றக்பியை கைவிட்டு கிக் பொக்சிங்கில் உலக சம்பியனாகிய அர்ஷான்

10

எதிர் தரப்புவாதிகள் இருவர், ஒருவரையொருவர் தமது உடற் திறமையை முழுமையாகப் பயன்படுத்தி விளையாடக் கூடிய கிக் பொக்சிங் எனப்படுகின்ற தற்காப்பு கலையில் வெற்றிபெறும் வீரர் யார் என்பதை எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தாலும், வீரர்களுக்கு அதில் வெற்றிபெறுவது இலகுவான விடயமல்ல. போட்டியின் போது ஆளுமை, பலம், திடகாத்திரம், ஒருமுகமான எண்ணம் ஆகியவற்றை வெளிக்கொண்டுவரும் போதுதான் உண்மையான வெற்றியாளர் யார் என்பதை இனங்கண்டு கொள்ள முடியும்.

அன்று கார் மெக்கானிக்; இன்று சாதனை வீரராக மாறிய மலையகத்தின் சண்முகேஸ்வரன்

மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் …..

இதுஇவ்வாறிருக்க, இங்கிலாந்தின் வூர்ஸ்டர்ஷியர் மாநிலத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த உலக தற்காப்புக் கலை போட்டியில் கண்டி, கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த அர்ஷான் உவைஸ் முதற்தடவையாக சம்பியன் பட்டம் வென்றார்.

உலக ஐக்கிய தற்காப்புக் கலை (வூமா) சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் கே-1 எனப்படும் கிக் பொக்சிங் பிரிவில் அர்ஷான் உவைஸ் தங்கப் பதக்கம் வென்றார்.

கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 19 வயதுக்குட்பட்ட தேசிய றக்பி அணியிலும், இலங்கையின் பிரபலமான கண்டி றக்பி கழகத்திலும் விளையாடியவராவார். எனினும், றக்பி போட்டிகளின் போது தொடர் உபாதைகளுக்கு முகங்கொடுத்து வந்த அர்ஷான், அதன்பிறகு றக்பி விளையாட்டை கைவிட்டு கிக் கொக்சிங் விளையாட்டைத் தெரிவு செய்து மிகவும் குறுகிய காலத்தில் உலக சம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார். எனவே, அவரது வெற்றிப்பயணம் தொடர்பில் ThePapare.com மேற்கொண்ட விசேட நேர்காணலை இங்கு பார்ப்போம்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

என்னுடைய பெயர் மொஹமட் உவைஸ் சுலைமான் மொஹமட் அர்ஷான். எனக்கு 28 வயது. நான் தற்போது வங்கியில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன். எனது தந்தை குவைட் தூதுவராலயத்தில் கடமை புரிந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். எனது தாயார் வெஸ்ட்வூட் சர்வதேசப் பாடசாலையில் ஆசிரியராக உள்ளார். எனக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் உள்ளனர்.

நான் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்றேன். பாடசாலைக் காலத்தில் றக்பி, குத்துச்சண்டை, நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டேன். 2007 முதல் 2008 வரை பாடசாலையின் றக்பி அணிக்காக விளையாடினேன். 2008ஆம் ஆண்டு 20 வயதுக்குட்பட்ட இலங்கை றக்பி அணியில் இடம்பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன்பிறகு 2009இல் ஹொங்கொங்கில் நடைபெற்ற ஆசிய இளையோர் றக்பி போட்டித் தொடரில் பங்கேற்றேன். அதன்பிறகு 2010ஆம் ஆண்டு முதல் 2015 வரை கண்டி றக்பி கழகத்துக்காக விளையாடினேன். அந்தக் காலப்பகுதியில் எனக்கு ஏற்பட்ட உபாதைகள் காரணமாக ஒருசில சத்திரசிகிச்சைகளை செய்து கொண்டேன். எனினும், தொடர்ந்து றக்பி விளையாடினால் இன்னும் பாரதூரமான ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியிருந்ததை அடுத்து றக்பி விளையாட்டிலிருந்து விடைபெற்றேன்.

