இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹஷான் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தும் முகமாகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குசல் பெரேராவின் இரண்டாவது அரைச்சதத்துடன் முடிவடைந்த பயிற்சிப் போட்டி
இதுவரை காலமும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய ரோய் டயஸின் ஒப்பந்தக் காலம், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுடன் நிறைவுக்கு வந்த நிலையில், அடுத்த உலகக் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு ஹஷான் திலகரட்னவுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
51 வயதாகும் ஹஷான் திலகரட்ன, ஐ.சி.சி இன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரிவு பயிற்றுவிப்பாளர் பாடநெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் உள்ள வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான விஷேட துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக 2016 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்தார்.
எனினும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட கிரஹம் போர்ட் கடந்த வருடம் அப்பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹஷான் நியமிக்கப்பட்டார்.
இதில், கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் தற்காலிக துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்த ஹஷான், பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற ஒற்றை டி-20 போட்டியில் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டார்.
அண்மையில் நிறைவுற்ற மாகாண அணிகளுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதல் தரப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்றிருந்த காலி அணியின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார். அத்துடன் இந்த வாரம் நடைபெறவுள்ள மாகாண அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டியின் இறுதிப் போட்டிக்கும் அவ்வணி தகுதிபெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஆசிய கிண்ண மகளிர் டி-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
அத்துடன், 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் அங்கத்துவராகவும் விளையாடியுள்ள அவர், 83 டெஸ்ட், 200 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியைப் பிரிதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
அதேநேரம், தென்னாபிரிக்க அணிக்கெதிராக சதம் குவித்த முதல் இலங்கை வீரராக வரலாற்றில் இடம்பெற்ற அவர், 2004 ஆம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.
இதேவேளை, கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கும், கௌரவத்துக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்கள் அங்கம் வகிக்கின்ற மெர்லிபேன் கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும் ஆவார்.
இதன்படி, எதிர்வருகின்ற காலங்களில் ஹஷான் திலகரட்னவின் பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி முக்கிய போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளது. அதிலும் குறிப்பாக, இம்மாத இறுதியில் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















