சாதனை மழையோடு தொடரை வென்றது இங்கிலாந்து

351
England thrash Pakistan Cricket
@Getty

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3வது சர்வதேச ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் நோட்டிங்காம் மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் சர்வதேச அரங்கில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்தப் போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆரம்பித்து வைத்த வாண வேடிக்கையை இங்கிலாந்தின் விக்கட் காப்பாளர் ஜோஸ் பட்லர் அழகாக முடித்து வைத்தார்.

ஆரம்பம் முதலே அடித்தாடுவதில் ஆர்வம் காட்டிய ஆரம்ப வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 122 பந்துகளில் 171 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த அணித்தலைவர் மோர்கன் மற்றும் விக்கட் காப்பாளர் ஜோஸ் பட்லர் ஆகியோர் 72 பந்துகளில் 161 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க இங்கிலாந்து புதிய உலக சாதனையைத் தனதாக்கியது.

அந்தவகையில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், 171 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 444 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தது.

2006ஆம் ஆண்டு இலங்கை அணி, நெதர்லாந்து அணிக்கெதிராக 9 விக்கட்டுக்களை இழந்து 443 ஓட்டங்கள் பெற்றதே இதுவரை உலக சாதனையாக இருந்தது.10 ஆண்டுகால உலக சாதனை ஒருநாள் அரங்கில் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் 445 என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 42.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 275 ஓட்டங்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் சர்ஜீல் கான் 58 ஓட்டங்களையும், முஹ்மத் அமீர் 58 ஓட்டங்களையும், சர்ப்ராஸ் அஹமத் 38 ஓட்டங்களையும் முஹமத் நவாஸ் 34 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் சார்பில் பந்துவீச்சில் க்ரிஸ் வோக்ஸ் 4 விக்கட்டுகளைத் தகர்த்தார். இதனால் இங்கிலாந்து அணி 169 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்றது. அத்தோடு 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று வென்று முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 444/3 (50)
அலெக்ஸ் ஹேல்ஸ் 171, ஜோஸ் பட்லர் 90*, ஜோ ரூட் 85, இயன் மோர்கன் 57*
ஹசன் அலி 74/2, முஹமத் நவாஸ் 62/1

பாகிஸ்தான் – 275/10 (42.4)
சர்ஜீல் கான் 58, முஹ்மத் அமீர் 58, சர்ப்ராஸ் அஹமத் 38, முஹமத் நவாஸ் 34
க்றிஸ் வோக்ஸ் 41/4, ஆதில் ரஷீத் 73/2

இங்கிலாந்து அணி 169 ஓட்டங்களால் வெற்றி