சொந்த அரங்கில் மென்சஸ்டர் சிடியிடம் தோல்வியுற்ற செல்சி

77
Courtesy - Getty Images

ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் ஜாம்பாவன்களான மென்சஸ்டர் சிடி மற்றும் செல்சி கழகங்கள் மோதிய போட்டியில் மென்சஸ்டர் சிடி கழகம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எதிரணியான செல்சி அணியின் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், தனது அணியின் நட்சத்திர வீரரான ஸர்ஜீயோ அக்வேரோ விளையாடாத நிலையில் இவ்வெற்றியை மென்சஸ்டர் சிடி அணி தனதாக்கிக் கொண்டது.

நேற்றைய தினம் நடைபெற்ற (30) செல்சி மற்றும் மென்சஸ்டர் சிடி அணிகள் மோதிய போட்டியானது, செல்சி கழகத்தின் அரங்கமான ஸ்டம்பொர்ட் பிரிட்ஜ் (Stamford Bridge) அரங்கில் நடைபெற்றது. மென்சஸ்டர் சிடி அணியின் நட்சத்திர வீரரான ஸர்ஜீயோ அக்வேரோ (Sergio Aguero) பயணித்த கார் விபத்திற்குள்ளாகியதால் அவர் இப்போட்டியில் விளையாடவில்லை. ஸர்ஜீயோ அக்வேரோ மூலம் இதுவரை மென்சஸ்டர் சிடி அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் 6 கோல்கள் பெறப்பட்டுள்ளது. அத்துடன் முன்களத்தில் விளையாடும் இவரின் சிறப்பாட்டத்தின் மூலம் மென்சஸ்டர் சிடி அணி 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று, 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ளது.

செல்சி அணியின் அரங்கத்தில் போட்டி நடைபெற்றிருந்தாலும் போட்டியில் மென்சஸ்டர் சிடி அணியின் ஆதிக்கமே கூடுதலாக தென்பட்டது. போட்டியின் 3 ஆவது நிமிடத்தில் செல்சி கழகம் முதல் வாய்ப்பை பெற்றது. மத்தியகள வீரரான கன்டே (Kante) மூலம் வலது பக்கத்திலிருந்து மென்சஸ்டர் சிடி அணியின் பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை அல்வாரோ மொராடா தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு வெளியால் சென்றது.

அதனைத் தொடரந்து போட்டியின் 4 ஆவது நிமிடத்தில் மென்சஸ்டர் சிடி அணியின் மத்தியகள வீரர்களான டி பூரூனே (De Bruyne) மூலம் கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோலைப் பெறுவதற்கான முயற்சியும், மீண்டும் டேவிட் சில்வா (David Silva) மூலம் 11 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையிலிருந்து கோலைப் பெறுவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது.

போட்டியின் 25 ஆவது நிமிடத்தில் செல்சி அணி வீரர்களால் தொடர்ந்து முயற்சிகள் பெனால்டி எல்லையில் எடுக்கப்பட்டது. எனினும் அனைத்து முயற்சிகளையும் மென்சஸ்டர் சிடி அணியின் பின்கள வீரர்கள் தடுத்தனர்.

அதன் பின்னர் பந்தை தமது ஆதிக்கத்தில் முதல் பாதி நிறைவு பெறும் வரை கூடுதலான நேரம் வைத்திருந்த மென்சஸ்டர் சிடி அணியால் போட்டியின் 29 ஆவது நிமிடத்தில் ஸனே (Sane) மூலம் பெனால்டி எல்லையினுள் வழங்கப்பட்ட பந்தை பெற்ற சில்வா, எதிரணியின் பின்கள வீரரால் விடுக்கப்பட்ட சவாலையும் தாண்டி கோலை நோக்கி உதைந்தார். எனினும் கோல் காப்பாளர் சிறப்பாக செயற்பட்டு பந்தை தட்டி விட்டார்.

