இலங்கை கிரிக்கெட் வாரிய மாகாண தொடரில் சம்பியனாகிய ஏறாவூர் யங் ஹீரோஸ்

2368

இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) ஏற்பாடு செய்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உள்ளூர் அணிகளுக்கு இடையிலான விஷேட (ஒரு நாள்) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக் கழகத்தினை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி சம்பியன் பட்டத்தினை சுவீகரித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளின் தரத்தினை அதிகரிக்கும் நோக்கோடு மாவட்ட ரீதியாக முன்னிலை வகிக்கும் ஆறு அணிகள் இந்த விஷேட தொடருக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தன.

டிவிஷன் III கிழக்கு மாகாண சம்பியனாக முடிசூடிய ஏறாவூர் யங் ஹீரோஸ்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் டிவிஷன்..

அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் கிழக்கு மாகாண டிவிஷன் – III கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டத்தினை வென்ற யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், லக்கி விளையாட்டுக் கழகம் என்பன மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தும் அம்பாறை மாவட்டத்தில் இருந்து சத்ததிஸ்ஸபுர விளையாட்டுக் கழகம், உஹன விளையாட்டுக் கழகம் ஆகியவையும், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து நொமென்டஸ் விளையாட்டுக் கழகம், ஸ்பென்ஸ் விளையாட்டுக் கழகம் என்பனவும் பங்கேற்றிருந்தன.

தொடரின் ஆரம்பப் போட்டிகள் யாவும் கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் டிசம்பர் மாத இறுதியில் இருந்து நடைபெற்று வந்தன. ஆரம்ப போட்டிகளின் அடிப்படையில் மாகாண சம்பியன் யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி புதன் கிழமை (10)  டம்பெற்றது.

ஏனைய போட்டிகள் இடம்பெற்ற அதே மைதானத்தில் நடந்த தீர்மானமிக்க இந்த இறுதிப் போட்டியில் விளையாட மட்டக்களப்பு அணிகளான யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகமும் லக்கி விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்கி விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்து கொண்டது. இதன்படி துடுப்பாட மைதானம் விரைந்த லக்கி அணியினரை யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் பாஷில் தனது அபார பந்து வீச்சு மூலம் ஆரம்பத்திலேயே மிரட்டியிருந்தார். இதனால், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மூவரும் லக்கி அணி சார்பாக பத்து ஓட்டங்களையேனும் தாண்டாத நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

எனினும், நான்காம் இலக்கத்தில் துடுப்பாடிய S. நிசாந்தன் சிறப்பான முறையில் ஆடி அரைச்சதம் ஒன்றுடன் அணியினை மீட்டார். நிசாந்தனுக்கு  பின்வரிசையில் ஆடிய L. சார்ள்சும் கைகொடுக்க 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 242 ஓட்டங்களினை லக்கி விளையாட்டுக் கழகம் பெற்றது.

கட்டார் தேசிய கிரிக்கெட் அணியில் 12 வருடங்கள் விளையாடிய இலங்கையர்

பின்னர் 1987ஆம் ஆண்டு எங்களது காலத்திலேயே…

லக்கி அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக நிசாந்தன் 66 ஓட்டங்களினையும், சார்ள்ஸ் 38 ஓட்டங்களினையும் பெற்று தமது தரப்புக்கு வலுச்சேர்த்திருந்தனர்.  

மறுமுனையில் ஏறாவூர் யங் ஹீரோஸ் அணியின் பந்து வீச்சில் பாஷில் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், இஹ்கான் மற்றும் ரூகைம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 243 ஓட்டங்களைப் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் இலக்கினை 42.4 ஓவர்களில் 5  விக்கெட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களுடன் அடைந்தது.  

யங் ஹீரோஸ் அணியின் துடுப்பாட்டத்தில், ஏற்கனவே பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட பாஷில் இம்முறை 84 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது  நின்றிருந்தார். இதேவளை, மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான சப்ரி வெறும் 18 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் அடங்கலாக 47 ஓட்டங்களினை அதிரடியான முறையில் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

லக்கி விளையாட்டுக் கழகம்  – 242 (48.5) நிசாந்தன் 66, சார்ள்ஸ் 38, பாஷில் 62/4

யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் – 245/5 (42.4) பாஷில் 84*, சப்ரி 47, இர்ஷாத் 46

முடிவு ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி