பிஜியிடம் தோல்வியடைந்த இலங்கை வலைப்பந்து அணி

365

வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் இன்று (17) பிஜி வலைப்பந்து அணியினை எதிர்கொண்ட இலங்கை வலைப்பந்து அணி 59-44 என்கிற புள்ளிகள் கணக்கில் போராடித் தோல்வியினை தழுவியுள்ளது. 

>>சமோவாவிடம் போராடி தோல்வியினை தழுவிய இலங்கை வலைப்பந்து அணி

இங்கிலாந்தில் இடம்பெறும் 15ஆவது வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் 16 நாடுகளின் அணிகள் பங்கெடுக்கின்றன. இந்த உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாம் சுற்றில் விளையாடும் சந்தர்ப்பத்தை இலங்கை வலைப்பந்து அணி ஏற்கனவே இழந்திருக்கின்றது.  

எனினும், உலகக் கிண்ணத் தொடரில் 13 தொடக்கம் 16 வரையிலான இடத்தை பெறும் அணிகளை தெரிவு செய்யும் சுற்றில் தமது இறுதி மோதலில் இலங்கை வலைப்பந்து அணி இன்று (17) ஆடியது.  

இந்த சுற்றில் கடந்த திங்கட்கிழமை (15) சிங்கப்பூர் அணியினை எதிர்கொண்ட இலங்கை வலைப்பந்து அணி 88-50 என்கிற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று, நேற்று (16) சமோவா வலைப்பந்து அணியிடம் 65-55 என்கிற புள்ளிகள் கணக்கில் தோல்வியினை தழுவியிருந்தது. 

இந்நிலையில் வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரினை ஆறுதல் வெற்றி ஒன்றுடன் நிறைவு செய்து கொள்ளும் நோக்குடன் இலங்கை வலைப்பந்து அணி, பிஜி வலைப்பந்து அணியினை எதிர்கொண்டிருந்தது. 

>>Photos: Sri Lanka vs Samoa | Group E | Netball World Cup 2019<<

லிவர்பூல் நகரின் எம்&எஸ் வங்கி அரங்கில் ஆரம்பமான போட்டியில் இலங்கை மகளிர் ஆரம்பம் முதலே உற்சாகத்துடன் ஆடினர். இதனால், போட்டியில் முதல் கால்பகுதியினை இலங்கை வலைப்பந்து அணி 11-10 என்கிற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிக் கொண்டது. 

தொடர்ந்து போட்டியின் இரண்டாம் கால்பகுதியில் இலங்கை வீராங்கனைகள் குறைவான வேகத்துடன் ஆடினர். இதன் காரணமாக போட்டியின் இரண்டாம் கால்பகுதி 17-9 என்கிற புள்ளிகள் கணக்கில் பிஜி அணியின் வசமாகியது. இதேநேரம், இரண்டாம் கால்பகுதியில் பெற்றுக் கொண்ட புள்ளிகளுடன் பிஜி வலைப்பந்து அணி போட்டியின் முதல் பாதியில் 27-20 என்கிற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றுக் கொண்டது.  

இதனை அடுத்து போட்டியின் மூன்றாம் கால்பகுதியில் பிஜி வலைப்பந்து அணி தமது ஆதிக்கத்தினை முன்னெடுத்துச் சென்று 20 புள்ளிகள் எடுத்தது. எனினும், இலங்கை அணி 8 புள்ளிகளை மட்டுமே பெற்றுக் கொண்டது. இதனால், மூன்றாம் கால்பகுதி நிறைவுக்கு வரும் போது பிஜி வலைப்பந்து அணி 47-28 என்கிற புள்ளிகள் கணக்கில் தொடர்ந்தும் முன்னிலையில் இருந்தது. 

தர்ஜினியின் சாதனைப் புள்ளிகளுடன் இலங்கைக்கு இலகு வெற்றி

வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், இன்று (15) சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை…

இதன் பின்னர் போட்டியின் இறுதிக் கால்பகுதியினை இலங்கை வலைப்பந்து அணி 16-12 என்கிற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியிருந்த போதிலும், போட்டியின் இரண்டாம், மூன்றாம் கால்பகுதிகளை பிஜி வலைப்பந்து அணியிடம் பறிகொடுத்த காரணத்தினால் பிஜி வீராங்கனைகள் 59-44 என்கிற புள்ளிகள் கணக்கில் போட்டியின் வெற்றியாளர்களாக மாறினர்.

போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக 39 முயற்சிகளில் 36 புள்ளிகள் பெற்ற இலங்கை வலைப்பந்து அணியின் தர்ஜினி சிவலிங்கம் தெரிவாகினார். அதேநேரம், பிஜி அணியில் உனைசி ராவுலினி 29 புள்ளிகளுடன் தனது தரப்பில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக மாறியிருந்தார். 

பிஜி அணியுடனான போட்டியில் தோல்வியினை தழுவிய காரணத்தினால் இந்த உலகக் கிண்ணத் தொடரில்  இலங்கை வலைப்பந்து அணிக்கு 15ஆவது அல்லது 16ஆவது இடத்தினை பெறும் நிலைமையே காணப்படுகின்றது. 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<