யாழ்ப்பாண அணியை பந்துவீச்சில் மிரட்டிய எம்புல்தெனிய மற்றும் அஷைன்

National Super League Four Day Tournament 2022

165

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் யாழ்ப்பாணம் – கண்டி அணிகளுக்கு இடையிலான நெஷனல் சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (09) நிறைவுக்கு வந்தது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில், தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாண அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் பலம்சேர்த்த 22 வயது இளம் வீரரான நிஷான் மதுஷ்க, 124 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இம்முறை தேசிய சுபர் லீக்கில் அவரது மூன்றாவது அரைச்சதம் இதுவாகும். அதேபோன்று, பின்வரிசையில் களமிறங்கிய திலும் சுதீர 49 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.

கண்டி அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட லசித் எம்புல்தெனிய 100 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்த, அஷைன் டேனியல் 3 விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 217 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கண்டி அணி, இன்றைய மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ஓட்டங்களை எடுத்து காணப்படுகின்றது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் கசுன் விதுர 16 ஓட்டங்களையும், ஓஷத பெர்னாண்டோ 9 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

நாளை போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 444 (131.2) – ஓஷத பெர்னாண்டோ 109, கமிந்து மெண்டிஸ் 87, கசுன் விதுர 71, கமில் மிஷார 56, புலின தரங்க 43, நிரோஷன் டிக்வெல்ல 32, திலும் சுதீர 4/86, தனன்ஞய டி சில்வா 3/96, ஜெப்ரி வெண்டர்சே 2/97

யாழ்ப்பாண அணி – 227 (89.1) – நிஷான் மதுஷ்க 57, திலும் சுதீர 49*, தனன்ஞய டி சில்வா 30, லசித் எம்புல்தெனிய 4/100, அஷைன் டேனியல் 3/89, அசித்த பெர்னாண்டோ 2/25

கண்டி அணி – 52/1 (15) – கமில் மிஷார 26, கசுன் விதுர 16*, ஓஷத பெர்னாண்டோ 9*

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<