இப்ராஹிமோவிக் அபாரம்: லீக் கிண்ணத்தை வென்றது மென்சஸ்டர் யுனைட்டட்

661
Club Football Roundup

இவ்வாரம் இடம்பெற்ற லீக் கிண்ண, பிரீமியர் லீக், லா லீகா, சீரி ஏ மற்றும் லீக் 1 போட்டிகளின் விபரங்கள்

லீக் கிண்ணம்

மென்செஸ்டர் யுனைட்டட் எதிர் சௌதாம்ப்டன்

இங்கிலாந்தின் நொக் அவுட் தொடரான லீக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் சௌதாம்ப்டன் அணியை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய மென்செஸ்டர் யுனைட்டட் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

அபாரமாக திறமையை வெளிக்காட்டிய மென்செஸ்டர் அணியின் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் இரண்டு கோல்களை அடித்து தனது பல வருட கனவான சம்பியன் பட்டத்தினை நனவாக்கினார்.

19 ஆவது நிமிடத்தில் பிரீ கிக் (Free Kick) வாய்ப்பு ஒன்றின் மூலம் இப்ராஹிமோவிக் பெற்றுக் கொடுத்த அசத்தலான கோல் மற்றும் 38 ஆவது நிமிடத்தில் ஜெசி லிங்கார்ட் அடித்த கோலினை தொடர்ந்து மென்செஸ்டர் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

எனினும் இரண்டு பாதிகளிலும் ஒவ்வொரு கோல் வீதம் பெற்றுக் கொண்ட சௌதாம்ப்டன் அணி கோல் வித்தியாசத்தை சமநிலைப்படுத்தி போட்டியை விறுவிறுப்பாக்கியது. இரண்டு அணிகளும் வெற்றியை சுவீகரிக்க கடும் முயற்சியை மேற்கொண்ட போதிலும் இரண்டு அணிகளும் தமக்கு கிடைத்த சில வாய்ப்புக்களை வீணடித்தன.

குறிப்பாக சௌதாம்ப்டன் வீரர்கள் அதிரடியான தாக்குதல் ஆட்டம் காரணமாக அடுத்தடுத்து கோல் வாய்ப்புக்களை உருவாக்கி எதிரணியை நிலைகுலையைச் செய்தனர். எனினும் அவற்றை கோல்களாக மாற்ற அவ்வணி தவறியது.

எவ்வாறாயினும் சற்றும் எதிர்பாராதவாறு 87 ஆவது நிமிடத்தில் சக வீரர்களின் சிறப்பான நகர்வுகளின் பின்னர், இப்ராஹிமோவிக் தன்னை நோக்கி வந்த பந்தை லாவகமாக தலையால் முட்டி கோலாக மாற்றி தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.


லா லீகா

ரியல் மட்ரிட் எதிர் விலாரியல்

இரண்டாம் பாதியில் அபாரமான ஆட்டத்துடன் போட்டிக்குள் மறுபிரவேசம் செய்த ரியல் மட்ரிட் அணி விலாரியல் அணியை 3-2 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்து அசத்தியது.

முதல் பாதியில் இரண்டு அணிகளுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் இரண்டு அணிகளாலும் கோல்களை பெற முடியவில்லை. இரண்டாம் பாதியில் 50 ஆவது மற்றும் 57 ஆவது நிமிடங்களில் விலாரியல் அணியின் மனு ட்ரிகுவெரோஸ் மற்றும் செட்ரிக் பக்காம்பு ஆகியோர் கோல் போட, அவ்வணி 2-0 என முன்னிலை பெற்றது.

எவ்வாறாயினும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி விலாரியல் வீரர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கரெத் பேல், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அல்வேரோ மொராடா முறையே 64 ஆவது, 74 ஆவது மற்றும் 83 ஆவது நிமிடங்களில் கோல்களை பெற்று வெற்றிக்கு வித்திட்டனர்.

