கடந்த சில காலமாக குட்டி சங்கக்கார என பல்வேறு ஊடகங்களில் இடம்பிடித்திருந்த சாருஜன் சன்முகனாதன் அண்மைக் காலமாக எந்த ஊடகங்களிலும் பேசப்படவில்லை. எனினும், அவர் அன்று காண்பித்த அதே திறமையையும், சிறப்பாட்டங்களையும் இன்றும் காண்பித்து வருகின்றார். இதன் காரணமாக அவர் குறித்த ஒரு தேடலை ThePapare.com மேற்கொண்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பு ssc சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது, மைதானத்திற்கு வெளியே, சங்கக்காரவை ஒத்த கவர் டிரைவ் மூலம் அற்புதமாக துடுப்பாடும் சாருஜனின் விளையாட்டு, போட்டியின் நேரடி ஒளிபரப்பை வழங்கிக்கொண்டிருந்த ஒரு கெமராவில் சிக்கியது.

பயிற்றுவிப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடரும் மட்டு நகர் ஜோன்சன் ஐடா

இதன்போது, அப்போட்டியை நேரடி வர்ணனை செய்துகொண்டிருந்த இலங்கை ரசிகர்களின் மனம் கவர்ந்த மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியை நேசித்த ஒருவருமான காலம் சென்ற டோனி கிரேக், சாருஜனின் அக்காட்சியை கண்டவுடனேயே ”குட்டி சங்கக்கார” என அவரை அழைத்தார். இதன்மூலமே அவர் முதல் முதலாக கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே சாருஜன் குட்டி சங்கா என்று பிரபலம் பெற்றார்.

Sharujan Shanmuganathan

யார் இந்த சாருஜன்?

கடந்த 2006ஆம் ஆண்டு பிறந்த சாருஜன், தனது 06 ஆவது வயதிலேயே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து விட்டார். வெறும் துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாது பந்து வீச்சு, களத்தடுப்பு மற்றும் சங்காவை போன்றே விக்கெட் காப்பாளராக பிரகாசிக்கும் திறமை என்பவற்றை தனக்குள்ளே இயல்பாகவே வைத்திருந்தமை அவர் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகளின் மூலம் வெளிக்காண்பிக்கப்பட்டன.

அந்த வகையில், 2013ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீ ஜெயவர்தனபுர கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற CCC கிரிக்கெட் கல்வியத்தின் இல்லப் போட்டிகளில், சனத் ஜெயசூரிய இல்லத்துக்காக விளையாடிய சண்முகநாதன் சாருஜன் பல்வேறான திறமைகளை வெளிப்படுத்தி 10 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறந்த பந்து வீச்சாளர், போட்டித் தொடரின் நாயகன் மற்றும் குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது என பல விருதுகளை கைப்பற்றியிருந்தார்.

பின்னர் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ccc கிரிக்கெட் கல்வியகத்தின் 16 வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் 10 வயதின் கீழ்ப்பட்ட சனத் ஜெயசூரிய அணியை தலைமையேற்ற சாருஜன், குறித்த அணி சம்பியன் பட்டம் வெல்லுவதற்கு தனது அணியை சிறந்த முறையில் வழிநடாத்தியிருந்தார். குறிப்பாக அவர் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றெடுத்தார்.

அதனைத் தொடர்ந்து,  2015ஆம் ஆண்டு 8ஆவது தடவையாகவும் நடைபெற்ற வருடாந்த இம்தியாஸ் அகமட் மற்றும் நெல்சன் மென்டிஸ் சாவால் கிண்ணப் போட்டித் தோடரில் 8 கனிஷ்ட அணிகள் பங்குபற்றிய 12 வயதுக்குபட்ட பிரிவில், மீண்டும் திறமைகளை வெளிப்படுத்திய அவர் போட்டித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

இத்தொடரில், சகல துறைகளிலும் பிரகாசித்த சாருஜன் தொடரில் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச் சதம் உள்ளடங்களாக மொத்தமாக 118 ஓட்டங்களை குவித்திருந்தார். அத்துடன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி தனது சகலதுறை சிறப்பாட்டத்தை நிரூபித்திருந்தார்.

