1996ம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதியில் நடந்தது என்ன?

444
Espncricinfo

இலங்கை கிரிக்கெட் அணியையும், இலங்கையையும் உச்சத்திற்கு கொண்டு சென்ற ஆண்டு 1996ம் ஆண்டு. எந்தவொரு கிரிக்கெட் வல்லுனர்களாலும் கணிக்க முடியாத நேரத்தில் திடீரென எழுச்சிப்பெற்ற இலங்கை அணி, பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

2015 உலகக் கிண்ண ஞாபகத்தை மீட்டெடுக்கும் சங்காவின் துடுப்பாட்ட சாதனை

குமார் சங்கக்கார, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ……

இந்த உலகக் கிண்ண வெற்றியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி தங்களுக்கு என ஒரு தனி இடத்தினை பிடித்துக்கொண்டது. எனினும், குறித்த உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி அதிஷ்டவசமாக முன்னேறியது என்ற கருத்து பரவலாகியிருந்தது. குறிப்பாக அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இலங்கை வர மறுத்ததன் காரணமாக குறித்த இரண்டு போட்டிகளின் வெற்றிகளும் இலங்கை அணிக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் இலங்கை அணி காலிறுதிக்கான தகுதியை பெற்றிருந்த போதும், அங்கிருந்து இலங்கை அணி பெற்ற ஒவ்வொரு வெற்றிகளும் அதிஷ்டத்தால் அல்ல. அணியின் திறமையினால் என்பதை வீரர்கள் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டினர்.  குறிப்பாக காலிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், அரையிறுதியில் இந்திய அணியையும், இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியுமே இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

இவ்வாறு, இலங்கை கிண்ணத்தை கைப்பற்றியிருந்த போதும், குறித்த ஆண்டு உலகக் கிண்ண தொடரில் இடம்பெற்ற சில சம்பவங்கள் அடிக்கடி கடந்து போன ஞாபகங்களை மீண்டும் திரட்டி விடுகின்றன. அப்படி அடிக்கடி ஞாபகத்தை தட்டியெழுப்பும் ஒரு சம்பவம் தான், 1996ம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி.

கொல்கத்தா 13 மார்ச் 1996 – இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி ஆரம்பமாகிறது. இரசிகர்கள் கூட்டம் மைதானம் முழுதும் நிரம்பி வலிந்தது. இந்திய அணி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு இந்திய இரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் இருப்பதை அவதானிக்க முடிந்தது. மைதானம் முழுவதும் எழுந்த உற்சாக கோஷங்கள் வானை பிளந்தது.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய……

இப்படி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பித்த அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் மொஹமட் அசாரூதீன் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். ஆரம்பத்தில் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த மைதானத்தில் ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது என்ற விவாதம் இன்றும் சிலரிடையே தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.

எனினும், இந்திய அணியின் அந்த முடிவுக்கு ஏற்ப, குறித்த உலகக் கிண்ணத்தில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் ஆரம்ப ஜோடிகளான சனத் ஜயசூரிய மற்றும் ரொமேஷ் கலுவிதாரன ஆகியோர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அசங்க குருசிங்கவும் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், மத்தியவரிசை துடுப்பாட்டத்தை அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹனாம, அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றும் ஹஷான் திலகரட்ன ஆகியோர் கட்டியெழுப்பினர். அரவிந்த டி சில்வா அதிரடியா 66 ஓட்டங்களை பெற, ரொஷான் மஹனாம நிதானமாக 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருக்க, அர்ஜுன மற்றும் ஹஷான் திலகரட்ன ஆகியோரின் பங்களிப்பு இலங்கை அணிக்கு 251 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது. பந்து வீச்சில் ஜவகல் ஸ்ரீநாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

Espncricinfo

ஆரம்பம் சறுக்கியிருந்த போதும், மத்தியவரிசையின் பலத்தால் இலங்கை அணி, இந்திய அணிக்கு சவாலான வெற்றியிலக்கினையே நிர்ணயித்திருந்தது. குறித்த இலக்கினை கட்டுப்படுத்த முடியும் என நம்பிய இலங்கை அணியின் பிரதான ஆயுதம் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள். எனினும், ஆரம்பத்தில் பந்து வீசிய சமிந்த வாஸ் முதல் விக்கெட்டினை வீழ்த்தி நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தினார்.

ஆனாலும், களத்தில் நின்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் சஞ்சை மன்ஜேக்கர் இலங்கை அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இவர்களின் இணைப்பாட்டம் இந்திய இரசிகர்கள் மத்தியிலான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. ஓட்டங்கள் குவிக்கப்பட இந்திய அணி இரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர்.

