டயலொக் ரக்பி லீக் தொடரின் 2ஆம் சுற்றுப் போட்டியில், விமானப்படை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ட்ரை மேல் ட்ரை வைத்து 73 – 13 என்ற புள்ளிகள் கணக்கில் கண்டி விளையாட்டுக் கழகம் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

கண்டி நித்தவெல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கண்டி அணி இவ்வருடத்திற்கான கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் எனில், கட்டாயம் இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது. முதலாம் சுற்றில் விமானப்படை அணியிடம் தோல்வியுற்றதன் மூலம் கண்டி அணி பெரும் ஏமாற்றத்தை அடைந்தது. எனவே இப்போட்டியில் தமது அபார ஆட்டத்தை கண்டி தரப்பு வெளிப்படுத்தும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

போட்டியின் ஆரம்பப் புள்ளியை விமானப்படை அணியே பெற்றுக்கொண்டது.  முதலாவது நிமிடத்தில் கண்டி அணி செய்த தவறினால், விமானப்படை அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றது. இதனை கம்பத்தின் நடுவே உதைத்து விமானப்படை அணிக்கு 3 புள்ளிகளை சரித் செனவிரத்ன பெற்றுக்கொடுத்தார். கண்டி அணி அடுத்த நிமிடமே புவனேக உடன்கமுவ மூலமாக ட்ரை வைத்து பதிலடி கொடுத்தது. திலின விஜேசிங்க வெற்றிகரமாக உதைத்தார். (விமானப்படை 03 – 07 கண்டி)

அதிலிருந்து போட்டியில் கண்டி அணியே அதிகம் ஆதிக்கம் செலுத்தியது. விமானப்படை அணியின் தடுப்பை இலகுவாக கடந்து சென்ற கண்டி அணி வீரர்கள், அடுத்தடுத்து பல ட்ரைகளை வைத்து அசத்தினர். கண்டி அணியின் தனுஷ்க ரஞ்சன் விமானப்படை வீரர்களை இலகுவாக கடந்து சென்று, இப்போட்டியில் தனது முதலாவதும், இந்த லீக்கில் தன்னுடைய 14ஆவதுமான ட்ரையை வைத்தார். திலின கடினமான உதையை இலகுவாக உதைத்தார். (விமானப்படை 03 – 14 கண்டி)

அதனைத் தொடர்ந்து நைஜல் ரத்வத்தவிடம் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட ரிச்சர்ட் தர்மபால மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார். எனினும் திலின இம்முறை உதையை தவறவிட்டார். (விமானப்படை 03 – 19 கண்டி)

புவனேக உடன்கமுவ விமானப்படை வீரர்களை கடந்து, கயான் ரத்நாயவிற்கு பந்தை ஓப் லோட் செய்ய, பந்தை பெற்றுக்கொண்ட ரத்நாயக்க ட்ரை வைத்தார். திலின இலகுவாக உதைத்தார். இந்த ட்ரையுடன் கண்டி அணி போனஸ் புள்ளிகளை பெற்றுக்கொண்டது.  (விமானப்படை 03 – 26 கண்டி)

விமானப்படையின் ப்ளை ஹாப் வீரர் கொடுத்த பந்து பரிமாற்றத்தை இண்டெர்ஸ்ப்டின் செய்து பெற்றுக்கொண்ட தனுஷ்க ரஞ்சன், 60 மீட்டர்கள் ஓடி சென்று கம்பங்களின் கீழ் ட்ரை வைத்தார். திலின உத்தியை தவறவிடவில்லை.  (விமானப்படை 03 – 33 கண்டி)

விஸ்வமித்ர ஜயசிங்க, அபாயகரமான முறையில் வீரரை தடுத்ததினால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.  தனுஷ்க ரஞ்சன் சார்பாக களம் இறங்கிய காஞ்சன ராமநாயக்க 40 மீட்டர்கள் ஓடி சென்று தனது முதல் ட்ரையை வைத்தார். திலின உதையை தவறவிடவில்லை.  (விமானப்படை 03 – 40 கண்டி)

