தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் யாழ் கழக வீரர்கள் சாதனை

484

இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட கனிஷ்ட, இளையோர் மற்றும் சிரேஷ்ட தேசிய பளுதூக்கல் போட்டிகளில் யாழ். பளுதூக்கல் கழகத்தைச் சேர்ந்த வீரர்கள் 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

தேசிய மட்ட பளுதூக்களில் வேம்படி மகளிருக்கு இரண்டு பதக்கங்கள்

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் தேசிய மட்ட பளுதூக்கல் …

தேசிய பளுதூக்கல் போட்டிகள் வரலாற்றில் முதற்தடவையாக யாழ். பளுதூக்கல் கழகத்தைச் சேர்ந்த வீரர்கள் அதிகளவான பதக்கங்களை வென்ற அதேவேளை, ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவிலும் முதற்தடவையாக பதக்கங்களை வெற்றி கொண்டமை சிறப்பம்சமாகும்.

விளையாட்டுத்துறை அமைச்சின் டொரிங்டன் உள்ளக அரங்கில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியிலிருந்து 400 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இதில் யாழ். பளுதூக்கல் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை வென்று சாதனைகள் படைத்து வருகின்ற யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆஷிகா, இளையோர் பெண்களுக்கான 64 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குகொண்டு ஸ்னெச் முறையில் 75 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 103 கிலோ கிராம் எடையையும் தூக்கி (ஒட்டுமொத்தமாக 178 கிலோ கிராம்) தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த மொத்த எடையானது ஆஷிகாவுக்கு சிரேஷ்ட பிரிவில் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கும் போதுமானதாக இருந்தது. இதனால், பெண்கள் பிரிவில் அதி சிறந்த பளுதூக்கும் வீராங்கனைக்கான விருதையும் அவர் வென்றார்.

முன்னதாக இவர் கடந்த வருடம் நடைபெற்ற 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் மூன்று புதிய தேசிய சாதனைகளுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 59 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குகொண்ட வேம்படி உயர்தர கல்லூரி மாணவி பி. நிலோஜினி, ஸ்னெச் முறையில் 60 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 72 கிலோ கிராம் எடையையும் (ஒட்டுமொத்தமாக 132 கிலோ கிராம்) தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன், சிரேஷ்ட பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் இவர் தனதாக்கிக் கொண்டார்.

பெண்களுக்கான கனிஷ் பிரிவில் 71 கிலோ கிராம் எடைப் பிரிவுக்காக களமிறங்கிய கே. ரெஜினா, ஸ்னெச் முறையில் 52 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 69 கிலோ கிராம் எடையையும் தூக்கி (ஒட்டுமொத்தமாக 121 கிலோ கிராம்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அதேபோல சிரேஷ் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றார்.

2018இல் தேசிய, சர்வதேச மட்டத்தில் ஜொலித்த நம்மவர்கள்

2018ஆம் ஆண்டானது பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித்…

பெண்களுக்கான 87 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட ஜே. மேரி லக்சிகா, ஒட்டுமொத்தமாக 102 கிலோ கிராம் (ஸ்னெச் 45 கிலோ கிராம், க்ளீன் அண்ட் ஜேக் 57 கிலோ கிராம்) எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றதுடன், பெண்களுக்கான சிரேஷ் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

பாடசாலை மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் மைதான நிகழ்ச்சிகளில் கடந்த காலங்களில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்ற மேரி லக்ஷிகா, இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான 76 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட முல்லைத்தீவு பாண்டியன் குளம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஜி. நிரூஷா, மொத்தமாக 76 கிலோ கிராம் (ஸ்னெச் 33 கிலோ கிராம், க்ளீன் அண்ட் ஜேர்க் 55 கிலோ கிராம்) எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 45 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட அதே கல்லூரியைச் சேர்ந்த ரீ. தர்ஷிகா ஒட்டுமொத்தமாக 75 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் ஸ்னெச் முறையில் 33 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 42 கிலோ கிராம் எடையையும் தூக்கியிருந்தார்.

Photos: Felicitation of Tharjini Sivalingam by her village society

ThePapare.com | Ushanth Senthilselvan | 25/12/2018 Editing and re-using images…

இதேவேளை, இளையோர் பெண்களுக்கான 64 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குகொண்ட யாழ். இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜே. பஜீனா ஒட்டுமொத்தமாக 97 கிலோ கிராம் (ஸ்னெச் 42 கிலோ கிராம், க்ளீன் அண்ட் ஜேக் 55 கிலோ. கிராம்) எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதுஇவ்வாறிருக்க, ஆண்கள் பிரிவில் யாழ். பளுதூக்கல் கழகம் சார்பாக போட்டியிட்ட 2 வீரர்களும் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டனர்.

இளையோர் ஆண்களுக்கான 102 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டு ஸ்னெச் முறையில் 55 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 65 கிலோ கிராம் எடையையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 120 கிலோ கிராம் எடையைத் தூக்கிய மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரீ. திவானுஜன் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். 

அத்துடன், சிரேஷ்ட ஆண்களுக்கான 102 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட ஆஷிகாவின் சகோதரனான விஜயபாஸ்கர் விஜயசங்கர் ஒட்டுமொத்தமாக 250 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் ஸ்னெச் முறையில் 106 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 144 கிலோ கிராம் எடையையும் தூக்கினார். தேசிய மட்டப் போட்டிகளில் வடமாகாணம் சார்பாக சிரேஷ்ட பிரிவில் பதக்கமொன்றைப் பெற்றுக்கொண்ட முதல் வீரர் என்ற பெருமையையும் விஜயசங்கர் பெற்றுக்கொண்டார்.  

சிரேஷ்ட வீரர்களின் சிறப்பாட்டத்தினால் யாழ் சென். ஜோன்சிற்கு வெற்றி

சிங்கர் கிணத்திற்காக பிரிவு II இல் ஆடிவரும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி …

இதேவேளை, சிரேஷ் ஆண்களுக்கான 102இற்கும் மேற்பட்ட எடைப் பிரிவில் பங்குகொண்ட யாழ். மாவட்ட பளுதூக்கல் சங்கத்தைச் சேர்ந்த என். டிலக்ஸ்குமார் ஸ்னெச் முறையில் 90 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 120 கிலோ கிராம் எடையையும் தூக்கி (ஒட்டுமொத்தமாக 210 கிலோ கிராம்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அத்துடன், அண்மைக்காலமாக தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற பளுதூக்கல் போட்டிகளில் வடமாகாணத்துக்கு பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த ஒரு கழகமாக யாழ். பளுதூக்கல் விளையாட்டு கழகம் விளங்குகின்றது. சுமார் 25 மாணவர்கள் தற்போது அங்கு பயிற்சிகளை பெற்றுவருவதுடன், அவர்களுக்கான பயிற்சிகளை வடமாகாணத்தைச் சேர்ந்த நட்சத்திர பளுதூக்கல் வீரரும், தேசிய சம்பியனும் ஆஷிகாவின் தந்தையுமான விஜயபாஸ்கர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<