சென். நிக்கலஸ், பாடும்மீன், கல்முனை பிறில்லியன்ட் அணிகள் அடுத்த சுற்றுக்குள்

1205
FA Cup - Jaffna Matches

FA கிண்ண சுற்றுத் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிக்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மூன்று போட்டிகளின் முடிவுகளின்படி யாழ் அணிகளான நாவாந்துறை சென். நிக்கலஸ், குருநகர் பாடும்மீன் மற்றும் கல்முனை பிறில்லியன்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

நாவாந்துறை சென். நிக்கலஸ் எதிர் வென்னப்புவ அல் ஹிரா

நாவாந்துறை சென். நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் வென்னப்புவா அல் ஹிரா கால்பந்துக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

ஆட்டத்தில் ஹிரா வீரர்களின் கடும் அழுதத்திற்கு மத்தியிலும் 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற சென் நிக்கலஸ் யாழ் லீக்கில் இருந்து நான்காவது சுற்றுக்குத் தெரிவாகிய இரண்டாவது அணியாகத் தமது பெயரை பதிவு செய்துகொண்டது.

ஒலிம்பிக்குடனான வெற்றியுடன் FA கிண்ணத்தை ஆரம்பித்த சுப்பர் சன்

கல்முனை சன்தாங்கேனி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த FA கிண்ணத்திற்கான மூன்றாம் சுற்றுப் போட்டியொன்றில்…

பொலன்னறுவை லகி விளையாட்டுக் கழக அணியுடனான  போட்டியை  Walk over முறை மூலம் வென்றிருந்த வென்னப்புவ லீக் சம்பியன்  அல் ஹிரா அணியை, இவ்வருட FA கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டிக்காக எதிர்கொண்டிருந்தனர் சென் நிக்கலஸ் அணியினர்.

நிக்கலஸ் அணியின் சொந்த இடமான யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே நிக்கலஸின் கோல்பரப்பை ஆக்கிரமித்து  அல் ஹிரா அணியினர் அபாரமாக ஆடியிருந்தனர். எனினும், முன்கள வீரர்களான ஷஹீப், சம்பத் ஆகியோர் தமக்குக் கிடைத்த அழகான வாய்ப்புக்களை கோலாக்கத் தவறினர்.

தொடர்ந்தும் அல் ஹிரா வீரர்கள் சிறப்பாக ஆடினர். அவர்களது வேகமான பந்துப் பரிமாற்றம் மற்றும் குறுகிய பந்துப் பரிமாற்றம் என்பன எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது. எனினும், முதல் பாதி நிறைவுற பத்து நிமிடங்கள் இருக்கையில் பாடும்மீன் அணியினர் தமது ஆட்டத்தை வேகப்படுத்தினர்.

ஆட்டத்தில் 35 நிமிடங்கள் கடந்த நிலையில் அல் ஹிராவின் கோல்பரப்பை ஆக்கிரமித்த அமிலன் முதல் முயற்சியில் பந்தினை நழுவவிட்ட போதும், அதே வேகத்தில் சுதாகரித்துக் கொண்டு தனது அடுத்த முயற்சியின் மூலம் அவர் கோலைப் பெற்றுக்கொண்டார்.

ஆட்டவேளையில் உபாதைக்குள்ளாகிய அல் ஹிராவின் சிரேஷ்ட வீரர் இஷான் தொடர்ந்தும் விளையாட முடியாத நிலையில் மைதானம் விட்டு வெளியேற அவ்வணி சற்று சோர்வடைந்தது.

தொடர்ந்தும் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி விளையாடிய சென் நிக்கலசிற்கு முதல் பாதியின் மேலதிக நேரத்தில் அஜந்தன் கோல்பெற எத்தணிக்கையில் அல் ஹிராவின் கோல் காப்பாளர் தடுமாறி விழுந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய அஜந்தன் தனது அணிக்கான இரண்டாவது கோலை பெற்றுக்கொண்டார்.

சென் நிக்கலஸ் பெற்ற இரண்டு கோல்களுடன் முதலாம் பாதி நிறைவிற்கு வந்தது.

முதல் பாதி: சென் நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் 2-0 அல் ஹிரா கால்பந்துக் கழகம்

சென் நிக்கலஸ் அணியினர் முதல் பாதியினை நிறுத்திய அதே வேகத்தில் இரண்டாம் பாதியையும் ஆரம்பித்தனர்.

பின்னர் 59ஆவது நிமிடத்தில் றொக்ஷன் உதைந்த பந்தை அல் ஹிராவின் கோல் காப்பாளர் மிக மோசமான விதத்தில் தடுக்க முயற்சித்தமையினால், பந்து இலகுவாகக் கம்பத்தினுள் சென்றது. எனவே, கோல் வித்தியாசம் மூன்றாக அதிகரித்தது.

