பாடசாலை கிரிக்கெட்டை மீட்டெடுக்க கல்வி அமைச்சு விசேட வேலைத்திட்டம்

333

இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள பாடசாலை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினால் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் முன்வைக்கப்படுகின்ற முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளுக்கமைய கல்வி அமைச்சும், பாடசாலை கிரிக்கெட் சங்கமும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ள வேலைத் திட்டத்துக்கு கல்வி அமைச்சர் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணிக்குத் தேவையான திறமையான வீரர்களை பாடசாலை மட்டத்திலிருந்து உருவாக்கும் நோக்கில் குறித்த வேலைத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவும் இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன உள்ளிட்ட முன்னாள் வீரர்களான ஜயந்த செனவிரத்ன உள்ளிட்ட பயிற்றுவிப்பாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கொண்ட அறிக்கையொன்றைப் பெற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்த இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் முன்வந்துள்ளது.

இந்நிலையில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் தலைமையில் பாடசாலை கிரிக்கெட் சங்கம் மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான விசேட சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் (06) இடம்பெற்றதுடன், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய திறமையான வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களினால் முன்வைக்கப்படுகின்ற ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 3 மணிக்கு கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மற்றுமொரு விசேட கலந்துரையாடலை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகளுக்கு பாடசாலை கிரிக்கெட்டும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், பாடசாலை மட்டத்தில் விளையாடுகின்ற வீரர்களை சரியான முறையில் வெவ்வேறு அணிகளாக பிரிக்கப்படாமை கிரிக்கெட் விளையாட்டு இவ்வாறு பின்னடைவை சந்தித்துள்ளதாக கல்வி அமைச்சர் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

எனினும், பாடசாலை மட்ட வீரர்களுக்கு மத்தியில் பாடசாலை அணியொன்றை உருவாக்கத் தவறியமை, அவர்களிலிருந்து தேசிய அணிக்காக வீரரொருவரை தெரிவு செய்வதில் நடந்துகொண்ட முறையற்ற விதம் உள்ளிட்டவை தொடர்பில் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

சுமதிபால மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால சூதாட்ட தொழிலில் ஈடுபட்டு..

இந்நிலையில் பாடசாலை வீரர்களுக்கான தனி குழாமை அமைக்கின்ற போது வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு அணித் தெரிவை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை பட்டியலிட்டு அறிவிக்குமாறு கல்வி அமைச்சர் இதன்போது உத்தரவிட்டார்.

கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முக்கிய சில முன்மொழிவுகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது. இதில் பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளுக்காக உயர் மட்ட பயிற்சி குழாமொன்றை ஏற்படுத்துவது, பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்குவது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்துகொண்டு கிரிக்கெட் விளையாடி வருகின்ற கிராமப்புற வீரர்களை தேசிய மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு விசேட பயிற்றுவிப்பாளர்கள் குழுவொன்றை நியமிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், இவையனைத்துக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இவ்விசேட கலந்துரையாடலுக்கு பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் கபில ஜயலத், தலைவர் ஒஸார பண்டிதரத்ன, பாடசாலை கிரிக்கெட்டின் தெரிவுக்குழுத் தலைவர் டில்ஷான் டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.