கிழக்கிலங்கையின் புகழ் பூத்த பாடசாலைகளாகக் காணப்படும் மட்டு நகரின் அடையாளச் சின்னங்களான மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மிக்கேல் கல்லூரி ஆகியவற்றிற்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமரான “பாடும் மீன்களின் சமர்“ 43 ஆவது தடவையாக இம்மாதம் (மே) 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் கோலாகலமாக  நடைபெறவுள்ளது.

மிக நீண்ட வரலாற்றினைக் கொண்டிருக்கும் மீன் பாடும் தேனாட்டின் இந்த இரு பாடாசாலை அணிகளுக்குமிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரானது, 1964ஆம் ஆண்டு முதற்தடவையாக இடம்பெற்றது. அதிலிருந்து 1994ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக வருடாவருடம் நடைபெற்றிருந்த இத்தொடர், அதனை அடுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களினாலும், நாட்டின் அப்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் 1998ஆம் ஆண்டு மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் மாத்திரமே நடைபெற்றிருந்தது.

கிழக்கு மாகாண எல்லே போட்டிகளில் அம்பாறை மாவட்டம் சம்பியன்

விளையாட்டில் ஆர்வம் காட்டும் ஓவ்வொரு வீர வீராங்கனையும்.. பெண்கள் பிரிவு உலகின்..

தொடர்ந்து நாட்டில் அமைதி நிலவ 2008ஆம் ஆண்டிலிருந்து இம்மாபெரும் சமரானது மீண்டும் ஆரம்பமாகி தொடர்ச்சியாக வருடாவருடம் (2013ஆம் ஆண்டு தவிர)  நடைபெற்று வருகின்றது.  

இந்த சமர் ஆரம்பித்த காலத்திலிருந்து இரண்டு நாட்கள் கொண்ட போட்டியாகவே நடைபெற்று வந்திருந்தது. எனினும் 2008ஆம் ஆண்டு தொடரிலிருந்து, 50 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே வருடாந்த சமர் நடைபெற்றது.

எனினும் போட்டியின் ஏற்பாட்டுக்குழு இம்முறைக்கான தொடரினை சம்பிரதாயமான முறையில் நடாத்த எத்தனித்த காரணத்தினால், இவ்வாண்டிற்கான பாடும் மீன்களின் தொடர் நாள் ஒன்றிற்கு 95 ஓவர்கள் வீசப்பட்டு, இரண்டு நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறவுள்ளது.

போட்டியின் நேரடி முடிவின் அடிப்படையிலையே போட்டியில் வெற்றி பெரும் அணி தெரிவு செய்யப்படவுள்ளது. இம்முறைக்கான போட்டி சமநிலை அடையும் எனில் கிண்ணம் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

இத்தொடரில் பங்கேற்கின்ற புனித மிக்கேல் கல்லூரியானது, கடந்த பருவகாலத்திற்கான டிவிஷன் – III (19  வயதுக்குட்பட்ட) பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடரில் காலிறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, தொடரின் நடப்புச் சம்பியனாகக் காணப்படும் மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியானது திறமையான இளம் வீரர்களுடன் கிண்ணத்திற்காக இவ்வருடம் களமிறங்குகின்றது.

‘Coach and Captains’
இரு கல்லூரிகளினதும் தலைவர், உப தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள்

இச் சமரில் புனித மிக்கேல் கல்லூரி அணியின் தலைவராக இம்முறை ரவிக்குமார் நிலூசாந் செயற்படவுள்ளதோடு, உப தலைவராக அற்புதலிங்கம் கிரிஷன் கடமையாற்றவுள்ளார். மிக்கேல் கல்லூரி அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பு குணரட்ணம் சஹனிடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று, மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியின் தலைவராக சந்திரசேகரம் தேவதிலக்ஷன் நியமிக்கப்பட்டுள்ளதோடு, உப தலைவராக சிவராஜா திருஷ்ஷன் செயற்படவுள்ளார். இக்கல்லூரி அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக அல்பிரட் கோகுலராஜ் கடமையாற்றுகின்றார்.

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி முடிவுகள்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நடப்பு வருடத்திற்கான..

இரு கல்லூரி அணிகளுக்கும் கட்டார் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பயிற்றுவிப்பாளருமான கப்லின் அன்வருடீன் மூலம் விஷேட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இரு கல்லூரிகளுக்கும் நட்பின் திறவு கோலாக காணப்படும் இந்த மாபெரும் சமரினை இம்முறை புனித மிக்கேல் கல்லூரி ஒழுங்கு செய்துள்ளதோடு, சமரிற்கு தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) பிரதான அனுசரணையாளராக காணப்படுகின்றது.

“பாடும் மீன்களின் சமர்“  தொடர்பான தகவல்களை  ThePapare.com இற்கு தந்து உதவியாக இருந்த குணரட்ணம் சஹன் இற்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.