அல் ஹிராவின் முன்கள வீரர்கள் தமக்குக் கிடைத்த இலகு வாய்ப்புக்களை வீணடிக்க, மறுமுனையில் 79ஆவது நிமிடத்தில் ரதீஸ் அதிரடியாக கோலினைப் பெற, தமது ஆதரவாளர்களின் பெரும் மகிழ்ச்சிக்கு மத்தியில் போட்டியை நிறைவு செய்தது யாழ்ப்பாண வீரர்கள் .

முழு நேரம்: சென் நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் 4-0 அல் ஹிரா கால்பந்துக் கழகம;

Thepapare.com இன் ஆட்ட நாயகன் – அமிலன் (நாவாந்துறை சென் நிக்கலஸ் வி. )

கோல் பெற்றவர்கள்

நாவாந்துறை சென் நிக்கலஸ் விளையாட்டுக் கழகம்
அமிலன் 35′, அஜந்தன்48’,றொக்ஷன்59′, ரதீஸ்79′

போட்டியின் நிறைவில் அல் ஹிரா அணியின் பயிற்றுவிப்பாளர் இம்தியாஸ் ThePapare.com இடம் கருத்துத் தெரிவிக்கையில்,எமது வீரர்களது சில தவறுகளினாலேயே போட்டி எமது கைநழுவிச் சென்றது. கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரு வருடங்களில் இவ்வளவு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இளம் அணியிருப்பதனால் எதிர்காலத்தில் மேலும் சாதிப்போம்” என்றார்.

சென் நிக்கலஸின் பயிற்றுவிப்பாளர் கீசிங்கர் கருத்துத் தெரிவிக்கையில் “வெளி மாவட்ட அணியொன்றை வென்றதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இனிவரும் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிபெறுவதே எமது இலக்கு” என்றார்.

13 கோல்களுடன் FA கிண்ணத்தை ஆரம்பித்த விமானப்படை அணி

இந்த பருவகால FA கிண்ணத்திற்காக தமது முதல் போட்டியை எதிர்கொண்ட விமானப்படை விளையாட்டுக் கழக அணியினர்…


குப்பிளான் குறிஞ்சிக்குமரன் எதிர் கல்முனை பிறில்லியன்ட்

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற விறுவிறுப்பான இப்போட்டியில் இறுதி நேர அதிரடியின்மூலம் 2-1 என்ற கோல்கள் கணக்கில் பிறில்லியன்ட் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றுள்ளது.

குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழக ரசிகர்களின் பலத்த ஆதரவிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 8ஆவது நிமிடத்தில் கஜரதன் ஒரு கோலினைப் பெற்றுக்கொடுக்க வட மாகாண தரப்பு கிழக்கு மாகாணத்தை விட முன்னிலை பெற்றது.

முதல் பாதி: குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் 1-0 பிறில்லியன்ட் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியில் தமது முன்னிலையை இரட்டிப்பாக்க குறிஞ்சிக்குமரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் எதுவுமே பயனளிக்கவில்லை.

தொடர்ந்தும் தமது முதல் கோலினைப் பெறுவதற்கு வலுவாக எத்தணித்த பிறில்லியன்ட் அணியினருக்கு 70ஆவது நிமிடத்தில் சாஜித் மூலம் முதல் கோல் கிடைக்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் 85ஆவது நிமிடத்தில் ஹாரம் பிறில்லியன்ட் அணிக்காக மற்றொரு கோலையும் பெற குறிஞ்சிக்குமரன் வீரர்களும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

எனினும் எஞ்சிய சில நிமிடங்களில் கோல்கள் எதுவும் பெறப்படாமையினால் குறிஞ்சிக்குமரனின் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்தி வெற்றியுடன் கல்முனை திரும்பியது பிறில்லியன்ட்.

முழு நேரம்: குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் 1-2 பிறில்லியன்ட் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம்
கஜரதன் 8′
பிறில்லியன்ட் விளையாட்டுக் கழகம்
ஷாஜித் 80′, ஹாரம் 85′


குருநகர் பாடும்மீன் எதிர் நீர்கொழும்பு யூபிற்றர்ஸ்

இத்தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் 4-1 என்ற கோல்கள் கணக்கில் HGS ப்ளு அணியினை வீழ்த்திய யூபிற்றர்ஸ் (நீர்கொழும்பு) அணியை இவ்வருட FA கிண்ணத்தின் முதல் போட்டிக்காக பாடும்மீன் அணி எதிர்கொண்டிருந்தது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியின்கீழ் ஆரம்பமான விறுவிறுப்பான இப்போட்டியில் பாடும்மீன் அணி  3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று யாழின் மற்றொரு அணியாக அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது.