Sarujan as a Bawler
பந்து வீச்சாளராக சாருஜன்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாருஜனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் புகைப்படப் பிடிப்பாளரான அவரது தந்தை நாதன் சண்முகநாதன் தன்னால் இயன்ற அளவில் செய்து வருகின்றார். அத்துடன், நாதன் சண்முகநாதனும் இலங்கை அணியின் தீவிர கிரிக்கெட் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாதன் சண்முகநாதன் தனது மகனைப் பற்றிக் கூறும்பொழுது, “சாருஜனுக்கு பயிற்சிகள் இன்றி ஒரு நாளும் இருக்க முடியாது. வீட்டிலும் கூட கயிற்றினால் தொங்கவிடப்பட்டுள்ள பந்தின் மூலம் பயிற்சிகளை மேற்கொள்வார். அவருடைய கடினமான பயிற்சிகள் மற்றும் கிரிக்கெட் மேலுள்ள அன்புமே  அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது.  ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றினை பார்ப்பதற்காக குழந்தையாக இருந்த சாருஜனை பயத்துடன் அழைத்துச் சென்றிருந்தேன். எனினும் சாருஜன் அழவில்லை. மிகுந்த விருப்பத்துடன் கிரிக்கெட் போட்டியை ரசித்தார். அதன் பின்னர், கடைக்குச் சென்றபோது துடுப்பாட்ட மட்டை ஒன்றினை வாங்கித் தருமாறு வேண்டினார். அதிலிருந்து அவருடைய கிரிக்கெட் பயணம் ஆரம்பமானது” என்று குறிப்பிட்டார்.

சாருஜனின் முன்னேற்றத்திற்குப் பங்காற்றிய பயிற்றுவிப்பாளர்கள்

இலங்கை அணியின் முதலாவது டெஸ்ட் அணித் தலைவர் பந்துல வர்ணபுர, சுழல்பந்து வீச்சாளர் லலித் களுபெரும, ரொஷான் மஹானாம, அசங்க குருசிங்க, குமார் தர்மசேன, ஹேமந்த தேவப்பிரிய, ஹஷான் திலக்கரத்ன, புபுது தசநாயக்க, குசல் ஜனித் பெரேரா என பல சர்வதேச  கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய நெல்சன் மென்டிசிடம் சாருஜன் பயிற்சி பெற்றமை, அவரது சிறந்த திறமைக்கு மற்றொரு காரணியாக இருந்திருக்கலாம்.

தேசிய மட்டத்தில் கிழக்கிற்கு இரட்டைத் தங்கம் பெற்ற முதலாவது வீரர் களுதாவளை ரிஷானன்

பல போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய சாருஜனின் வாழ்க்கை குறித்து நெல்சன் மென்டிசிடம் வினவியபோது,

ccc கிரிக்கெட் கல்வியக பணிப்பாளர் மற்றும் பிரபல கிரிக்கெட் பயிற்சியாளார் நெல்சன் மென்டிஸ்
ccc கிரிக்கெட் கல்வியக பணிப்பாளர் மற்றும் பிரபல கிரிக்கெட் பயிற்சியாளார் நெல்சன் மென்டிஸ்

”சாருஜன் 6 வயதாக இருக்கும்பொழுது அவரது தந்தையால் என்னிடம் அழைத்து வரப்பட்டார். கடந்த நான்கு வருடங்களாக என்னிடம் பயிற்சி பெற்று வருகின்றார். என்னிடம் வருவதுற்கு முன்னரே கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளடங்கலாக பலராலும் குட்டி சங்கா எனும் செல்லப் பெயரால் அறியப்பட்டிருந்தார். குமார் சங்கக்கார கூட சாருஜனுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

அவருடைய கவர் டிரைவ் துடுப்பாட்டம் தனிச்சிறப்பானது. அண்மையில்கூட ஆனந்த சஸ்த்ராலைய அணியுடனான போட்டியில் அவர் துடுப்பாடிய விதம், குமார் சங்கக்காரவை போன்றே அமைந்திருந்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 8 வயதாக இருந்த சாருஜனை 13 வயதுக்குட்டபட்ட பிரிவில் களமிறக்கினேன். அந்த போட்டியில் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அப்போதுதான், அவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு உகந்த நிலையில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்” என்று நெல்சன் மென்டிஸ் மேலும் தெரிவித்தார்.

