தற்பொழுது கடினப் பந்து கிரிக்கெட்டில் வளர்ச்சி கண்டு வரும் இலங்கையின் பிரதேசங்கள் என்று குறிப்பிடும்பொழுது, அதில் முதலில் இருப்பது வட மாகாணமே. 30 வருட கால யுத்தத்தின் பின்னரான தற்போதைய காலப்பகுதியில் அப்பிரதேச வீரர்கள் கிரிக்கெட்டில் காண்பித்து வரும் சிறந்த திறமைகள் இதற்கு சான்றாக உள்ளன.

அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அனுசரணையுடன் தற்பொழுது நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாகாணங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் வட மாகாண அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக குறித்த மாகாணத்தில் இருந்து சிறந்த 8 வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  

23 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கான வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டது

மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் இடம்பெற்ற தேர்வுகளின் பின்னரே இவர்கள் இந்த 23 வயதுக்கு உட்பட்ட தொடருக்காக வட மாகாண அணிக்கு உள்வாங்கப்பட்டனர். இத்தொடரில் பங்கு கொள்ளும் ஊவா, கிழக்கு மற்றும் வட மாகாண அணிகளை மேலும் வலுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தைச் சேர்ந்த சில வீரர்களும் அவ்வணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது வளர்ச்சி கண்டு வரும் வட மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு, தேசிய மட்ட வீரர்களுடன் விளையாடி அனுபவம் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ள நிலையில், குறித்த வாய்ப்பைப் பெற்ற வீரர்கள் குறித்த ஒரு அறிமுகத்தை நாம் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

வட மாகாண அணி வீரர்கள் – றிசித் உப்பமல், ரெவான் கெல்லி, சலித்த பெர்ணாந்து, லக்ஷன் ஜயசிங்க, திலான் நிமேஷ், தருஷ பெர்னாந்து, P. டர்வின், ராஜூ கஜநாத், A அஞ்சயன், R ரஜீவன், பராக்கிரம தென்னக்கோன், கனகரத்தினம் கபில்ராஜ், G ரதிசன், சுஜன் மீயெஸ், V ஜதுசன்

இந்த அணியில், அண்மைக் காலங்களில் வட மாகாணத்தில் பாடசாலை, கழகம், மாவாட்ட மற்றும் மாகாண மட்டங்களில் சிறப்பித்த 8 வீரர்களே குறித்த மாகாண மற்றும் மாவட்ட தேர்வாளர்கள் மூலம் இந்த குழாத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வீரர்களின் கிரிக்கெட் திறன்கள் குறித்து சற்று அவதானிப்போம்,


கனகரத்தினம் கபில்ராஜ் – சென் ஜோன்ஸ் கல்லூரி (யாழ்ப்பாணம்)

s-10வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பலரும் அறிந்த கிரிக்கெட் வீரர்களில் இளம் வலது கை வேகப்பந்து வீச்சாளரான கபில்ராஜும் ஒருவர். யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவரான இவர், தனது 15ஆவது வயதில் இருந்து யாழ் மாவட்ட மற்றும் வட மாகாண அணிகளில் அங்கம் வகித்தவர். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் 19 வயதுக்குட்பட்ட பதினொருவர் அணியிலும் விளையாடிய அனுபவம் பெற்றவர்.

ஆரம்ப காலத்தில் விக்கெட் காப்பாளராக செயற்பட்ட கபில், பின்னர் வேகப்பந்து வீச்சாளராக மாற்றம் பெற்றமை இவரது சிறப்பம்சமாகும். தனது நீண்ட கால பந்து வீச்சு அனுபவத்தின் மூலம் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 2 இற்கான (டிவிஷன் ll) பாடசாலைகளுக்கு இடையிலான கடந்த பருவகாலப் போட்டிகளில் கபில் மொத்தமாக 80 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

நான்கு வருடங்கள் வடக்கின் பெரும் சமரில் பங்குகொண்டுள்ள இவர், இந்த வருடப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது, சென் ஜோன்ஸ் கல்லூரி அணி, யாழ் மத்திய கல்லூரி அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கு பிரதான காரணியாக இருந்தது.

அது போன்றே, இறுதியாக இடம்பெற்ற முரளி வெற்றிக் கிண்ணத் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

ஜோனியன்ஸ் கழகத்திற்காக மூன்று வருடங்கள் விளையாடி வரும் இவர், இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் சிறந்த வீரராகவும் உள்ளார். அண்மையில் இடம்பெற்ற 19 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகளில் இவர் வெளிப்படுத்திய திறமை அதற்கு சிறந்த சான்றாகும்.