போட்டி ஆரம்பமான நேரம் முதல் இரு அணியினரும் மிக வேகமாகப் பந்தைக் கடத்தி தமது அணிக்கான கோலினைப் பெறுவதற்கான முயற்சிகளை அபாரமாக மேற்கொண்டனர். இரு அணிகளினதும் முன்கள வீரர்களின் வேகமான ஆட்டம் போட்டியை விறுவிறுப்படையச் செய்தது.

வேகமான ஆட்டத்தின் பலனாக 30ஆவது நிமிடத்தில் பாடும்மீனின் கீதன் கோலை நோக்கி உதைந்த பந்து கம்பத்தில் பட்டு, கோலினுள் நுழையும் தருவாயில் கோல் காப்பாளர் தடுமாற, யூபிற்றர்ஸ் அணியின் அப்துல் அதனை கையால் தடுத்தார்.

கோலாகக் கூடிய பந்தைக் கையால் தடுத்தமைக்காக அப்துல் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட 10 வீரர்களுடன் ஆட்டத்தைத் தொடர வேண்டிய நிலைக்கு யூபிற்றர்ஸ் அணி தள்ளப்பட்டது.  

தமக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பெர்ணான்டோ நேர்த்தியாக வலது பக்கமூடாக உதைய இலகு கோல் கிடைக்கப்பெற தமது கோல் கணக்கை ஆரம்பித்தது  பாடும்மீன் அணி.

அதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக யூபீற்றர்ஸ் அணி செயற்பட்ட போதும் அத்தனை முயற்சிகளையும் கோல் காப்பாளர் ரஜிக்குமார் லாவகமாகத் தடுத்தார்.

முதல் பாதி: பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 1-0 யூபிற்றர்ஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் யூபிற்றர்ஸின் முன்கள வீரர்கள் தமக்குக் கிடைத்த கோல் வாய்ப்புக்களைச் சாதகமாக்கத் தவறினர்.

52 ஆவது நிமிடத்தில் பாடும்மீன் வீரர் கப்டன் கோல் கம்பத்தை நோக்கி உயர்த்தி உதைய, பந்து கோல் காப்பாளரின் கைகளின் மேலால் நேரடியாக கோலுக்குள் நுழைந்தது. எனவே அவர்கள் இரு கோல்களினால் முன்னிலை பெற்றனர்.

தொடர்ந்தும்  தமது அணிக்கான முதல் கோலினைப் பெற போராடிய இன்ஷாபின் முயற்சிகள் அத்தனையும் பாடும்மீனின் கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.

ஆட்டம் நிறைவடையவுள்ள நேரத்தில், அதாவது 89ஆவது நிமிடத்தில் கப்டன் மேலும் ஒரு கோலினைப் பெற 3 கோல்களால் வெற்றி பெற்றது பாடும்மீன் அணி.  

முழு நேரம்: பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 3-0 யூபிற்றர்ஸ் விளையாட்டுக் கழகம்

Thepapare.comஇன் ஆட்ட நாயகன் – ரஜிகுமார் (பாடும்மீன் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றோர்

பாடும்மீன் விளையாட்டுக் கழகம்
பெர்ணான்டோ 31′, கப்டன் 52′, 89′

சிவப்பு அட்டை

யூபிற்றர்ஸ் விளையாட்டுக் கழகம்
அப்துல் 30′

மஞ்சள் அட்டை

யூபிற்றர்ஸ் விளையாட்டுக் கழகம்
சஃபான் 45+1′
பாடும்மீன் விளையாட்டுக் கழகம்
கப்டன் 58’, ஜெயரட்ணம் 74′, ஜோன்குயின்ரன் 85′

போட்டியின் நிறைவில் யூபிற்றர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளரும், வீரருமான நிஷாந்த பெர்ணான்டோ ThePapare.com இடம் கருத்துத் தெரிவிக்கையில், எமது அணி வீரர்களின் தவறின் காரணமாக பாடும்மீனிற்கு கிடைக்கப்பெற்ற பெனால்ட்டி உதையுடன் போட்டி அவர்களின் பக்கம் சாய்ந்து விட்டது என்றார்.

பாடும்மீனின் பயிற்றுவிப்பாளர் உதயனன் கருத்துத் தெரிவிக்கையில், அடுத்த சுற்றுக்குள் முன்னேறியிருப்பதில் மகிழ்ச்சி, அடுத்த போட்டியில் பொலிஸ் அணியையும் வீழ்த்தி தொடரில் தொடர்ச்சியாகப் பயணிப்பதே எமது இலக்கு. சிறந்த உடற் தகுதியுடைய இளைய வீரர்கள் இருப்பது அணியை மேலும் வலுப்படுத்தும்என்றார்.