அதன்பிறகு 2017இல் தற்காப்புக் கலைகளில் ஒன்றான கிங் பொக்சிங் விளையாட்டை ஆரம்பித்தேன். ஸ்கொட்லாந்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள செம்புரம் தற்காப்புக் கலை அகடமியில் வைட் ட்ரெகன்ஸ் என்ற அணிக்காக விளையாடினேன். இதற்கு தர்ஷன் டி சில்வா என்பவர் பயிற்சியாளராக உள்ளார். அவருடைய அணியுடன் இணைந்துகொண்டு கிங் பொக்சிங் விளையாட்டை மாத்திரமல்லாது, மொய் தாய் தற்காப்புக் கலை, கராத்தே, ஆயுத பயிற்சிகள் மற்றும் குத்துச்சண்டை ஆகிய அனைத்துவகையான கலைகளையும் கற்றுக்கொண்டேன்.

இம்முறை உலக தற்காப்புக் கலை போட்டி பற்றியும், நீங்கள் பெற்றுக்கொண்ட வெற்றியைப் பற்றியும் சொல்லுங்கள்?

எனது கிங் பொக்சிங் அகடமியான வைட் ட்ரெகன்ஸ் அணியில் உள்ள வீரர்களுக்கிடையில் கடந்த வருடம் நடைபெற்ற கிக் பொக்சிங் போட்டித் தொடரில் சாதாரண எடைப் பிரிவு சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டேன். அதன்பிறகு இவ்வருடம் மே மாதம் நடைபெற்ற மொய் தாய் தற்காப்புக் கலையில் அதிக (Heavy Weight) எடைப் பிரிவில் தேசிய சம்பியனாக தெரிவாகினேன்.

இதனையடுத்து, ஸ்கொட்லாந்தில் இருந்து ஹன்சி போல் மெக்வே மாஸ்டர் இலங்கைக்கு வருகை தந்தார். அதன்பிறகு உலக தற்காப்புக் கலை போட்டித் தொடரிற்காக என்னைத் தெரிவு செய்தார்.

அதன்பிறகு இங்கிலாந்தின் வூர்ஸ்டர்ஷியர் மாநிலத்தில் நடைபெற்ற உலக தற்காப்புக் கலை போட்டியில் பங்குபற்றினேன். உலக ஐக்கிய தற்காப்புக் கலை (வூமா) சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட இம்முறைப் போட்டித் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன், ஆசியாவில் இருந்து நான் மட்டும் தான் பங்குபற்றியிருந்தேன்.

இதில் பலவகையான போட்டிப் பிரிவுகள் இருந்தன. ஆனால், நான் ஐந்து வகையான தற்காப்புக் கலைகள் உள்ளடக்கிய கிக் பொக்சிங்கில் கே-1 எனப்படும் பிரிவில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டேன். இதில் 3-1 என்ற சுற்றுக்கள் அடிப்படையில் இங்கிலாந்து வீரரரை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றேன்.  

பெண்களுக்கான உலக குத்துச் சண்டையில் இலங்கையின் அனுஷா

சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனத்தினால் …..

ஏன் நீங்கள் கிங் பொக்சிங் விளையாட்டை தெரிவு செய்தீர்கள்?

நான் ஆரம்பத்தில் கூறியது போல றக்பி விளையாடிய காலப்பகுதியில் எனக்கு ஏற்பட்ட உபாதைகள் காரணமாக ஒருசில சத்திரசிகிச்சைகளை செய்ய நேரிட்டது. எனினும், தொடர்ந்து விளையாடினால் இன்னும் ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியிருந்ததை அடுத்து றக்பி விளையாட்டிலிருந்து விடைபெற்றேன். ஆனால், மிகவும் கவலைப்பட்டேன். றக்பி விளையாடுவதற்கான உடற்தகுதி, ஆளுமை மற்றும் அறிவு என்பவை என்னிடம் இருந்த போதிலும், உபாதைகள் காரணமாக அதை கைவிடுவதற்கு நேரிட்டது.

உண்மையில் சிறுவயது முதல் குத்துச்சண்டை விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதன்பிறகுதான் தற்காப்புக் கலைகளில் ஒன்றான கிங் பொக்சிங் விளையாட்டை தெரிவு செய்தேன். இதற்காக குத்துச்சண்டை கழகமொன்றை கண்டி முழுவதும் தேடினேன். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

இந்த காலப்பகுதியில் தான் செம்புரம் தற்காப்புக் கலை அகடமியில் எனது பாடசாலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கிக் பொக்சிங் விளையாடுகின்ற வீடியோவொன்றைப் பார்த்தேன். அவர்கள் விளையாடிய விதம் மிகவும் பிரம்மிக்க வைக்கும் விதத்தில் இருந்ததுடன், திரைப்படம் ஒன்றில் சண்டைக் காட்சியொன்றைப் போல பிரதிபலித்தது. அதன்பிறகுதான் இந்த விளையாட்டை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது.