ஞானசேகரம் ரதிசன் – புனித பத்திரிசியார் கல்லூரி (யாழ்ப்பாணம்)

s-7வட மாகாணத்தில் புற்தரை கொண்ட (Turf) கிரிக்கெட் ஆடுகளம் உள்ள ஒரே மைதானம் புனித பத்திரிசியார் கல்லூரிலேயே உள்ளது. இவ்வாறான வசதியைக் கொண்ட இக்கல்லூரிக்கு எதிர்காலத்தில் சிறந்த வீரர்கள் பலரை உருவாக்கும் வாய்ப்பு ஏனைய பாடசாலைகளை விட அதிகமாகவே உள்ளது.

அந்த வகையில் இக்கல்லூரியில் இருந்து தற்பொழுது தெரிவாகியுள்ள ஞானசேகரம் ரதிசன், பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 3 (டிவிஷன் III) போட்டிகளில் இறுதிப் பருவகாலத்தில் 48 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

பட்றீசியன் கிரிக்கெட் கழகம் மற்றும் வட மாகாண கிரிக்கெட் அணி என்பவற்றில் அங்கம் வகிக்கும் சகலதுறை வீரரான இவர், பட்றீசியன் அணிக்காக துடுப்பாட்டத்தில் ஒரு அரைச் சதம் பெற்றுள்ளதுடன், பந்து வீச்சில் இரண்டு முறை 4 விக்கெட்டுகளைப் பதம் பார்த்து சிறந்த பதிவை வைத்துள்ளார்.


வசந்தன் ஜதுசன் – சென் ஜோன்ஸ் கல்லூரி (யாழ்ப்பாணம்)

s-5வடக்கின் பெரும் சமரின் நடப்புச் சம்பியனாக உள்ள சென் ஜோன்ஸ் கல்லூரியின் முக்கிய சகலதுறை வீரரான ஜதுசன், கிரிக்கெட்டில் மிக நீண்டகால அனுபவத்தைப் பெற்றுள்ள ஒரு வீரர்.

13 வயதின் கீழ் பாடசாலை அணியின் தலைவராக செயற்பட்ட காலத்தில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியை பிரிவு 3 இன் சம்பியனாக முன்னேற்றிய பெருமையுடனேயே ஜதுசன் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

கபில்ராஜின் 10 விக்கெட்டுகளுடன் வடக்கின் பெரும் சமரை வெற்றிகொண்டது சென் ஜோன்ஸ் கல்லூரி  

பின்னர் 15 வயதின் கீழ் பிரிவில் இருந்து 19 வயதின் கீழ் பிரிவு வரையிலான யாழ் மாவட்ட மற்றும் வட மாகாண அணிகளில் தொடர்ந்து தனக்கென இடம் ஒதுக்கி வைத்து வந்த இவர், அணியின் மத்திய வரிசைத் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒருவராவார்.

பந்து வீச்சில் எதிரணி வீரர்களை மிரட்டும் ஜதுசன், பிரிவு 2 இல் விளையாடும் தனது கல்லூரிக்காக கடந்த பருவகால போட்டிகளில் 105 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவ்வருட பெரும் சமரில் 70 ஓட்டங்களைப் பெற்ற அதே வேளை 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அது போன்றே முரளி வெற்றிக் கிண்ணத் தொடரில் 3 போட்டிகளில் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். பாடசாலைக் காலப்பகுதிலேயே ஜோனியன் கழகத்திற்காகவும் விளையாடும் ஒரு வீரராக இவர் திகழ்கின்றார்.


பூபாலசிங்கம் டர்வின் – யாழ் மத்திய கல்லூரி  

s-8இந்த 23 வயதுக்குட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான தொடரில் வட மாகாண அணியை தலைமை தாங்கி நடத்தும் இவர், யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் வீரராவார். 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வடக்கின் பெரும் சமரில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன் கடந்த 3 வருடங்களாக சென்றலைட்ஸ் கழக அணிக்காக விளையாடி வரும் டர்வின், பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் இரண்டிலும் பிரகாசிக்கும் ஒருவர்.

பிரிவு 3 இல் விளையாடும் சென்றலைட்ஸ் அணிக்காக கடந்த பருவகாலத்தில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள வலது கை துடுப்பாட்ட வீரரான இவர், 3 அரைச் சதங்கள் உள்ளடங்களாக 200 இற்கும் அதிகமான ஓட்டங்களையும் 7 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் டர்வின், 7 அரைச் சதங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ராஜு கஜநாத்இந்துக் கல்லூரி (யாழ்ப்பாணம்)

s-3வடக்கில் உள்ள முக்கிய கிரிக்கெட் அணிகளைக் கொண்ட மற்றொரு பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரி உருவாக்கிய ஒரு சிறந்த விக்கெட் காப்பாளர் இவர்.