இதன் போது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெனால்டி கோல் தொடர்பிலும் சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது. வேறொரு வீரரின் உதை எதிர்பாராதவாறு பெனால்டி கட்டத்தினுள் வைத்து  விலாரியல் அணித்தலைவரின் கையினை உரசியதன் காரணமாகவே இப்பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இது தொடர்பில் அணித்தலைவர் புருனோ சொரியானோ மற்றும் பயிற்றுவிப்பாளர் பிரான் எஸ்க்ரிபா தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.


அட்லெடிகோ மட்ரிட் எதிர் பார்சிலோனா

பெரிஸ் செயின்ட் ஜேர்மன் அணியிடம் 4-0 என படுதோல்வியை சந்தித்திருந்த பார்சிலோனா அணி இப்போட்டியிலும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் ஒருவாறாக 2-1 என வெற்றியை பெற்றுக் கொண்டது.

ஆரம்பம் முதலே தன்னம்பிக்கையற்ற மோசமான விளையாட்டுப்பாணியை பார்சிலோனா வீரர்கள் வெளிக்காட்டியிருந்தனர். எனினும் 63ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் ரபின்ஹா கோல் ஒன்றினை பெற்றுக் கொடுத்து தனது அணியை முன்னிலைக்கு இட்டுச் சென்றார்.

ஆயினும் போட்டியின் எழுபதாவது நிமிடத்தில் அட்லெடிகோ மட்ரிட் அணியின் கோடின் சிறப்பாக கோல் ஒன்றினை அடித்து கோல் வித்தியாசத்தை சமப்படுத்தினார். இந்நிலையில் வெற்றி ஒன்றினை சுவீகரிக்க பார்சிலோனா அணி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டது.

மீண்டுமொருமுறை பார்சிலோனா அணியின் மீட்பாளராக செயற்பட்ட லயனல் மெஸ்ஸி, 86 ஆவது நிமிடத்தில் அபார கோல் ஒன்றின் மூலம் வெற்றியினை பெற்றுக் கொடுத்தார்.

இவ்விரண்டு போட்டிகளின் முடிவில் ரியல் மட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் தொடர்ந்தும் முறையே முதலாம், இரண்டாம் இடங்களில் உள்ளன. இதேவேளை அட்லெடிகோ மட்ரிட் நான்காம் இடத்திலும் விலாரியல் ஆறாம் இடத்திலும் காணப்படுகின்றன.


சீரி ஏ

ஏ.எஸ்.ரோமா எதிர் இன்டர் மிலான்

‘சீரி ஏ’ தொடரின் 26 ஆவது வாரத்திற்கான போட்டியொன்றில் ஏ.எஸ்.ரோமா மற்றும் இன்டர் மிலான் அணிகள் மோதிக் கொண்டன. மத்திய கள வீரர் ரட்ஜா நைங்கோலானின் இரண்டு கோல்களின் உதவியுடன் ஏ.எஸ்.ரோமா அணியானது 3-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றியை பெற்றுக் கொண்டது.

பெல்ஜிய தேசிய அணி வீரரான ரட்ஜா, முதல் பாதியில் பெனால்டி கட்டத்தின் அருகிலிருந்து கோல் ஒன்றினை பெற்றுக் கொடுத்ததுடன், 56ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து சிறப்பான ஓட்டத்தின் பின்னர் தனது இரண்டாவது கோலினை பதிவு செய்தார்.

இன்டர் மிலான் அணி போட்டியின் முதல் பாதியில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்திய போதிலும் அவ்வணிக்கு 81ஆவது நிமிடத்திலேயே முதல் கோலினை பெற முடிந்தது. இரண்டாவது கோல் ஒன்றினை பெற்று போட்டியை சமநிலையில் முடிக்க அவ்வணி முயற்சி செய்த போதிலும், இறுதி நிமிடங்களில் ஏ.எஸ்.ரோமாவின் டியேகோ பெரோட்டி பெனால்டி வாய்ப்பினை கோலாக மாற்றி தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இவ்வெற்றியின் மூலம் ஏ.எஸ்.ரோமா அணி ‘சீரி ஏ’ தரவரிசையில் இரண்டாம் இடத்தை தக்கவைத்து கொண்டதுடன், இன்டர் மிலான் அணியானது ஆறாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.