இதற்காக நான் கண்டியிலுள்ள வை.எம்.சி. மற்றும் தல்வத்த அசோகாராம விஹாரை ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டேன். அந்த நேரத்தில் தொழில் நிமித்தமான பதுளைக்கு எனக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆனால் எனது பயிற்சிகளை ஒருபோதும் கைவிடவில்லை. அங்கு சென்றும் நான் எனது பயிற்சிகளை முன்னெடுத்தேன். தொடர்ந்து 8 மாதங்கள் அங்கு இருந்துகொண்டு பாரம்தூக்குதல், உடற்பயிற்சி என அனைத்துவிதமான பயிற்சிகளையும் ஏழு நாட்களும் மேற்கொண்டேன். அத்துடன், தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளையும் பெற்றுக்கொண்டேன்.

புகைப்படங்களைப் பார்வையிட  

இதேநேரம், கிக் பொக்சிங் விளையாட்டில் புல் கன்டெக்ட் (குத்துச்சண்டை கோதாவுக்கு வெளியே பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் நடைபெறும் போட்டி), செமி கன்டெக்ட் (குத்துச்சண்டை கோதாவுக்குள் சாதாரண கவசங்களுடன் நடைபெறும் போட்டி) மற்றும் லைட் கன்டெக்ட் (குத்துச்சண்டை கோதாவுக்கு வெளியே புள்ளிகள் வழங்கப்படுகின்ற அதிவேகப் போட்டி) என 3 பிரிவுகள் இருந்தன. இதில் புல் கன்டெக்ட் பிரிவில் கே-1 எனப்படுகின்ற போட்டியைத் தான் நான் தெரிவுசெய்தேன்.

இதுஇவ்வாறிருக்க, ஸ்கொட்லாந்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ஹன்சி போல் மெக்வே மாஸ்டர் எனது போட்டிகளை பார்த்த பிறகு, அந்த வீடியோ காணொளிகளை எடுத்துச் சென்றார். அதன்பிறகுதான் உலக தற்காப்புக் கலை போட்டித் தொடரில் பங்கேற்பும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

தற்காப்பு விளையாட்டைப் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள்?

தற்காப்புக் கலை என்பது ஒரு மனிதனின் தற்காப்புக்காக பயன்படுத்துகின்ற ஒரு கலையாகும். அதேசமயம் ஒரு மனிதனை பொறுமைசாலியாகவும், சுகதேகியாகவும் மாற்றுகின்ற கலையாகவும் இதை குறிப்பிடலாம். தற்காப்புக் கலையில் நிறைய பிரிவுகள் உள்ளன. கராத்தே, குத்துச்சண்டை, கிக் பொக்சிங், சவாடே (பிரெஞ்சு கிக் பொக்சிங்), ஜுடோ, வூசூ, குன்பூ, ஙிரெப்லின், பிரேசிலியன் ஜுஜுப்சூ என பல்வேறுபட்ட கலைகள் இதில் உள்ளடங்கியுள்ளன.

கிக் பொக்சிங் என்றால் என்ன?

ஆரம்ப காலங்களில் கிக் பொக்சிங் விளையாட்டு அமெரிக்காவின் தெருவோரங்ளில் விளையாடப்பட்டு வந்தது. அமெரிக்காவில் வாழ்ந்த கறுப்புவெள்ளை இனத்தவர்களிடையே காணப்பட்ட இனமுறுகளின் போது கறுப்பு இனத்தவர்களை தாக்குவதற்கு வெள்ளை இனத்தவர்கள் இந்த முறையைக் கையாண்டார்கள். ஆனால், இதை ஆரம்பத்தில் தடை செய்வதற்கு அப்போதைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்பிறகு இதை ஒரு நடனக் கலையான செய்து வந்தனர். இந்த கலையை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பயிற்சி எடுக்கலாம். எனவே கிக் பொக்சிங் தற்காப்புக் கலைதான் இன்று உலகளவில் முன்னிலையில் உள்ள தற்காப்புக் கலையாகவும் மாறிவிட்டது.

இந்த விளையாட்டுக்கு எப்படியான உடற்தகுதி தேவை?