விக்கெட் காப்பு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கும் ராஜு, இதுவரை தான் விளையாடிய பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் 6 சதங்களையும், 4 அரைச் சதங்களையும் பெற்றுள்ளார். தனது அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையாக 141 ஓட்டங்களையும் இவர் பதிவு செய்துள்ளார்.

அது போன்றே ஜொலிஸ்டார் கழகத்திற்காக சுமார் 5 வருடங்கள் விளையாடும் அனுபவத்தையும் கொண்ட இவர், துடுப்பாட்டம், விக்கெட் காப்பு என்பவற்றில் தேசிய மட்டத்திலான வீரர்களுடன் போட்டியிடும் எதிர்பார்ப்பில் உள்ள மற்றொரு யாழ் வீரராவார்.

இந்த ஐந்து யாழ் மாவட்ட வீரர்களுக்கு மேலதிகமாக கிரிக்கெட்டின் வளர்ச்சியை நுகர்ந்து வரும் வடக்கின் ஏனைய இடங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் தலா ஒரு வீரர் இந்த வட மாகாண அணிக்கு தெரிவாகியுள்ளனர்.


சுஜன் மீயெஸ் – புனித  வளனர் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயம் (மன்னார்)

s-9பிரிவு 3 இல் அங்கம் வகிக்கும் பல அணிகளைக் கொண்ட மன்னார் மாவட்டத்தில் கிரிக்கெட் இப்பொழுதே பிரபலமடைய ஆரம்பித்துள்ளது. இவ்வாறான ஒரு பிரதேச வீரரான சுஜன் மீயெஸ், இலங்கைக் கிரிக்கெட்டில் வித்தியாசமான, அபூர்வமான கதையைக் கொண்ட ஒருவர்.

தனது சிறு பராயத்திலோ, ஆரம்க கால பாடசாலை வாழ்விலோ கடினப் பந்துக் கிரிக்கெட்டின் வாசனையைக்கூட நுகராத இவர், அண்மையிலேயே கிரிக்கெட்டை ஆரம்பித்துள்ளார். எனினும், மிகக் குறுகிய காலத்தில் தேசிய மட்டத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு முக்கிய வீரராக மாறியுள்ளார்.

மன்னார் புனித அந்தோனியார் விளையாட்டுக் கழக வீரரான இவர், இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமை இவரது சிறந்த பந்து வீச்சுப் பதிவாக உள்ளது.

தற்பொழுது 17 வயதையுடைய இளம் வீரரான இவர், முதல் முறை தேசிய மட்ட வீரர்களுடன் பங்குகொண்டுள்ள இந்த சுற்றுத்தொடரிலேயே தனது திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.


ரகுனாதன் ரஜீவன் – கிளிநொச்சி மகா வித்தியாலயம்

s-6கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவரான ரஜீவன், இந்த அணியில் உள்ள மற்றுமொரு சகலதுறை வீரராக உள்ளார். 15 வயதில் இருந்து வட மாகாண அணியில் அங்கம் வகித்து வரும் இவர் பாடசாலை அணியிலும் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பிக்கும் ஒருவராக உள்ளார்.

இவர், இதுவரை இடம்பெற்றுள்ள பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் 3 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார். குறிப்பாக ப்ரீமா கிண்ணப் போட்டிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி 17 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பெற்றமை இவரது சிறந்த பந்து வீச்சுப் பதிவாக உள்ளது.

யாழ் அணியை வீழ்த்தி சம்பியனாகியது ஜயவர்தனபுர பல். அணி

ரஜீவனின் கழக மட்ட விளையாட்டுத் திறனை எடுத்துப் பார்க்கும்பொழுது, கிளிநொச்சி மகாதீபம் விளையாட்டுக் கழக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், இதுவரையில் 2 அரைச் சதங்களைப் பெற்றுள்ளதுடன், தனது அணியின் மத்திய தர வரிசையை பலப்படுத்தும் ஒரு துடுப்பாட்ட வீரராகவும் செயற்பட்டு வருகின்றார்.