சாருஜனின் துடுப்பாட்டத்தில் ஈர்க்கப்பட்ட பல நிறுவனங்கள் அவருக்கு அனுசரணை வழங்க முன்வந்த போதும், நெல்சன் மென்டிஸ்சின் அறிவுரைக்கு அமைய சாருஜனின் தந்தை அவற்றை நிராகரித்திருந்தார். மற்றைய சிறுவர்களைப் போன்றே எவ்விதமான கட்டுப்பாடுகளுமின்றி அவருடைய விருப்பத்தின்படி  விளையாட அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதனாலேயே இன்றுவரை சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றார் சாருஜன்.

கிரிக்கெட்டில் வடக்கு இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக வர வேண்டும் : எட்வார்ட் எடின்

புனித பெனடிக்ட் தலைமை பயிற்றுவிப்பாளர் சானக்க பெர்னாண்டோ
புனித பெனடிக்ட் தலைமை பயிற்றுவிப்பாளர் சானக்க பெர்னாண்டோ

புனித பெனடிக்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஷானக பெர்ணான்டோ சாருஜன் குறித்து கூறும் பொழுது, ”மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் இந்த கல்லூரியின் கனிஷ்ட அணியை பயிற்றுவிக்கும் பணியை ஆரம்பித்தேன். சாருஜன் பயிற்சிகளுக்கு வரும் பொழுது மிகவும் உற்சாகத்துடன் வருவார். இயல்பாகவே கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்துகின்றார். சங்கக்கார போன்றே துடுப்பாட்ட நுட்பங்களை பயன்படுத்தி ஆடுகின்றார். எதிர்காலத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரராக வரக்கூடிய தகுதிகள் அவரிடம் காணப்படுகின்றன. என்னுடைய நோக்கம், அந்த குறித்த இலக்கை அவர் அடைவதற்கு தேவையான வழிமுறைகளை அமைத்து தேசிய அணிக்கு ஒரு சிறந்த வீரரை உருவாக்கிக் கொடுப்பதே” என்று தெரிவித்தார்.

Sarujan as a Wicket-keeper
விக்கெட் காப்பாளராக சாருஜன்

அத்துடன், சாருஜனின் தந்தை எங்களுக்கு சாருஜனின் முதலாவது கிரிக்கெட் பயிற்சியாளர் சுஜீவ பிரியதர்ஷனவை அறிமுகம் செய்து வைத்தார். சாருஜனுக்கு பல வருடங்கள் பயிற்சி அளித்தவர் என்ற வகையில் அவரிடம் சாருஜனின் எதிர் காலம் குறித்து வினவினோம். அப்போது கருத்து தெரிவித்த அவர், “சாருவுக்கு மூன்றரை வயதாக இருந்த பொழுது அவரை நான் சந்தித்தேன். எனது நண்பர் ஒருவர் கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள ஒரு குழந்தை இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். பயிற்சிக்கு வந்த முதல் நாளில் நான் சொன்னவற்றை எல்லாம் மிகவும் ஆர்வத்துடன் செய்தார். அதன் பின்னர், சாருஜனுக்கு மிகப்பெரிய பயணம் ஓன்று இருப்பாதாக அவருடைய தந்தைக்கு தெரிவித்தேன்.

டி. எம். சுஜீவ பிரியதர்ஷன பயிற்றுவிப்பாளர் : முத்துவல் விளையாட்டு கழகம்
டி. எம். சுஜீவ பிரியதர்ஷன
பயிற்றுவிப்பாளர் : முத்துவல் விளையாட்டு கழகம்

அவரைத், தொடர்ந்து பயிற்சிகளுக்கு அனுப்புமாறும் வேண்டினேன். அதன் பின்னர் என்னுடைய விளையாட்டுக் கழக போட்டிகளுக்கு களமிறக்கினேன். கடந்த வாரம் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் தனது முதலாவது சதத்தை சாருஜன் பதிவு செய்து கொண்டார். எதிர்காலத்தில் தன்னுடைய திறமைகளை மேம்படுத்தி தேசிய அளவில் பிரகாசிப்பார் என்று நான் நம்புகின்றேன்” என அவர் தெரிவித்தார்.