இந்த விளையாட்டை மேற்கொள்ள முதலில் நல்ல சுகதேகியாக இருந்தால் போதும். ஆபத்தான நோய் அல்லது பாரதூரமான உபாதைகள் இல்லாவிட்டால் இந்த விளையாட்டை தயக்கமின்றி முன்னெடுக்கலாம்.

குத்துச்சண்டையைப் போல இந்த விளையாட்டிலும் எடைப் பிரிவுகள் உண்டா? வயது வேறுபாடுகள் இருக்கின்றதா?

ஆம், இதில் கனிஷ்ட (20 வயதின் கீழ்) மற்றும் சிரேஷ்ட (20 வயதின் மேல்) என இரண்டு வயதுப் பிரிவுகள் உள்ளன. அதிலும் சிரேஷ்ட பிரிவில் 20 முதல் 45 வயது வரையிலான வீரர்கள் மாத்திரம் போட்டியிடுகின்றனர். எடைப் பிரிவுகளை எடுத்துக் கொண்டால் சுப்பர் அதிக எடைப் பிரிவு, அதிக எடைப் பிரிவு, லைட் எடைப் பிரிவு, பெதர் எடைப் பிரிவு, ப்ளை எடைப் பிரிவு, பெண்டம் எடைப் பிரவு என பல்வேறு எடைப் பிரிவுகள் உள்ளன.

நீங்கள் எவ்வாறு கிக் பொக்சிங் விளையாட்டுக்கு பயிற்சி எடுப்பீர்கள்?

நான் அதிகாலை 4.30 மணிக்கு எழும்பி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவேன். அதன்பிறகு உடற்பயிற்சி செய்வேன். அதன்பிறகு 6 கிலோ மீற்றர் ஓடுவேன். தொடர்ந்து சாதாரண நீட்டித்தல் (stretching exercises) உடற்பயிற்சிகளை செய்வேன். பிறகு கிக் பொக்சிங் பயிற்சிகளை ஆரம்பிப்பேன். அதில் மொய்தாய், குத்துச்சண்டை மற்றும் கராத்தே உள்ளிட்ட பயிற்சிகளை முன்னெடுப்பேன். தொடர்ந்து Shadow Fight பயிற்சிகளையும் செய்துவிட்டு, இறுதியாக 15 நிமிடங்கள் தியானத்தில் இருப்பேன்.

இந்த அனைத்து பயிற்சிகளையும் செய்த பிறகுதான் நான் காரியாலயத்துக்குச் செல்வேன். காலை 8.30 மணி முதல் 5 மணி வரை வேலை செய்துவிட்டு 6.30 மணிக்கு மீண்டும் உடற் பயிற்சி (GYM) நிலையத்துக்குச் செல்வேன். அதுதான் என்னுடைய நாளாந்த பயிற்சி முறைகளாகும்.

தற்காப்பு விளையாட்டு ஆபத்தானது என்று சொல்லப்படுகின்றது. இது உண்மையா?

என்னைப் பொறுத்தமட்டில் இந்த தற்காப்புக் கலையானது ஆபத்தானதல்ல. இதற்கு முன் நான் றக்பி வீரராக இருந்தேன். அதுவும் மிகவும் வன்முறையான அல்லது ஆபத்தான விளையாட்டு தான். றக்பி விளையாட்டிலும் எந்தவொரு பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல் தான் விளையாடுவோம். ஆனாலும், இலங்கையில் றக்பி விளையாட்டு நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருகின்றது. அந்த விளையாட்டு தொடர்பில் எமது வீரர்கள் மத்தியில் நல்லதொரு தெளிவு இருந்த காரணத்தால் தான் அந்த விளையாட்டை பலரும் விரும்பத் தொடங்கினர்.

அதேபோல, தற்காப்புக் கலை அல்லது கிக் பொக்சிங் விளையாட்டில் ஒரு பகுதியை மாத்திரம் தான் எமது வீரர்கள் தெரிந்து வைத்துள்ளனர். இந்த கலையைக் கற்றுக்கொண்டால் உயிர் ஆபத்து வரும், உபாதைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என தவறான அபிப்ராயம் அவர்கள் மத்தியில் உள்ளது.

தேசிய ஸ்னூகர் சம்பியனாக மகுடம் சூடிய மொஹமட் பாஹிம்

தேசிய மட்ட ஸ்னூகர் போட்டிகளில் …..

