பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

11
virat-kohli-mohammed-shami

நியூஸிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான், விராட் கோஹ்லி மற்றும் முஹம்மட் ஷமி ஆகிய மூன்று இந்திய வீரர்கள் ஒருநாள் அரங்கில் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நியூஸிலாந்து மண்ணில் வைத்து அந்த அணியுடன் 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

>> அதிக சூரிய வெளிச்சத்தால் தடைப்பட்ட நியூசிலாந்து இந்திய ஒருநாள் போட்டி

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (23) இரண்டு வருடங்களுக்கு முன்னர் சீரான வடிகான் வசதிகள் இன்மையால் ஐ.சி.சி இனால் தடை செய்யப்பட்டு, மீண்டும் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நேப்பியரில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இலகுவாக டக்வத் லூவிஸ் முறையில் 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றிருந்தது.

குறித்த போட்டியில் இந்திய அணியின் இடது கை துடுப்பாட்ட வீரரான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இந்த போட்டியில் தவான் 10 ஓட்டங்களை பெறும் போது தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 118 ஆவது இன்னிங்சில் 5000 ஓட்டங்களை கடந்தார்.  

இதன் மூலம் ஷிகர் தவான் வேகமாக 5000 ஓட்டங்களை கடந்த இந்திய வீரர் என்ற வரிசையில் இரண்டாமிடத்தில் இருந்த சௌரவ் கங்குலியை பின்தள்ளி தற்போது இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ரீதியில் ஷிகர் தவான் ஐந்தாமிடத்தை பிடித்துள்ளார். இவர் இந்த சாதனையை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமாகி எட்டு வருடங்கள் 95 நாட்களில் தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 114 இன்னிங்சுகளில் 5000 ஓட்டங்களை கடந்து விரைவாக கடந்த இந்தியர்கள் வரிசையில் முதலிடத்தையும், சர்வதேச ரீதியில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் 5000 ஓட்டங்களை விரைவாக கடந்த இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் உள்ள மெத்திவ் ஹெய்டன் (அவுஸ்திரேலியா), கிரேம் ஸ்மித் (தென்னாபிரிக்கா), மைக்கல் பேர்வன் (அவுஸ்திரேலியா), கௌதம் கம்பீர் (இந்தியா), கெரி கிரிஸ்டன் (தென்னாபிரிக்கா), கிரிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்), சயீட் அன்வர் (பாகிஸ்தான்) ஆகியோர் வரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அணித்தலைவர் பிரைன் லாராவுடன் சேர்ந்து 118 இன்னிசுகளில் 5000 ஓட்டங்களை கடந்த இடதுகை துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

5000 ஒருநாள் ஓட்டங்களை குறைந்த இன்னிசுகளில் கடந்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் 101 இன்னிசுகளில் கடந்த தென்னாபிரிக்க வீரர் ஹஷிம் அம்லா காணப்படுகின்றார்.

அத்துடன் இன்றைய போட்டியில் சாதனை பட்டியலில் இடம்பெற்ற அடுத்த இந்திய வீரராக இந்திய அணித்தவைர் விராட் கோஹ்லி இடம்பெற்றுள்ளார்.

இன்று (23) நடைபெற்ற போட்டியில் விராட் கோஹ்லி 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். இப்போட்டிக்கு முன்னராக ஒருநாள் அரங்கில் 10,385 ஓட்டங்களை விராட் கோஹ்லி பெற்றிருந்தார். இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி 20 ஓட்டங்களை கடந்த போது மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரேன் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

பிரேன் லாரா 299 ஒருநாள் போட்டிகளில் 289 இன்னிங்சுகளில் மொத்தமாக 10,405 ஓட்டங்களை குவித்திருந்தார். இவரின் குறித்த ஓட்டங்களை இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லி 212 இன்னிசுகளில் கடந்து ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் 10ஆவது இடத்திற்கு வந்துள்ளார்.

>> இலங்கை குழாத்தில் நுவன் பிரதீப்புக்கு பதில் விஷ்வ பெர்னாண்டோ

ஒருநாள் அரங்கில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் 18,426 ஓட்டங்கள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

இன்றைய போட்டியில் சாதனை படைத்த மூன்றாவது இந்திய வீரராக வேகப்பந்து வீச்சாளர் முஹம்மட் ஷமி காணப்படுகின்றார். அவர் முதல் இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

தனது 56ஆவது ஒருநாள் போட்டியில் இன்று (23) விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான முஹம்மட் ஷமி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். முதல் விக்கெட்டாக மார்டின் கப்டிலின் விக்கெட்டை வீழ்த்திய போது 100 ஒருநாள் விக்கெட்டுக்களை குறைந்த போட்டியில் கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளராக மாறியிருந்தார்.

இதற்கு முன்னர் இந்திய அணி சார்பில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய சாதனையை 59 போட்டிகளில் வீழ்த்திய இர்பான் பதான் வைத்திருந்தார். இதனையே முஹம்மட் ஷமி இன்று (23) முறியடித்துள்ளார்.

மேலும் முஹம்மட் ஷமி வேகமாக 100 ஒருநாள் விக்கெட்டுக்களை கைப்பற்றிய சர்வதேச வீரர்கள் வரிசையில் நியூஸிலாந்து வீரர் ட்ரென்ட் போல்டுடன் சேர்ந்து 6ஆவது இடத்தை தக்கவைத்துள்ளார். இவர் இந்த சாதனையை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமாகி 6 வருடங்கள் 17 நாட்களில் தன்வசப்படுத்தியுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<