முதல் பாதி: விமானப்படை விளையாட்டுக் கழகம் 03 – 40 கண்டி விளைாயாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியிலும் மீண்டும் தமது அதிரடியைத் தொடர்ந்தது கண்டி அணி. இம்முறை திலின, பாசில் மரிஜாவிடமிருந்து பந்தை பெற்றுக்கொண்டு ட்ரை வைத்து, உதையையும் அவரே வெற்றிகரமாக உதைத்தார்.  (விமானப்படை 03 – 47 கண்டி).  

ரிச்சர்ட் தர்மபால மீண்டும் ஒருமுறை கம்பத்தின் கீழே ட்ரை வைத்து அசத்தினார். திலின இவ்வுதையையும் உதைத்தார்.  (விமானப்படை 03 – 53 கண்டி)

அதன் பின்னர் விஸ்வ மித்ர ஜயசிங்க மற்றும் லசித் அத்தனகொடை ஆகியோர் அடுத்தடுத்து தொடர்ந்து இரு ட்ரைகளை வைத்தனர். இவர்கள் இருவரும் கம்பத்தின் கீழே ட்ரை வைத்ததனால், திலினவிற்கு பதிலாக களமிறங்கிய அர்ஷாத் ஜமால்தீன் இலகுவாக உதைத்தார்.  (விமானப்படை 03 – 67 கண்டி)

பின்னர், விமானப்படை அணி தினேஷ் வீரரத்ன ஊடாக நீண்ட நேரத்தின் பின்னர் ஒரு ட்ரையைப் பெற்றுக்கொண்டது. ரோலிங் மோல் மூலமாக இந்த ட்ரை வைக்கப்பட்டது. எனினும் இசுரு ஜயரத்ன உதையை தவறவிட்டார். (விமானப்படை 08 – 67 கண்டி)

காஞ்சன ராமநாயக்க மீண்டும் ஒரு முறை கண்டி அணிக்காக ட்ரை வைத்தார். எனினும் ஜமால்தீன் உதையை தவறவிட்டார். (விமானப்படை 08 – கண்டி 73)

விமானப்படை அணியானது இறுதியாக தினேஷ் வீரரத்ன ஊடாக ஆறுதல் ட்ரை ஒன்றை பெற்றுக்கொண்ட பொழுதும், ஜயரத்ன மீண்டும் ஒரு முறை உதையை தவறவிட்டார். (விமானப்படை 13 – கண்டி 73)

எனவே, போட்டி நிறைவில், கடந்த போட்டியின் தோல்விக்கு சிறந்த பதில் கொடுக்கும் வகையில் அபார வெற்றியைப் பெற்றது கண்டி விளையாட்டுக் கழகம்.

முழு நேரம்: விமானப்படை விளையாட்டுக் கழகம் 13 – 73 கண்டி விளைாயாட்டுக் கழகம்

ThePapare.com சிறந்த வீரர் – கயான் ரத்நாயக்க (கண்டி விளையாட்டுக் கழகம்)

புள்ளிகளைப் பெற்றவர்கள்

கண்டி விளையாட்டுக் கழகம்
ட்ரை – தனுஷ்க ரஞ்சன் (2T), காஞ்சன ராமநாயக்க (2T), ரிச்சர்ட் தர்மபால (2T), புவனேக உடன்கமுவ (1T), கயான் ரத்நாயக்க (1T), விஷ்வ மித்ரா ஜயசிங்க (1T), லிசித அத்தனகொட (1T), திலின விஜேசிங்க (1T)
கன்வேர்ஷன் – ஆர்ஷட் ஜமால்டீன் (2C), திலின விஜேசிங்க (7C)

விமானப்படை வியைாட்டுக் கழகம்
ட்ரை – தினேஷ் Weerarathne (2T)
பெனால்டி – சரித் செனவிரத்ன (1P)

போட்டியியை மீண்டும் பார்வையிட