ஏ.சி.மிலான் எதிர் சசுவோலோ

இதேவேளை ஏ.சி.மிலான் மற்றும் சசுவோலோ அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மற்றுமொரு ‘சீரி ஏ’ போட்டியில், சர்ச்சைக்குரிய பெனால்டி கோலின் காரணமாக 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் ஏ.சி.மிலான் அணி வெற்றியை சுவீகரித்தது.

போட்டியின் 22ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி உதையினை கார்லோஸ் பாகா குறிதவறாது உதைத்த போதிலும், உதைத்த பின்னர் அவர் சறுக்கி விழுந்த போது மீண்டும் அவரது கால் பந்தினை உரசியது. இரு தடவைகள் பந்தினை உதைத்தார் என எதிரணி வீரர்கள் நடுவரிடம் வாதிட்ட போதிலும், நடுவர் கோல் செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தார்.

ஏ.சி.மிலானின் கோலிற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சசுவோலோ அணிக்கும் பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்த போதிலும், அவ்வணியின் டொமினிகோ பெரார்டி வாய்ப்பினை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இறுதி நிமிடங்களில் சசுவோலோ வீரர்கள் கோல் ஒன்றினை பெற்றுக் கொள்ள பலத்த முயற்சிகளை மேற்கொண்டனர். எவ்வாறாயினும் கோல் காப்பாளர் மற்றும் பின்கள தடுப்பு வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு தமது அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

இப்போட்டியின் முடிவில் ஏ.சி.மிலான் அணி புள்ளி அட்டவணையில் ஏழாம் இடத்திலும் சசுவோலோ அணி 13ஆம் இடத்திலும் காணப்படுகின்றன.


பிரீமியர் லீக்

டோட்டன்ஹம் எதிர் ஸ்டோக் சிட்டி

ஹெரி கேனின் அற்புத ஹெட்ரிக் கோல்களின் உதவியுடன் ஸ்டோக் சிட்டி அணியை துவம்சம் செய்த டோட்டன்ஹம் அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் 14ஆவது, 32ஆவது மற்றும் 37ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்த ஹெரி கேன் ஸ்டோக் சிட்டியை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். டோட்டன்ஹம் அணி சார்பில் டெலே அலி நான்காவது கோலினை பெற்றுக் கொடுத்தார்.

இந்த வெற்றியுடன் டோட்டன்ஹம் அணியானது மென்சஸ்டர் சிட்டி அணியை பின்தள்ளி இரண்டாமிடத்திற்கு முன்னேறியது. இதேவேளை ஸ்டோக் சிட்டி புள்ளி அட்டவணையில் தொடர்ந்தும் பத்தாம் இடத்தில் காணப்படுகின்றது.


லீக் 1

மார்செயில் எதிர் பெரிஸ் செயின்ட் ஜேர்மைன்

பிரான்சின் கழகங்களுக்கு இடையிலான லீக் 1 தொடரின் 27 ஆவது வார போட்டியொன்றில் மார்செயில் அணியை படுதோல்வியடையச் செய்த பெரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி தனது சம்பியன் கனவை தக்கவைத்துக் கொண்டது.

போட்டியின் ஆரம்பத்திலேயே மார்க்வின்ஹோஸ் மற்றும் எடின்சன் கவானி ஒவ்வொரு கோல்களை அடித்து பெரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணியை முன்னிலைக்கு இட்டுச் சென்றனர்.

இரண்டாம் பாதியில் மார்செயில் வீரர்களின் மோசமான தடுப்பாட்டம் காரணமாக, எதிரணியின் லூகாஸ் மவ்ரா மற்றும் ஜூலியன் ட்ரக்ஸ்லர் மேலும் இரண்டு கோல்களை அடித்தனர்.

போட்டியின் இறுதி நிமிடங்களில் ப்ளேஸ் மடுயிடி கோல் வித்தியாசத்தை ஐந்தாக அதிகரித்தார். இறுதியாக மார்செயில் அணியின் ரொட் பென்னி ஆறுதல் கோல் ஒன்றினை பெற, போட்டி 5-1 என நிறைவடைந்தது.