ஒரு மனிதனை ஒழுக்கமுள்ளவராகவும், பொறுமைசாலியாகவும் மாற்றுகின்ற விளையாட்டுதான் கிக் பொக்சிங். இந்த கலையைக் கற்றுக்கொண்டவர்கள் வேண்டும் என்றே சண்டை சச்சரவுகளுக்கு போக மாட்டார்கள். வன்முறைகளின் போது அதை எவ்வாறு சமாளிப்பதென்பதை இதன்மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

உலக சம்பியன்ஷிப்பில் நீங்கள் கற்றுக்கொண்ட விடயங்கள் என்ன?

இந்த விளையாட்டை தெரிவு செய்து, முதற்தடவையாக சர்வதேசப் போட்டியொன்றில் பங்குபற்றிய காரணத்தால் ஒழுக்கமுள்ள ஒரு மனிதராக வரமுடிந்தது. நிறைய கெட்ட பழக்கவழக்கங்களை தவிர்த்துக் கொண்டேன். உண்மையில் மார்க்கப்பற்றுள்ள ஒரு மனிதராக மாறும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. உடற் தகுதியில் முன்னேற்றம் கண்டதுடன், உணவு பழக்க வழக்கங்களிலும், ஆரோக்கியத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. எனக்க ஒரு உபாதை இருந்தது. அதுவும் இதனால் பூரண குணமடைந்துவிட்டது.

சப்லிமண்ட் (மேலதிக ஊட்டசத்து) பாவிப்பது உடல் சுகாதாரத்துக்கு பாதிப்பில்லையா?

எல்லாவற்றிலும் நல்லது, கெட்டது இருப்பதைப் போல இதிலும் இரண்டு விடயங்கள் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்க வேண்டும். மேலதிக ஊட்டச்சத்துக்களில் எமக்கு தேவையாதை மாத்திரம் தான் எடுக்க வேண்டும். உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தால் தடைசெய்யப்பட்ட மேலதிக ஊட்டச்சத்துக்களை எடுக்கவே கூடாது.

உரிய உடற் பயிற்சிகளுடன், போசாக்கான உணவுகளை மாத்திரம் எடுத்துக் கொண்டால் இவ்வாறு மேலதிக ஊட்டச்சத்துக்களை எடுக்க வேண்டிய தேவை ஏற்படாது. ஆனால் சர்வதேசப் போட்டியொன்றில் பங்குபெறுவதாக இருந்தால் உடல் எடையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டிவரும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மேலதிக ஊட்டச்சத்துக்களை எடுத்தால் தவறில்லை.

இலங்கையின் தற்காப்புக் கலை உலகளவில் எந்த இடத்தில் உள்ளது?

இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்காப்புக் கலைகளில் ஒன்றான குத்துச்சண்டை மாத்திரம் பிரபல்யமாக உள்ளது. இது ஒலிம்பிக்கில் இடம்பெற்றிருந்தாலும், எமது வீரர்கள் அதில் பங்குபற்றுவது மிகவும் குறைவு. அதைதவிர உலக அளவில் இடம்பெறுகின்ற தற்காப்புக் கலைகளில் எமது வீரர்கள் பங்குபற்றுவது மிகவும் அரிது என்று சொல்லலாம்.

  காணொளிகளைப் பார்வையிட  

இதில் மொய் தாய் தற்காப்புக் கலை தற்போது ஆசிய மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. கராத்தேயிலும் எமது வீரர்கள் பங்குபற்றல் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, தேசிய மட்டத்தில் போட்டித் தொடர்கள் இடம்பெற்றாலும், சர்வதேச அளவில் இடம்பெறுகின்ற போட்டிகளில் எமது வீரர்கள் பங்குபற்றுவதில்லை. அவ்வாறு தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு சர்வதேச போட்டித் தொடர்களில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை.

அதேபோல, தற்காப்புக் கலைகளின் அடுத்த கட்டத்தைக் கற்றுக்கொள்வதிலும் எமது வீரர்கள் அசமந்தப் போக்குடன் உள்ளனர். இதனால் உலக அளவில் எமது நாட்டின் தற்காப்புக் கலை விளையாட்டுத்துறையானது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆனால் சர்வதேச மட்டப் போட்டிகளில் எமது வீரர்கள் பங்குபற்றினால் நிச்சயம் தங்கப் பதக்கங்களை வெற்றி கொள்ள முடியும். எமது நாட்டிலும் திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் உலக மட்டப் போட்டிகளில் பங்குபற்றும் அளவுக்கு அவர்களது திறமைகள் இன்னும் வளரவில்லை. இதனால் அவர்களிடம் தன்னம்பிக்கையும் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது.

