளது. இதன்படி கிரிக்கெட் ஆலேசானைக் குழுவினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்தும் இலங்கை கிரிக்கெட்டுக்காக எனது நேரத்தை செலவழிக்க போவதில்லை என மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியில் தொடரும் வீரர்களுக்கான போட்டித்தடையும், அபராதமும்

உலகிலுள்ள அனைத்து மக்களையும் இன, மத, மொழி வேறுபாடின்றி இணைக்கின்ற…

இக்குழுவானது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட குழு அல்ல. ஆனால் நாம் முன்வைக்கின்ற திட்டங்களை அவர்கள் தான் நடைமுறைப்படுத்த வேண்டும். மாறாக அது நடைமுறைப்படுத்தப்படாமல் போனால் எமது காலத்தையும் நேரத்தையும் ஒதுக்கி மேற்கொண்ட இந்த சந்திப்புக்கு எந்தவித பயனும் கிடைக்காமல் போய்விடும் என்றார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியை மீட்டெடுக்கும் நோக்கில் 2015ஆம் ஆண்டு மஹேல ஜயவர்தனவினால் விசேட அறிக்கையொன்று அப்போதைய இடைக்கால நிர்வாகக் குழு தலைவராகச் செயற்பட்ட சிதத் வெத்தமுனியின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது. இவ்வறிக்கைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் மஹேலவிடம் வினவிய போது,

என்னால் கையளிக்கப்பட்ட அறிக்கையானது இதுவரை காலமும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்துடன் எனது அறிக்கைக்கு என்ன நடந்தது என இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை. எனினும் அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்று மீண்டும் கிடைத்துள்ளது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக சிறந்த திட்டமொன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளேன். ஆனால் இந்த தடவையும் எமது அறிக்கையின் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் மறுபடியும் புறக்கணிப்பட்டால் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க முன்வர மாட்டேன் எனவும் இதுதான் எனது கடைசி முயற்சி எனவும் தெரிவித்தார்.

எனவே இந்தக் குழுவிலுள்ன அனைவரது கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுத்து இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக சிறந்ததொரு யோசனையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் மஹேல இதன்போது தெரிவித்தார்.

இளம் சமுதாயத்தினருக்காக ஒன்றிணைந்தோம்அரவிந்த டி சில்வா

எனது இந்த வளர்ச்சிக்கு கிரிக்கெட் தான் முக்கிய காரணம். எனவே கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை மறந்து எமது திறமைகள் மற்றும் அனுபவங்களை இளம் வீரர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.

அத்துடன் இலங்கை அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க குறுகிய கால திட்டங்களை உடனடியாக அமுலுக்கு கொண்டு வரவேண்டும். அதன்பிறகு நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். எனினும் தற்போதுள்ள வீரர்கள் அடிக்கடி உபாதைக்குள்ளாவது உள்ளிட்ட காரணங்கள் தொடர்பிலும் நாம் அதிக கவனம் செலுத்தி உரிய திட்டமொன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம் என அரவிந்த தெரிவித்தார்.

சுமார் 2 தசாப்தங்களாக இலங்கை கிரிக்கெட்டுக்காக பல சாதனைகளைப் படைத்து இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்ற, கிரிக்கெட் குறித்த பரந்த அறிவும், சிறந்த அனுபவமும் கொண்டவர்களாக விளங்குகின்ற குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன இலங்கைக் கிரிக்கெட் அணியைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அது மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.