பல்வேறு சாதனைகளுக்கு காரணமாகியிருக்கும் பின்ச்சின் அதிரடி சதம்

197
Aaron Finch smashed a brilliant 172 off 76 deliveries

அவுஸ்திரேலிய T20 அணியின் தலைவர் ஆரோன் பின்ச் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெறும் 76 பந்துகளில் 172 ஓட்டங்களை விளாசி, T20 சர்வதேச போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பெற்று மீண்டும் உலக சாதனை படைத்துள்ளார்.  

இதற்கு முன்னர், T20 சர்வதேச போட்டிகளில் தனிநபர் ஒருவர் எடுத்த அதிகூடிய மொத்த ஓட்டங்கள் (156)  ஆரோன் பின்ச்சினாலேயே 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக பெறப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டிருந்தது.  எனவே, தனது சொந்த உலக சாதனையை ஐந்து வருடங்களின் பின்னர் பின்ச் தானே முறியடித்திருக்கின்றார்.

ரத்து செய்யப்பட்டுள்ள சந்திக்க ஹத்துருசிங்கவின் இங்கிலாந்து பயணம் 

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் பங்குபெறும் முக்கோண T20 தொடரானது ஜிம்பாப்வேயில் இடம்பெற்று வருகின்றது. ஹராரேயில் இன்று (03) நடைபெற்ற ஜிம்பாப்வே  அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான தொடரின் மூன்றாவது போட்டியிலேயே பின்ச்சினால் இந்த உலக சாதனை படைக்கப்பட்டிருக்கின்றது.

நேற்று (02) இடம்பெற்ற இத்தொடரின் இரண்டாவது போட்டியில் T20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தானை 9  விக்கெட்டுக்களால் அதிரடியாக தோற்கடித்திருந்த அவுஸ்திரேலிய அணி, இன்று ஆரம்பமாகிய போட்டியில் ஜிம்பாப்வே அணித்தலைவர் ஹமில்டன் மசகட்சாவினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்தது.   

அண்மைக்காலங்களில் தோல்வியைக் கண்டு வந்த அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியுடன் கிடைத்த வெற்றியினால் பெற்ற உற்சாகத்தோடு ஜிம்பாப்வே அணியுடனான துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்திருந்தது. தொடக்க வீரர்களாக அணித்தலைவர் ஆரோன் பின்ச், டார்சி சோர்ட் ஆகியோர் களம் வந்திருந்தனர்.

போட்டி தொடங்கிய கணத்தில் இருந்தே அடித்தாடிய பின்ச் ஜிம்பாப்வே அணியினரின் பந்துவீச்சாளர்களுக்கு வாணவேடிக்கை காட்டி அதிரடியாக ஓட்டங்கள் குவித்தார். கவர் திசைக்கு மேலாக அடிக்கடி சிக்ஸர்களையும், பெளண்டரிகளையும் விளாசிய பின்ச் 50 பந்துகளில் தனது இரண்டாவது T20 சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.

சதம் கடந்த பின்னர் மிகவும் உக்கிர ஆட்டத்தைக் காட்டிய ஆரோன் பின்ச் போட்டியின் 19 ஆவது ஓவரில் பெற்றுக்கொண்ட சிக்ஸர் உடன், T20 போட்டிகளில் தனது முந்திய தனிநபர் அதிகூடிய ஓட்ட (156) சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார்.

பின்ச்சின் அதிரடி சத உதவியோடு முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இறுதி நேரத்தில் எழுச்சி பெற்ற பெல்ஜியம் பிரேசிலுடனான காலிறுதிக்கு முன்னேற்றம்

அவுஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைய ஒரு பந்து மீதமாயிருந்த நிலையில் ப்ளெஸ்ஸிங் முசரபானியினால் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட ஆரோன் பின்ச் 10 சிக்ஸர்களையும், 16 பெளண்டரிகளையும் பெற மறுமுனையில் பின்ச்சின் ஜோடியான டார்சி சோர்ட் 46 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணிக்காக சேர்த்துக் கொடுத்தார்.  

அவுஸ்திரேலிய அணியினால் இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இமலாய வெற்றி இலக்கான 230 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் 100 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு அன்ரு டை மூன்று விக்கெட்டுகளையும், எஷ்டன் ஏகார் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி உதவியிருந்தனர்.

பின்ச்சின் உலக சாதனை தவிர இப்போட்டியில் வேறு பல புதிய அடைவுகளும் நிலைநாட்டப்பட்டிருந்தது.

  • அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டுக்காக டார்சி சோர்ட்டுடன் ஜோடி சேர்ந்த பின்ச், 223 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தார். இது T20 சர்வதேச போட்டியொன்றில் ஆரம்ப விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாகும்.
  • இந்த இணைப்பாட்டம் மூலம் T20 சர்வதேச போட்டிகளில் 200 ஓட்டங்களுக்கு மேலான இணைப்பாட்டத்தினை கடந்த முதல் அணியாக அவுஸ்திரேலியா மாறுகின்றது.
  • இதேவேளை 223 ஓட்டங்கள் என்பது T20 சர்வதேச போட்டிகளில் எந்தவொரு விக்கெட்டுக்காகவும் (Any Wicket) பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 223 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்திற்காக பின்ச் – சோர்ட் ஜோடி 116 பந்துகளை எடுத்துக் கொண்டிருந்தது. T20 சர்வதேச போட்டிகளில் நீண்ட நேரம் நீடித்த (பந்துகள் அடிப்படையில்) இணைப்பாட்டம் இதுவாகும்.
  • ஆரோன் பின்ச், டார்சி சோர்ட் ஆகியோர் இணைந்து இப்போட்டியில் மொத்தமாக  19 பெளண்டரிகளை விளாசியிருந்தனர். இது T20 சர்வதேச போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய பெளண்டரி எண்ணிக்கையாக அமைந்திருந்தது.
  • இப்போட்டியில் 226.31 என்ற ஓட்ட வேகத்தைக் காட்டிய ஆரோன் பின்ச் அவுஸ்திரேலிய அணியின் மொத்த ஓட்டங்களில் 75.1% சதவீதமான ஓட்டங்களை பெறுவதற்கு பங்களிப்புச் செய்திருந்தார். இது T20 சர்வதேச போட்டியொன்றில் துடுப்பாட்ட வீரர் ஒருவர் தனது தரப்புக்காக பெற்றுக்கொடுத்த அதிக ஓட்ட சதவீதமாகும்.

இலங்கை கிரிக்கெட் தேர்தலை ஆறு மாதத்திற்குள் நடத்தவும் – ஐ.சி.சி உத்தரவு

போட்டியின் ஆட்ட நாயகன் விருது உலக சாதனை படைத்த பின்ச்சிற்கு வழங்கப்பட்டது. இத்தொடரில் தமது அடுத்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் வியாழக்கிழமை (05) பாகிஸ்தானை எதிர் கொள்கின்றது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க