ஆபாச வார்த்தை பிரயோகத்திற்காக ஜொஸ் பட்லர் மீது அபராதம்

133

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜொஸ் பட்லருக்கு ஐ.சி.சி இனால் போட்டி ஊதியத்தில் 15 சதவீத குறைந்தபட்ச தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர், ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இருதரப்பு சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. 

இங்கிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து வெளியேறும் ஜேம்ஸ் அண்டர்சன்

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது…..

முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், கேப்டவுணில் கடந்த செவ்வாய்க்கிழமை (07) நிறைவுக்குவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியின் போது இங்கிலாந்து அணி இறுதியாக களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் அவ்வணியின் விக்கெட் காப்பாளரான ஜொஸ் பட்லர் ஆபாச வார்த்தைகள் மூலம் தென்னாபிரிக்க வீரர் வேர்னன் பிளாண்டரை திட்டியிருந்தார். 

ஜொஸ் பட்லர், வேர்னன் பிளாண்டரை ஆபாச வார்த்தைகள் மூலம் திட்டியமை அங்கு விக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த மைக் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஐ.சி.சி இன் 2.3 ஆம் இலக்க ஒழுக்க விதிமுறை மீறலின் படி சர்வதேச போட்டியில் பயன்படுத்தக்கூடாத ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியமைக்காக‘  போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராத தொகையாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. 

ஜொஸ் பட்லர் மீதான குறித்த குற்றச்சாட்டானது போட்டியின் கள நடுவர்களான குமார் தர்மசேன, போல் றைபெல், மூன்றாம் நடுவர் கிறிஸ் கெபனி மற்றும் மேலதிக நடுவரான அலாஹூடீன் பலீகர் ஆகியோரினால் சுட்டிக்காட்டப்பட்டு, போட்டியின் மத்தியஸ்தரான அண்டி பைக்ரொப்ட் மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதமும், தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

ஜொஸ் பட்லர் குறித்த குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதன் காரணமாக எந்தவிதமான மேலதிக விசாரணைகளுக்கும் அவர் ஆஜராக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேல் குறிப்பிட்ட குற்றத்திற்காக வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனை, போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவீதமும், இரண்டு தகுதி இழப்பீட்டு புள்ளிகளுமாகும்.

அத்துடன் 24 மாத கால இடைவெளிக்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி இழப்பீட்டு புள்ளிகளை ஒரு வீரர் பெறுவாராயின் அவர் போட்டித்தடைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். சுற்றுலா இங்கிலாந்து தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (16) பேர்த் எலிசபத்தில் நடைபெறவுள்ளது.