மீண்டும் சிறப்பாக செயற்பட்ட செல்சி அணியின் கோல் காப்பாளர், மென்சஸ்டர் சிடி அணிக்கு போட்டியின் முதல்பாதி நிறைவுறுவதற்கு 1 நிமிடத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட கோணர் வாய்ப்பின் போது, மென்சஸ்டர் சிடி அணி வீரரான பெர்னான்டீனியோ (Fernandinho) ஹெடர் மூலம் கோல் பெறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை சிறப்பாக பாய்ந்து தடுத்தார். அம்முயற்சியுடன் போட்டியின் முதல்பாதி எந்த வித கோலுமின்றி நிறைவுற்றது.

முதல் பாதி: மென்சஸ்டர் சிடி 0 – 0 செல்சி

இரண்டாம் பாதியில் கோல் பெறும் முயற்சி கூடுதலாக மென்சஸ்டர் சிடி அணியின் மூலமே எடுக்கப்பட்டது. எனினும் இரண்டாம் பாதியின் முதல் முயற்சியை செல்சி அணி எடுத்தது. போட்டியின் 61 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையின் வலது பக்கத்திலிருந்து ஹஸார்ட் (Hazard) உதைந்த பந்தை கோல் மென்சஸ்டர் சிடி அணியின் கோல் காப்பாளர் சிறப்பாக தடுத்தரர்.

அதனைத் தொடர்ந்து போட்டியின் 65 ஆவது நிமிடத்தில் மென்சஸ்டர் சிடி அணியின் வீரர் சில்வா மூலம் பெனால்டி எல்லையில் மேற்கொண்ட முயற்சி பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டது.

சில்வாவின் முயற்சி தடுக்கப்பட்டாலும் 2 நிமிடங்கள் கழிந்ததன் பின் டி பூரூனே தனது அணிக்கான கோலை பெற்றுக் கொடுத்தார். சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின் கப்ரீயல் ஜீஸஸ் (Gabriel Jesus) பெனால்டி எல்லையின் வலது பக்கத்திலிருந்து, பெனால்டி எல்லையின் மத்தியகளத்திற்கு வழங்கிய பந்தை டி பூரூனே கோலாக்கினார்.

அதன் பின்னரும் 80 ஆவது நிமிடத்தில் எந்த வித பின்கள வீரருமின்றி பெறப்பட்ட பந்தை கப்ரீயல் ஜீஸஸ் கோலை நோக்கி உதைந்தார். எனினும் சிறப்பாக செயற்பட்ட செல்சி அணியின் பின்கள வீரர் தனது தலையால் பந்தை தட்டி விட்டார்.

ஸாஹிரா பாடசாலை மைதானத்தில் கோல் மழை பொழிந்த லிவர்பூல்

புத்தளம் கால்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற “ட்ரெகன்ஸ் லீக்-2017” போட்டிகளின்…

10 நிமிடங்கள் கழிந்ததன் பின் செல்சி அணிக்கு போட்டியின் இறுதி வாய்ப்பு ப்ரீ கிக் மூலம் கிட்டியது. வலது பக்க கோணரிற்கு அருகிலிருந்து பெப்ரீகாஸ் (Febrigas) உள்ளனுப்பிய பந்தை கிரிஸ்டன்ஸன் (Christansan) தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் பந்து கோல் கம்பங்களைத் தாண்டிச் சென்றது. அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட 3 நிமிட மேலதிக நேரத்துடன் போட்டி நிறைவுற்றது.

மென்சஸ்டர் சிடி அணியின் டி பூரூனே மூலம் பெறப்பட்ட கோலினால் தனது சொந்த அரங்கில் மென்சஸ்டர் சிடி அணியிடம் செல்சி அணி தோல்வியைத் தழுவியது.

முழு நேரம்: மென்சஸ்டர் சிடி 1 – 0 செல்சி

மேலும் சில போட்டி முடிவுகள்

டொடன்ஹாம் 4 – 0 ஹடர்ஸ்பீய்ல்ட் (Huddersfield)

பர்னமவுத் (Bournemouth) 0 – 0 லயஸ்டர் சிடி

வெஸ்ட் பூரும் 2 – 2 வொர்ட் பூர்ட் (Watford)

வெஸ்ட்ஹாம் 1 – 0 ஸுவன்ஸி சிடி (Swansea City)

ஸ்டோக் சிடி 2 – 1 ஸவுதம்டன்

மென்சஸ்டர் யுனைடட் 4 – 0 கிரிஸ்டல் பலஸ்