பாடசாலை காலத்தில் உங்களுக்கு இருந்த மிகப் பெரிய கனவு என்ன?

உண்மையில் றக்பி விளையாட்டில் நிறைய சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது கனவாக இருந்தது. ஆரம்பத்தில் இலங்கை தேசிய றக்பி அணியில் இறுதி 15 பேரில் இடம்பெற வேண்டும் என்ற ஆசை இருந்தது. 2005 முதல் 2009 முதல் வரை தேசிய றக்பி அணியில் இடம்பெற்றேன். அதன்பிறகுதான் நான் கண்டி றக்பி கழகத்துடன் இணைந்து கொண்டேன். எனினும், தொடர் உபாதைகள் காரணமாக றக்பி விளையாட்டை கைவிட்டேன்.

அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்தீர்கள். அதுபற்றிச் சொல்லுங்கள்?

இலங்கையில் தற்காப்புக் கலைக்கான சங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்ற கோரிக்கையொன்றை முன்வைத்தேன். அதற்கு அமைச்சர் தனது சம்மதத்தை தெரிவித்திருந்தார். அத்துடன், நான் உலக தற்காப்புக் கலை போட்டிக்காக எந்தவொரு அனுசரணையும் இன்றி சொந்த செலவில் தான் சென்றிருந்தேன். அதேபோல, வேலை செய்கின்ற இடத்தில் விடுமுறையும் கிடைக்கவில்லை. எனவே, இனிவரும் காலங்களில் நடைபெறுகின்ற போட்டிகளில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் இருக்க உதவி செய்யுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டோம். இந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொண்ட அவர், இதுதொடர்பில் திட்டமொன்றை அறிக்கையாக சமர்பிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

தேசிய விளையாட்டு விழா கராத்தேயில் பாலுராஜுக்கு அதி சிறந்த வீரர் விருது

விளையாட்டுத்துறை அமைச்சும்,…..

உங்களுக்கு வெற்றிக்குப் பின்னால் இருந்தவர்கள், உங்களுக்கு உதவி செய்தவர்கள் பற்றிச் சொல்லுங்கள்?

முதலில் இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்தது எனது மார்க்கம் தான். அதேபோல செம்புரம் தற்காப்புக் கலை அகடமியின் வைட் ட்ரெகன்ஸ் அணிக்கும், என்னுடைய இந்தக் குறுகிய கால வெற்றிக்குக் காரணமாக இருந்த மாஸ்டர் தர்ஷன் டி சில்வாவுக்கும், ஹன்சி போல் மெக்வே மாஸ்டருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

அதேபோல, இந்த உலக தற்காப்புக் கலை போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக அம்மா, அப்பா, சகோரர்கள், மனைவி உள்ளிட்ட எனது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் நிறைய உதவிகளை செய்திருந்தனர். அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்களுடைய எதிர்கால இலக்கு என்ன?

உண்மையில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதுதான் எனது அடுத்த இலக்காக உள்ளது. அதற்கான வேலைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றேன். அந்த பல்கலைக்கழகத்தில் அனைத்துவிதமான விளையாட்டுக்களுக்ககான பயிற்சிகள் வழங்கப்படும். எனவே, அங்கு வருகின்ற வீரர்களை உடல், உள ரீதியாக வலுப்படுத்தி ஒரு பரிபூரண மனிதனாக வெளியனுப்புவோம்.

அதுமாத்திரமின்றி, உபாதைகள் ஏற்படுவதை தடுப்பதற்கான ஒரு மத்திய நிலையமாகவும் இதை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளேன். குறிப்பாக, உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பயிற்சிகளை பெறுவதன் மூலம் சிறந்த பிரபதிபலனையும் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது நாங்கள் கனணிமயமாக்ககப்பட்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக, நவீன தொழில்நுட்பம் மனிதனை ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. 5 பேர் செய்கின்ற வேலைய ஒரு கனணி செய்து கொண்டிருக்கின்றது. எனவே உலகில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற வன்முறைகள், ஊழல்களுக்கு வேலையில்லாப் பிரச்சினையும் முக்கிய காரணமாகும். எனவே அவ்வாறான நிலைமைக்கு செல்லாமல் உடல், உள ரீதியாக வலுப்பெற்ற ஒரு மனிதனை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவாகும்.

 >>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<