அருனோதயம் அஞ்சயன் – விந்தியானந்தா கல்லூரி (முல்லைத்தீவு)

s-4முல்லைத்தீவு விந்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவரான இவர், பாடசாலை கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பித்த ஒருவர். அது போன்று தனது கழகமான வித்யா அணிக்காக 4 வருடங்கள் விளையாடி வருகின்றார். கடந்த பருவகாலப் போட்டிகளில் 87 ஓட்டங்களையும், 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில் முரளி வெற்றிக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய இவர், அத்தொடருக்கான போட்டிகளில் இதுவரை 3 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றுள்ளார்.

அது போன்றே, 2014ஆம் ஆண்டுக்கான முரளி வெற்றிக் கிண்ணத்திற்காக கிளிநொச்சி-முல்லைத்தீவு மாவட்ட இணை அணிக்கு தலைமை தாங்கிய அனுபவமும் இவருக்கு உண்டு.

இந்த 8 வீரர்களுக்கு மேலதிகமாக அணியின் முகாமையாளர் மற்றும் பயிற்றுவிப்பாளராக செயற்படுபவர்கள் அனைவரும் இலங்கைக் கிரிக்கெட்டில் சிறந்த அனுபவத்தைப் பெற்றவர்களாகவே உள்ளனர்.


அமில பின்னந்துவ – தலைமைப் பயிற்றுவிப்பாளர்

s-13இலங்கை கிரிக்கெட் சபையில் 12 வருடங்கள் கடமையாற்றும் இவர், அம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல் என பல மாவட்டங்களிலும் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டவர்.

இலங்கை தேசிய அணி வீரர்களான அகில தனஞ்சய, லஹிரு குமார, நிரோஷன் திக்வெல்ல மற்றும் சதுன் வீரக்கொடி ஆகிய வீரர்களுக்கு பயிற்சி வழங்கிய பயிற்றுவிப்பாளர்களில் அமில பின்னந்துவவும் ஒருவர்.

அது தவிற கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கான முக்கிய 5 செயற்திட்டங்களில் சிறந்த பெறுபேறு, பயிற்றுனர்களுக்கான பட்டப் படிப்பிற்கான தெரிவு போன்ற கிரிக்கெட் கல்வித் துறையிலும் சிறந்த திறமையை வெளிப்படுத்திய ஒருவராகவே அமில உள்ளார்.

மாவட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட இவர், அண்மைக்காலங்களில் இடம்பெற்ற தரமுயர்வுக்கான பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றுடனான சித்தியைப் பெற்றதன் காரணமாகவே, மாகாண பயிற்றுவிப்பாளராக தரமுயர்த்தப்பட்டு வட மாகாண பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, கடந்த 8 மாதங்களாக வட மாகாண கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக இவர் செயற்பட்டு வருகின்றார்.

வட மாகாணத்தில் உள்ள இளம் வீரர்களை, அடிப்படையில் இருந்து சிறந்த முறையில் வழிநடாத்தி சுமார் 5 வருடங்களில் தேசிய அளவில் உள்ள சிறந்த வீரர்களுக்கு சவால் கொடுக்கும் விதத்தில் அவர்களை உருவாக்கும் நீண்ட கால இலக்குடன் அமில பின்னந்துவ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அனைத்து துறைகளிலும் பங்களிப்பு வழங்கும் முகமாக அணியின் துணைப் பயிற்றுவிப்பாளர்களாக கார்த்திகேசன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.


பிரதீப் ஜயப்பிரகாஷ் – அணியின் முகாமையாளர்

s-2இலங்கை தேசிய அணியின் முன்னாள் வீரரான பிரதீப், தான் கல்வி கற்ற கொழும்பு ரோயல் கல்லூரியின் முதல் பதினொருவர் அணி, இலங்கை A அணி, இலங்கை தலைவர் பதினொருவர் அணி மற்றும் இலங்கை தேசிய அணி என பல அணிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர்.

கிரிக்கெட் விளையாட்டில் மாத்திரமன்றி, நிர்வாக முறையிலும் சிறந்த அனுபவம் பெற்ற பிரதீப், இலங்கை கிரிக்கெட் சபையின் போட்டி மத்தியஸ்தராகவும், SAITM நிறுவனத்தின் விளையாட்டுப் பணிப்பாளராகவும் உள்ளார்.

வட மாகாண வீரர்களுக்கு மேலதிகமாக, இந்த நிர்வாக அதிகாரிகளும் குறித்த பகுதியின் வீரர்களின் கிரிக்கெட் வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். எதிர்காலத்தில் தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் வீரர்களை வட மாகாணத்தில் இருந்து உருவாக்க வேண்டும் என்ற இவர்களது கனவு நிறைவேற நாமும் வாழ்த்துகின்றோம்.

ss-11

ss-12