ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சங்கக்காரவினால் யோசனை

237
support cricket for Olympics

கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஜாம்பவானுமான குமார் சங்கக்கார உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அங்கத்துவம் வகிக்கின்ற மெல்பேர்ன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி), இந்திய கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

T-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும்..

உலக கிரிக்கெட்டின் சட்டவிதிமுறைகளை அமுல்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் முன்னிலை அமைப்பாக செயற்பட்டு வருகின்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களை உள்ளடங்கிய இக்குழுவின் விசேட கூட்டம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றுமுன்தினம் (10) நடைபெற்றது.

இதன்போது அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் மற்றும் ரொட் மார்ஷ், இலங்கையின் குமார் சங்கக்கார, இந்தியாவின் சௌரவ் கங்குலி, பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய குமார் சங்கக்கார 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்கான வேவைத்திட்டங்களை தற்பொழுது முதல் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஒலிம்பிக் விளையாட்டுக்களில் T-20 கிரிக்கெட்டை சேர்க்க நீண்டகால ஆதரவாளராக இந்தக் குழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. உலகின் பெரும்பாலான நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவது சிறந்த பெறுபேறை கொடுக்கும். இதற்கு இந்தியாவின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

எனவே, பரிஸில் நடைபெறவுள்ள 2024 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை இணைத்துக் கொள்வது இலகுவான விடயமல்ல. ஆனாலும், அதற்கான வேலைத்திட்டங்களை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். எனினும், 2028 அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலாவது கிரிக்கெட்டை இணைத்துக்கொள்வது மிகவும் வெற்றியளிக்கும் என நம்புகிறேன். எனவே, அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றார்.

இலங்கை கிரிக்கெட் வாரிய மாகாண தொடரில் சம்பியனாகிய ஏறாவூர் யங் ஹீரோஸ்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் டிவிஷன்…

இதேவேளை, மெல்பேர்ன் கிரிக்கெட் கழகத்தின் தற்போதைய தலைவரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரருமான மைக் கெட்டின் உரையாற்றுகையில், 2024இல் பரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும், அதன்பிறகு 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை இணைத்துக்கொள்ள நவடடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும், கிரிக்கெட் உலகின் முன்னணி நாடாக விளங்குகின்ற இந்திய கிரிக்கெட் சபை, ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை இணைத்துக் கொள்வதற்கு ஆரம்பம் முதல் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது. அதிலும், குறிப்பாக 4 வருடங்களுக்கு ஒருமுறை T-20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுவதாகவும், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றால் எதிர்கால சுற்றுப் பயணங்களுக்கு இது தடையாக அமைவதாகவும் இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்து வருகின்றது.

அதிலும் குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றால், இந்திய கிரிக்கெட் சபையின் அதிகாரம், அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் கீழ் கொண்டு செல்ல நேரிடும் என்ற நிலை ஏற்படும் என அந்நாட்டு கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும், இனிவரும் காலங்களிலும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் இணைத்துக் கொள்வதற்கு இந்திய கிரிக்கெட் சபை தடையாக இருக்காது என்று மெல்பேர்ன் கிரிக்கெட் கழகத்தின் உறுப்பினர்கள் இதன்போது நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.

டெஸ்ட் தரவரிசையில் அதிரடி மாற்றங்கள் : சந்திமால் மேலும் முன்னேற்றம்

தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதிய..

அதுமாத்திரமன்றி, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைத்துக் கொள்ளப்பட்டால் அனைத்து வீரர்களும் அர்ப்பணிப்புடன் விளையாடி எப்படியாவது தமது நாட்டிற்கு பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்க முயற்சி செய்வார்கள். அதேபோல உலக நாடுகளிலும் பிரபல்யமிக்க விளையாட்டாக மாறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், 2028இற்குள் இன்னும் பல நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டை அறிமுகப்படுத்தி ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைத்துக்கொள்ள அவ்வமைப்பு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2013இல் இதுதொடர்பிலான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை பலத்த எதிர்ப்பினை வெளியிட்டன. இதன்காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபை அந்த கோரிக்கையை மறுத்திருந்தது.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலின் போது, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும், ஒவ்வொரு நாடுகளும் நடத்துகின்ற T-20 போட்டிகளில் உள்ளூர் வீரர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கவும் அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன், கிரிக்கெட் போட்டிகளின் போது தலையில் பந்து தாக்குவது உள்ளிட்ட வீரர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்ற விடயங்களிலிருந்து வீரர்களை பாதுகாப்பதற்காக கூடிய அவதானம் செலுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<