தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்றிருந்த ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மந்த கதியில் பந்துவீசியதற்காக அபாராதம் விதிக்கப்பட்டிருக்கின்றது.
>> சாதனைப் பதிவுகளுடன் இலங்கையை வீழ்த்திய தென்னாபிரிக்கா
சனிக்கிழமை (07) இலங்கை – தென்னாபிரிக்கா அணிகள் மோதிய உலகக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டி இடம்பெற்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்ததோடு பல சாதனைகளையும் பதிவு செய்திருந்தது.
எனினும் இந்தப் போட்டியில் தென்னாபிரிக்காவுடன் மோசமான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்த இலங்கை அணி தமக்கு பந்துவீச வழங்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசத் தவறியிருந்ததோடு குறிப்பிட்ட நேரத்திற்குள் 02 ஓவர்களை குறைவாக வீசியதாக போட்டி மத்தியஸ்தரான ஜவாகல் சிறிநாத் இலங்கை வீரர்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
எனவே இந்த குற்றச்சாட்டினை தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கைத் தரப்பு ஏற்றிருப்பதோடு, போட்டிக் கட்டணத்தில் 10% அபாராதமாகவும் செலுத்த ஒப்புக்கொண்டிருக்கின்றது.
>> உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியின் சாதனைத் துளிகள்
இதேநேரம் தசுன் ஷானக்க தலைமையிலான தரப்பு குற்றத்தினை ஒப்புக் கொண்ட காரணத்தினால் குற்றங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெறாது எனக் கூறப்பட்டிருக்கின்றது.
இலங்கை அணி உலகக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளதோடு குறிப்பிட்ட போட்டி செவ்வாய்க்கிழமை (10) ஹைதராபாத் நகரில் இடம்பெறவிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<