டொட்டன்ஹமை வீழ்த்தி சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை சுவீகரித்த லிவர்பூல்

139
Liverpool FC

மொஹமட் சலாஹ்வின் ஆரம்ப கோல் மற்றும் டிவொக் ஒரிகியின் பிந்திய கோல்கள் மூலம் டொட்டன்ஹம் ஹொட்ஸ்புர் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி லிவர்பூல் கழகம் ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்தது.

இரு இங்கிலாந்து கழகங்களுக்கு இடையிலான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டின் வன்டா மெட்ரோபொலிடானோவில் அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கடந்த முறை இறுதிப் போட்டியில் ரியெல் மெட்ரிட் அணியிடம் தோல்வி அடைந்து கிண்ணத்தை பறிகொடுத்த லிவர்பூல் மற்றொரு முயற்சியாகவே இம்முறை களமிறங்கியதோடு டொட்டன்ஹம் ஐரோப்பிய கிண்ணத்தை வெல்லும் முதல் முயற்சியாக களமிறங்கியது.

ஐரோப்பிய லீக் சம்பினாக முடிசூடிய செல்சி

எனினும் போட்டி ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்திலேயே மூசா சிசிசோகோவின் கையில் பந்து பட்டதால் லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. மொஹமட் சலாஹ் அந்த வாய்ப்பைக் கொண்டு முதல் கோலை புகுத்தினார்.

கடந்த முறை சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் தோள்பட்டை காயத்தால் மைதானத்தை விட்டு வெளியேறிய சலாஹ்வுக்கு இது ஒரு மறக்க முடியாத கோலாக இருந்தது. சலாஹ்வின் இந்த கோலானது சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஒன்றில் பெறப்பட்ட இரண்டாவது மிக வேகமான கோலாக இருந்தது.

ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அடைந்த டொட்டன்ஹம் விட்டுக்கொடுக்காமல் தனது ஆட்டத்தை தொடர்ந்தது. குறிப்பாக அரையிறுதியில் ஹெட்ரிக் கோல் பெற்ற லூகாஸ் மௌரோ பதில் வீரராக வந்த பின் போட்டி வேகம் கண்டது. எனினும் கணுக்கால் காயத்திற்குப் பின் ஹரி கேன் தனது வழக்கமான ஆடத்திற்குத் திரும்பாதது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தது.    

முதல் பாதி: லிவர்பூல் 1 – 0 டொட்டன்ஹம் ஹொட்ஸ்புர்

மன்செஸ்டர் சிட்டியிடம் ஒரு புள்ளியால் ப்ரீமியர் லீக் கிண்ணத்தை இழந்த லிவர்பூல் இந்தப் போட்டியில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாதபோதும் பந்து அதிக நேரம் அந்த அணி வீரர்களின் கால்களிலேயே சுற்றியது.    

போட்டியின் கடைசி கட்டத்தில் டொட்டன்ஹம் வீரர்கள் பதில் கோல் போடுவதற்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக லூகாஸ் மௌரோ உதைத்த பந்து டொட்டன்ஹம் அணிக்கு பொன்னான வாய்ப்பாக இருந்தபோதும் லிவர்பூலின் பிரேஸில் கோல்காப்பளர் அலிசன் பெக்கர் அபாரமாக அதனைத் தடுத்தார்.    

இந்நிலையில் 87 ஆவது நிமிடத்தில் ஜெவெல் மெடிப்பின் கோனர் கிக்கை அடுத்து டிவொக் ஒரிகி பெனல்டி பெட்டியின் இடது பக்கம் இருந்து லிவர்பூல் அணிக்காக மற்றொரு கோலை புகுத்தி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

சற்று பரபரப்பு குறைந்து இருந்த இறுதிப் போட்டியானது சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி ஒன்றில் ஒற்றை அட்டை கூட காண்பிக்கப்படாத போட்டியாகவும் வரலாறு படைத்தது.

இந்த வெற்றியானது லிவர்பூல் அணி பெறும் ஆறாவது ஐரோப்பிய கிண்ணமாகும். கடைசியாக அந்த அணி 2005 ஆம் ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றிருந்தது.

முதல் பாதி: லிவர்பூல் 2 – 0 டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்

கோல் பெற்றவர்கள்

  • லிவர்பூல்  – மொஹமட் சலாஹ் 2′ (பெனால்டி), டிவொக் ஒரிகி 87′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<