ஆசியாவில் ஆறாவது இடத்துடன், பதக்க வாய்ப்பை தவறவிட்ட மெத்யூ

136

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தைப் பெற்றுக்கொடுக்கின்ற போட்டியாக எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரர் மெத்யூ அபேசிங்க, இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் ஆறாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

ஒரு வெற்றியுடன் ஆசிய விளையாட்டு விழாவை முடிக்கும் இலங்கை ஆடவர் கபடி அணி

தற்பொழுது இந்தோனேஷியாவின்…

எனினும், ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் நீச்சல் போட்டிகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இலங்கை வீரராக வரலாற்றில் இடம்பிடித்த மெத்யூ அபேசிங்க, ஆசியாவில் ஆறாவது அதிசிறந்த நீச்சல் வீரராகவும் புதிய மைல்கல்லை எட்டினார்.

இந்த நிலையில், போட்டியின் பிறகு மெத்யூ அபேசிங்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், உண்மையில் தங்கப் பதக்கத்தை வென்றதைப் போல உணர்கிறேன். ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் நீச்சல் போட்டிகளில் இறுதிப் போட்டியொன்றுக்குத் தெரிவாகிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டேன். இது இலங்கையின் நீச்சல் விளையாட்டில் மிகப் பெரிய வெற்றி என்று சொல்லலாம். அதுமாத்திரமின்றி, ஆசியாவில் ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 10 வருடங்களாக எனது தந்தையிடம் பயிற்சிகளைப் பெற்றுவருகின்றேன். அவருடைய வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள்தான் என்னை இந்த இடத்துக் கொண்டு வந்தது. இதன் பிரதிபலனாக 2016 றியோ ஒலிம்பிக்கில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனவே இந்தப் போட்டியில் பெற்றுக்கொண்ட அனுபவத்தை 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பயன்படுத்தி இலங்கைக்கு நிச்சயம் பதக்கமொன்றைப் பெற்றுக் கொடுப்பேன்” என தெரிவித்தார்.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் நடைபெற்று வருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழா ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.  

இதில் நீச்சல், டய்க்வொண்டோ, கபடி, கடற்கரை கரப்பந்தாட்டம், எல்லே, வில்வித்தை, பெட்மின்டண், ஸ்குவாஷ், ஆகிய போட்டிகளில் இன்றைய தினம் இலங்கை வீரர்கள் பங்கேற்றியிருந்தனர்.

மெத்யூ அபேசிங்கவின் முதல் சுற்று வெற்றி

மெத்யூ அபேசிங்கவின் முதல் சுற்று வெற்றியைத் தொடர்ந்து, அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் இறுதிப் போட்டி இன்று மாலை ஆரம்பமாகியது.

6ஆவது வரிசையில் போட்டியிட்ட மெத்யூ, முதல் 50 மீற்றர் தூரத்தை 25.87 செக்கன்களில் நீந்தி முடித்தார். தொடர்ந்து இறுதி 50 மீற்றரை வேகமாக நீந்திய மெத்யூவிற்கு ஜப்பான், சீனா, ஜோர்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பலத்த போட்டியைக் கொடுத்திருந்தனர்.

எனினும், தனது முயற்சியை கைவிடாது தொடர்ந்து முன்னெடுத்த மெத்யூ, போட்டியை 49.28 செக்கன்களில் நிறைவுசெய்து ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற மெத்யூ அபேசிங்க,  போட்டித் தூரத்தை 49.11 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய இலங்கை சாதனை படைத்திருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளுக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

போட்டிகளின் முதல் நாளான கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட மெத்யூ அபேசிங்க, 1:50:97 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதன்பிறகு 21ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சல் தகுதிகாண் சுற்றில் போட்டியிட்ட மெத்யூ அபேசிங்க, 22.88 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனையுடன் 5ஆவது இடத்தைப் பிடித்தார்.

எனவே, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் 200 மற்றும் 50 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டிகளில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போன மெத்யூ அ1பேசிங்விற்கு 100 மீற்றர் சாதாரண நீச்சலில் பதக்கமொன்றை பெற்றுக்கொள்ள முடியாது போனது. எனினும், ஆறாவது இடத்தைப் பெற்று இலங்கையின் நாமத்தை ஆசிய அரங்கில் ஜொலிக்கச் செய்த முதல் நீச்சல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், குறித்த போட்டியில் ஜப்பான் வீரர்களான சிவுரா சினிரி (48.71 செக்.) மற்றும் நகமுரா கட்சுமி (48.72 செக்.) ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வெற்றிகொள்ள, சீனாவின் யூ ஹெக்சின் (48.88 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<