புதிய FIFA தரவரிசை வெளியீடு : ஆண்டின் சிறந்த அணியாக ஜெர்மனி சாதனை

244

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) இந்த ஆண்டிற்கான இறுதி தரவரிசை வெளியீட்டின்படி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி ‘ஆண்டின் சிறந்த அணி’யாக 2017ஆம் ஆண்டு முழுவதும் நீடித்துள்ளது. 

2018ஆம் ஆண்டு தனது உலக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போராடவிருக்கும் ஜெர்மனிக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக இருந்தது. 2017 இல் 10 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஜெர்மனி, தான் ஆடிய 15 போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக உள்ளது.  

FIFA தரவரிசை வெளியீடு : வரலாற்றில் இலங்கைக்கு மிகப் பெரிய சரிவு

சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் (FIFA)…

இதன்மூலம் 2016 மற்றும் 2015இல் ஆண்டின் சிறந்த அணியாக வந்த முறையே ஆர்ஜன்டீனா மற்றும் பெல்ஜியம் அணிகளை பின்தள்ளி ஜெர்மனி அணிக்கு முதலிடத்தை பிடிக்க முடிந்துள்ளது.

குறிப்பாக முந்தைய FIFA தரவரிசைக்கு இடைப்பட்ட காலத்தில் 41 ‘A’ நிலை சர்வதேச போட்டிகள் இடம்பெற்றபோதும் ஜெர்மனிக்கு புதிப்பிக்கப்பட்ட புதிய தரவரிசையில் தனது முதல் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் அணிகளும் போட்டிகளில் பங்கேற்றிருந்தன.  

ஆண்டின் இறுதி FIFA தரவரிசையின் முதல் 50 இடங்களில் வெறும் ஐந்து மாற்றங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சிறிய மாற்றங்கள் என்பதோடு முதல் 30 இடங்களுக்கு வெளியில் இடம்பெற்ற மாற்றங்களாக உள்ளன.

செர்பியா ஒரு இடம் முன்னேறி 36ஆவது இடத்தையும், பொஸ்னிய-ஹெர்சகொவினா ஒரு இடம் முன்னேறி 37ஆவது இடத்தையும், அவுஸ்திரேலியா ஒரு இடம் உச்சம் பெற்று 38ஆவது இடத்தையும், கானா ஒரு இடம் ஏற்றம் கண்டு 50ஆவது இடத்தையும் கொங்கோ 3 இடங்கள் சரிந்து 39ஆவது இடத்தையும் பிடித்ததே அந்த மாற்றங்களாகும்.   

இதன்படி FIFA தரவரிசையில் பிரேசில் இரண்டாவது இடத்தையும் போர்த்துக்கல் 3 ஆவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டதோடு ஆர்ஜன்டீனா, பெல்ஜியம் நாடுகள் முறையே 4 ஆவது மற்றும் 5 ஆவது இடங்களில் நீடிக்கின்றன.

 FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு

எனினும் தரவரிசையில் மேலும் கீழ்நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. வனுவாட்டு (28 இடம் முன்னேறி 157), வியட்னாம் (13 இடம் முன்னேறி 112), மொங்கோலியா (12 இடம் முன்னேறி 187), மியன்மார் (10 இடம் முன்னேறி 140) மற்றும் பிஜி (10 இடம் முன்னேறி 168) அணிகள் இரட்டை இலக்கங்களால் தரவரிசையில் முன்னேற்றம் கண்டன. பலஸ்தீன் ஒரு இடம் முன்னேறி 80 ஆவது இடத்தையும் லக்சம்பேர்க் ஒரு இடம் ஏற்றம் கண்டு 83 ஆவது இடத்தையும் பிடித்ததன் மூலம் தரவரிசையில் தனது சிறந்த தர நிலையை பதிவு செய்துகொண்டன.  

புதுப்பிக்கப்பட்ட புதிய தரவரிசையில் டென்மார்க் அணி எந்த மாற்றமும் இன்றி 12 ஆவது இடத்தில் நீடித்தபோதும் அந்த அணியே இந்த ஆண்டில் அதிக முன்னேற்றம் கண்ட அணியாக பதிவானது. ஏனைய சர்வதேச அணிகளை விடவும் ஆண்டு முழுவதிலும் மொத்தம் 456 தரநிலை புள்ளிகளை பெற்ற டென்மார்க் அணி கடந்த 14 மாதங்களாக தோல்வியுறாத அணியாகக் காணப்படுகிறது.

உலகக் கிண்ண தகுதிகாண் பிளே-ஓப் (Play-off) இரண்டாம் கட்ட போட்டியில் அயர்லாந்து குடியரசை 5-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டென்மார்க் அணி 2018 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.

ஏனைய மண்டலங்களில் 2017இல் FIFA தரவரிசையில் அதிக முன்னேற்றம் கண்ட நாடுகளாக பொலிவியா (49), ஜமைக்கா (54), லெபனான் (85), கெமரூன் (45) மற்றும் சோலமன் தீவுகள் (151) காணப்படுகின்றன. இதில் லெபனான் அணி 2017ஆம் ஆண்டில் மொத்தம் 62 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் 2017இல் தரவரிசையில் அதிக முன்னேற்றம் கண்ட அணியாக மசிடோனியா உள்ளது அந்த அணி ஒட்டுமொத்தம் 86 இடங்கள் முன்னேறி 76ஆவது இடத்தை பிடித்தது. இதன் இரண்டாவது இடத்தில் 65 இடங்கள் முன்னேறி 138ஆவது இடத்தை பிடித்த அன்டோரா அணி காணப்படுகிறது.  

 FIFA கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ரியல் மெட்ரிட் தகுதி

இந்த ஆண்டில் FIFA தரவரிசையில் முதல் 50 இடங்களை பிடித்த அணிகளில் ஐரோப்பாவின் 29 அணிகள் உள்ளன. எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆசியா 50 இடங்களில் இரண்டு இடங்களை இழந்து 2 இடங்களை பெற்றுள்ளது. இதன்படி ஈரான் 32ஆவது இடத்திலும் அவுஸ்திரேலியா 38ஆவது இடத்திலும் காணப்படுகிறன.

எனினும் இந்த ஆண்டில் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் ஆடாத இலங்கை கால்பந்து அணிக்கு 2017 மோசமான ஆண்டாக மாறியது. FIFA தரவரிசையில் 196ஆவது இடத்தில் இந்த ஆண்டை ஆரம்பித்த இலங்கை அணி கடந்த மாதம் தரவரிசை புதுப்பிக்கப்பட்டபோது 200ஆவது இடத்திற்கு சரிந்தது. இது தரவரிசையில் இலங்கை பெற்ற மோசமான தரநிலையாகும்.

இந்நிலையில் வியாழக்கிழமை (21) புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் இலங்கை எந்த மாற்றமும் இன்றி 200 ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன்படி ஆசிய மண்டலத்தில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு மாத்திரமே முன்னால் உள்ளது. பாக். தரவரிசையில் 201ஆவது இடத்தில் காணப்படுகிறது.