ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சாதனை படைத்த மலிந்த

41
Malinda Pushpakumara

இலங்கை டெஸ்ட் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மலிந்த புஷ்பகுமார உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றுக்காக 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய 2ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.

16 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிந்த புஷ்பகுமார; CCC இலகு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட்..

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள முதல்தர கழகங்களுக்கிடையிலான மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது வாரத்துக்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடும் மலிந்த புஷ்பகுமார, செரசன்ஸ் அணிக்கெதிராக மொறட்டுவை சொய்ஸா மைதானத்தில் நேற்று (06) நிறைவுக்கு வந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 37 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, முதல்தரப் போட்டிகளில் இலங்கை சார்பாக ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இரண்டாவது வீரராகவும் இடம்பிடித்தார். அத்துடன், முதல்தரப் போட்டிகள் வரலாற்றில் 13ஆவது அதிசிறந்த பந்துவீசுப் பிரதியாகவும் இது பதிவாகியது.

1991 – 92 காலப்பகுதியில் களுத்துறை பி.சி.சி விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் எஸ்.எஸ்.சி அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான பிரமோத்ய விக்ரமசிங்க இன்னிங்ஸ் ஒன்றில் 41 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்த மைல்கல்லை எட்டிய முதலாவது இலங்கை வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

எனினும், தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழக அணி எதிரணிக்கு 349 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தபோதும் செரசென்ஸ் அணி இரண்டாவது இன்னங்ஸில் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அவ்வணிக்காக பந்துவீச்சில் மிரட்டியிருந்த மலிந்த புஷ்பகுமார. முதல் இன்னிங்ஸில் 73 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 37 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதோடு, அவர் இந்தப் போட்டியில் மொத்தமாக 16 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, முதல்தரப் போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் நிலைநாட்டினார்.

அதுமாத்திரமின்றி, இதுவரை 123 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள மலிந்த, தனது 12 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் 715 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி மற்றுமொரு மைல்கல்லையும் இப்போட்டியில் எட்டினார்.

முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை அணியின் முக்கிய துரும்புச் சீட்டாக இருந்து இலங்கைக்கு பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத்தின் ஓய்வின் பிறகு, அவருடைய இடத்தை நிரப்புவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரேயொரு வீரராக கருதப்படுகின்ற 31 வயதான மலிந்த புஷ்பகுமார, இதுவரை 4 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

இலங்கை A அணிக்காக கலக்கிய மொஹமட் சிராஸ்

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி…

அத்துடன், முதல்தரப் போட்டிகளில் 58 தடவைகள் 5 விக்கெட்டுக்களையும், 21 தடவைகள் 10 விக்கெட்டுக்களையும் அவர் கைப்பற்றியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இறுதியாக ஒரு இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய வீரராக பாகிஸ்தான் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சுல்பிகர் பாபர் இடம்பெற்றார். 2009 – 10 பருவகாலத்தில் குவைட் அசாம் போட்டித் தொடரில் முல்தான் அணிக்காக விளையாடியிருந்த அவர், இஸ்லாமாபாத் அணிக்கெதிரான போட்டியில் 143 ஒட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். எனினும், குறித்த போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இதேவேளை, டெஸ்ட் அரங்கில் இரண்டு வீரர்கள் மாத்திரம்தான் இன்னிங்ஸ் ஒன்றுக்காக 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர். 1956ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஜிம் லேக்கர் 56 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்களையும், அதனைத் தொடர்ந்து சுமார் 43 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும், சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே, 74 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<