தற்பொழுது புனித பெனடிக்ஸ் கல்லூரி,  முத்துவல் கிரிக்கெட் கழகம், ccc கிரிக்கெட் கல்வியக அணி என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்திவரும் சாருஜனின்  எதிர்கால திட்டம் குறித்தும் அவரிடம் வினவினோம்.

அதற்கு பதிலளித்த அவர், சாருஜன் முதலில் கல்லூரி மட்டத்தில் சிறந்த வீரராக வரவேண்டும். அதன் பின்னர் படிப்படியாக முன்சென்று தேசிய மட்டத்திலும் ஒரு சிறந்த வீரராக வருவதற்குத்தான் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

இறுதியாக இந்த கட்டுரையின் கதாநாயகனாக உள்ள சாருஜனிடம் அவரது கிரிக்கெட் ஆரம்பம் குறித்து நாம் வினிவியபோது, “சிறு வயதிலிருந்தே தனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக எனது அப்பா என்னை முதன் முதலாக முத்துவல் கிரிக்கெட் கழகத்தில் பயிற்சிகளுக்காக சேர்த்து விட்டார்” என்றார்.

ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள்ஒரு கண்ணோட்டம்

தேசிய அணியில் இடம் பெறுவதே எனது இலக்கு : சாருஜன்
தேசிய அணியில் இடம் பெறுவதே எனது இலக்கு : சாருஜன்

குமார் சங்கக்காரவின் பாணியில் ஏன் துடுப்பாட்டம் செய்கின்றீர்கள் என்ற கேள்விக்கு, சிறு வயதிலிருந்து குமார் சங்கக்காரவின் போட்டிகளை பார்ப்பேன். அவர் துடுப்பாடும் விதத்தை பார்ப்பேன். அத்துடன் அவரை எனக்கு அதிகம் பிடிக்கும். அவர் விளையாடும் ஒரு போட்டியை கூட பார்க்காமல் இருக்க மாட்டேன். எனவே நான் சங்கக்கார போலவே துடுப்பாடுகின்றேன் என்றார்.

விளையாட்டு உங்கள் படிப்பை பாதிக்காதா? என்ற கேள்விக்கு, “எனக்கு நண்பர்கள், பாடசாலை அசிரியர்கள எல்லோருமே படிப்பில் எனக்கு உதவி செய்கின்றார்கள். அதேவேளை, கிரிக்கெட்டிற்காகவும் அனைத்து தரப்பினரும் எனக்கு உதவி செய்கின்றார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ”எனது அணியில் நான் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்குகின்றேன். இதுரை விளையாடிய போட்டிகளில் பல தடவைகள் இறுதி வரை ஆட்டமிழக்காமல் எல்லா போட்டிகளிலும் சிறந்த ஓட்டங்களை பெற்றுள்ளேன். இறுதியாக நடைபெற்ற போட்டியில் ccc அணி சார்பாக ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்கள், இரண்டு பிடி எடுப்புக்கள் மற்றும் ஒரு ரன் அவுட் என்று திறமைகளை வெளிப்படுத்தியிருந்தேன். குறித்த போட்டியில் சிறந்த களத்தடுப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். ஒரு தடவை 18 பந்துகளுக்கு 38 ஓட்டங்களையும் விளாசியிருந்தேன்” என்று இறுதியாக அவர் தெரிவித்தார்.

கடின இலக்கை  நோக்கி பயணிக்கும் சாருஜனுக்கு கடவுளின் நல்லாசிகளுடன் எதிர் காலத்தில் சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்க ThePapare.com சார்பாக வாழ்த்துகின்றோம்.

மேலும் பல செய்திகளைப் படிக்க