பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த பங்களாதேஷ் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில்

239

அபுதாபி மைதானத்தில் இடம்பெற்று முடிந்திருக்கும், ஆசியக் கிண்ணத் தொடரின், “சுபர் 4” சுற்றின் ஆறாவதும் இறுதியுமான போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியினை 37 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

பலம் மிக்க இந்திய அணியுடனான மோதலை சமநிலையில் முடித்த ஆப்கான்

டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் ஆசியக் கிண்ணத்…

பாகிஸ்தான் அணியுடன் வென்றிருக்கும் பங்களாதேஷ் அணி,  இவ்வெற்றியுடன் 14ஆவது முறையாக ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நாளை (28) இந்திய அணியுடன் மோதும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுள்ளது.

நேற்று (26) தொடங்கியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தார்.

இப்போட்டியில், வெற்றி பெறும் அணியே ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றி எதிர்பார்ப்புடன் களமிறங்கின. பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரரான சகீப் அல் ஹஸனுக்கு காயம் காரணமாக, இப் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இதேநேரம், தமது முன்னைய போட்டியில் இந்தியாவுடன் தோல்வியடைந்த பாகிஸ்தான், வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமீருக்கு பதிலாக, ஜுனைட்  கானை அணியில் இணைத்திருந்தது.

தொடர்ந்து முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்ப வீரர்களாக வந்திருந்த, செளம்யா சர்க்கார் மற்றும் லிடன் தாஸ் ஆகியோர் மோசமான ஆரம்பத்தை தந்தனர். தொடர்ந்து மூன்றாம் இலக்கத்தில் ஆட வந்த மொமினுல் ஹக்கும் சோபிக்காத நிலையில், பங்களாதேஷ் அணி ஆரம்பத்திலேயே 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது.

எனினும், புதிய துடுப்பாட்ட வீரர்களாக வந்த முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மொஹமட் மிதுன் ஜோடி பொறுமையான முறையில் இணைப்பாட்டம் ஒன்றினை வழங்கி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். 144 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இரண்டு வீரர்களினதும் இணைப்பாட்டத்தினால் பங்களாதேஷ் அணி சரிவில் இருந்து மீண்டு கொண்டது. இதில், தனது 30ஆது ஒரு நாள் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்த முஷ்பிகுர் ரஹீம் 116 பந்துகளுக்கு 9 பெளண்டரிகள் அடங்கலாக 99 ஓட்டங்கள் குவித்து துரதிஷ்டவசமாக சதம் பெறத் தவறினார். அதேவேளை, மொஹமட் மிதுன் தன்னுடைய 2ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் 60 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

தொடர்ந்து மத்திய வரிசை வீரர்கள் காட்டிய சிறு அதிரடியுடன், பங்களாதேஷ் அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்களை குவித்தது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பாக ஜுனைத் கான் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது மீள்வருகையின் அவசியத்தை உணர்த்தியதோடு, சஹீன் கான் அப்ரிடி மற்றும் ஹஸன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 240 ஓட்டங்களினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் இலகு வெற்றி பதிவு செய்த இந்தியா

துபாய் மைதானத்தில் இடம்பெற்று முடிந்திருக்கும் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட்..

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில், இமாம்-உல்-ஹக் 83 ஓட்டங்கள் பெற்று தனிநபர் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்திருந்ததுடன், அசிப் அலி (31), சொஹைப் மலிக் (30) தவிர ஏனைய அனைவரும் மோசமாகவே செயற்பட்டிருந்தனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பாக முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுக்களையும், மெஹிதி ஹஸன் மிராஸ் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

இவ்வெற்றியுடன், ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் அணி தெரிவாகியுள்ள காரணத்தினால், கடந்த முறை (2016) T20 போட்டிகளாக இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடர் போன்று இம்முறையும் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் இடையிலேயே மீண்டும் ஆசியக் கிண்ணத்திற்கான இறுதி மோதல் இடம்பெறவுள்ளது.

மறுமுனையில், ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் மோசமான தோல்வியொன்றுடன் ஆசியக் கிண்ண தொடரை விட்டு வெளியேறுகின்றது.

போட்டியின் ஆட்டநாயகன் விருது பங்களாதேஷ் அணிக்கு துடுப்பாட்டத்தில் பிரகாசித்த முஷ்பிகுர் ரஹீமிற்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 239 (48.5) முஷ்பிகுர் ரஹீம் 99(116), மொஹமட் மிதுன் 60(84), ஜுனைத் கான் 14/4(9), சஹீன் கான் அப்ரிடி 47/2(10)

பாகிஸ்தான் – 202/9 (50) இமாம்-உல்-ஹக் 83(105), முஸ்தபிசுர் ரஹ்மான் 43/4(10), மெஹிதி ஹஸன்  28/2(10)

முடிவு – பங்களாதேஷ் அணி 37 ஓட்டங்களால் வெற்றி

சுபர் 4 சுற்றின் புள்ளிகள் அட்டவணை

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க