ஆனால், இலங்கை அணி தங்களுடைய திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த அழைக்கப்பட்டனர். முதன் முதலாக 65 ஓட்டங்களை பெற்றிருந்த இந்திய அணியின் துறுப்புச் சீட்டான சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை, சனத் ஜயசூரிய கைப்பற்றி பந்து வீச்சில் தனது பங்களிப்பை வழங்கினார்.

இப்போது அழுத்தம் இந்திய அணி பக்கம் திரும்பியது. 98 ஓட்டங்களுக்கு இரண்டாவது விக்கெட் வீழ்த்தப்பட 99 ஓட்டங்களுக்கு மூன்றாவது விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது. அணித் தலைவர் மொஹமட் அஷாரூதீன், குமார் தர்மசேனவின் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அணித்தலைவரின் ஆட்டமிழப்புக்கு பின்னர், நிதானமாக துடுப்பெடுத்தாடிய சஞ்சை மன்ஜேக்கரும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வறை திரும்ப ஆரம்பித்தனர். ஒவ்வொரு வீரரின் ஆட்டமிழப்பை அடுத்தும் இந்திய அணியின் இரசிகர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டினை இழந்து 98 ஓட்டங்களுடன் இருந்த இந்திய அணி, 120 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றியடைய முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. தங்களது அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத இரசிகர்கள் மைதானத்துக்குள் போத்தல்களையும், தங்களிடம் இருந்த பொருட்களையும் எறியத் தொடங்கினர். மைதானம் குழப்ப நிலைக்கு ஆளானது. போட்டி முடங்கிய நிலையில், வீரர்களுக்கு பொலிஸாரால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

உள்ளூரில் பிரகாசித்த இவர்களுக்கு உலகக் கிண்ண வாய்ப்பு கிடைக்குமா?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2018/2019…….

துடுப்பாட்ட வீரர் வினோட் கம்ளி களத்தில் இருக்க, அவருடன் இணைந்து துடுப்பெடுத்தாடுவதற்கு அனில் கும்ளே களமிறங்கும் போதே முதல் போத்தல் மைதானத்துக்குள் எறியப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து போத்தல்கள் மைதானத்துக்குள் எறியப்பட்டன. நூற்றுக்கணக்கான பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

பொலிஸாரின் வருகையின் பின்னர் குழப்பநிலை கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டாலும், அவர்களால் முழுமையாக மைதானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பார்வையாளர் அரங்கிலிருந்த இருக்கைகளுக்கு தீ வைக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக போத்தல்களும் மைதானத்தை நோக்கி வீசப்பட்டன. வீரர்கள் மைதானத்தில் இருந்த நிலையில், போட்டி மத்தியஸ்தர் கிளைவ் லொயிட் இலங்கை அணிக்கு வெற்றியை வழங்கினார். பின்னர், இரண்டு அணிகளும் வெளியேற, இந்திய அணியின் வீரர் வினோத் கம்ளி கண்ணீருடன் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

Espncricinfo

வீரர்கள் வெளியேறிய பின்னரும் இரசிகர்களின் ஆக்ரோஷத்தை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய இரசிகர்கள் அணித் தலைவர் மொஹமட் அஷாரூதீன் மற்றும் வீரர்களை கடுமையாக விமர்சித்ததுடன், அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டனர்.

எவ்வாறாயினும், தங்களது அணி விளையாடிய விதத்தினை வைத்து இந்திய இரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை காட்டியிருந்த போதும், இலங்கை அணி மீது அவர்களுக்கு எந்தவித கோபதாபங்களோ இல்லை என்பதை இரசிகர் ஒருவர் வெளிக்காட்டியிருந்தார்.

மைதானத்தில் இந்திய இரசிகர் ஒருவர் வைத்திருந்த பதாதையில் “Congratulation Sri Lanka… We are sorry” “இலங்கை அணிக்கு வாழ்த்துகள்… எங்களை மண்ணித்துவிடுங்கள்“ என பதிவிடப்பட்டிருந்தது.

Espncricinfo

இப்படி அரையிறுதிப் போட்டியில் மறக்க முடியாத சம்பவங்களுடன் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய இலங்கை அணி, தங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதலாவது உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்திருந்தது. உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கைக்கு அரையிறுதி ஞாபகங்கள் இன்னும் மேலெழுந்துக்கொண்டே இருக்கின்றன…

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<