MSA சுதந்திர கிண்ணம் ஏர்லி டச் எப்.ஏ. வசம்

135

ரேஸ்கோஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற மென்செஸ்டர் கால்பந்து அகடமியின் (MSA) 15 வயதுக்கு உட்பட்ட முதலாவது சர்வதேச சுதந்திர கிண்ண போட்டியில் மாலைதீவின் ஏர்லி டச் கால்பந்து அகடமி (Early Touch Football Academy) தோல்வியுறாத அணியாக சம்பியன் பட்டத்தை வென்றது.

இலங்கை, மென்செஸ்டர் கால்பந்து அகடமி தனது ஓர் ஆண்டு நிறைவை ஒட்டியும் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் தொடரை ஏற்பாடு செய்திருந்தது.

விளையாட்டின் ஊடே அண்டை நாடுகளுடன் நட்புறவை கட்டியெழுப்புவது, அடிமட்டத்தில் இருந்து கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பது மற்றும் இலங்கையின் இளம் சிறுவர்களுக்கு சர்வதேச கால்பந்து அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர் ஏற்பாடாகி இருந்தது.

கால்பந்து அகடமிகளுக்கு மத்தியிலேயே இந்த தொடர் நடத்தப்பட்டது. இந்த முதல் போட்டித் தொடரில் மாலைதீவில் இருந்து நான்கு அணிகள் மற்றும் 6 உள்நாட்டு அகடமிகள் பங்கேற்றதோடு, மென்செஸ்டர் கால்பந்து அகடமியின் நிறுவனரும் தலைவருமான அகஸ்டின் ஜோர்ஜ் தலைமையில் தனி நபர்களதும் கடுமையான மற்றும் அயராத உழைப்பு மூலம் தொடர் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியாவின் காஷ்மீரில் இருந்து பங்கேற்கவிருந்த அணி ஒன்று அந்த பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றம் காரணமாக கடைசி நேரத்தில் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அணிக்கு பதிலாக மென்செஸ்டர் கால்பந்து அகடமியின் பொலன்னருவை கிளை சேர்த்துக் கொள்ளப்பட்டது. அந்த அகடமியில் 350 இற்கும் அதிகமான சிறுவர்கள் பதிவாகியிருப்பதோடு அதில் இருந்து 3 அணிகள் களமிறங்கின.

தொழில்முறை கால்பந்து விளையாட்டுக்கு தயாராகும் உசைன் போல்ட்

8 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்று உலக சாதனை நாயகனாகத்…

மென்செஸ்டர் கால்பந்து அகடமி (பொலன்னருவை), மென்செஸ்டர் கால்பந்து அகடமி (சிவப்பு), மாசியா (மாலைதீவு) மற்றும் ஹுலுமலே விளையாட்டு பாடசாலை B (மாலைதீவு) ஆகியன சிவப்பு குழுவில் இணைக்கப்பட்டன.

எலிசெபத் மொய்ர் பாடசாலை, கேட்வே கல்லூரி, EFTA மற்றும் புனித தோமியர் கல்லூரி ஆகியன மஞ்சள் குழுவில் பிரிக்கப்பட்டதோடு தாபித் அஹமது கால்பந்து அகடமி (TAFA), ஹுலுமலே விளையாட்டு பாடசாலை A (மாலைதீவு), ஜாவா லேன் அகடமி மற்றும் மென்செஸ்டர் கால்பந்து அகடமி (நீலம்) ஆகியன பச்சை குழுவில் சேர்க்கப்பட்டன.

முதல் சுற்று போட்டிகள் லீக் அடிப்படையில் நடைபெற்றதோடு மூன்று குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றதோடு 3 ஆவது இடத்தை பிடித்த அணிகள் கடைசி இரண்டு இடங்களை தீர்மானிக்க பிளோ ஓப் (Play Off) முறையில் போராடின.

ஏர்லி டச் கால்பந்து அகடமி மற்றும் மென்செஸ்டர் கால்பந்து அகடமி (சிவப்பு) இறுதிப் போட்டியில் ஆடத் தகுதி பெற்றன. இதில் இடது பக்கத்தில் இருந்து பரிமாற்றப்பட்ட பந்தை பெற்ற நபுஹான் முஹமது அபாரமாக வெற்றி கோலை போட்டார்.

3 ஆவது இடத்திற்கான பிளே ஓப் போட்டியில் ராஜகிரிய, கேட்வே கல்லூரி பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஹுலுமலே விளையாட்டு பாடசாலை A (மாலைதீவு) அணிக்கு எதிராக 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

பரிசுகள்

தொடர் நாயகன் – இவான் இயுசரிஸ்ட் (MSA சிவப்பு)

இறுதிப் போட்டியின் நாயகன் நபுஹான் முஹமது (ETFA)

சிறந்த கோல்காப்பாளர் ஹகீம் காமில் (MSA சிவப்பு)

போட்டி உணர்வை வெளிப்படுத்திய அணி ஹுலுமலே விளையாட்டு பாடசாலை B

இந்த தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ஆதரவு வழங்கிய FFSL தலைவர் அனுர டி சில்வா, MSC இன் தலைமை பயிற்சியாளர் மற்றும் 1995 சாஃப் தங்கக் கிண்ணத்தை வென்ற அணியின் அன்டன் வெம்பெச் மற்றும் ஏனைய அனைத்து பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் தனிநபர்களுக்கு MSC தலைவர் அகஸ்டின் ஜோர்ஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.