காலி ரிச்மண்ட் கல்லூரி எதிர் காலி மஹிந்த கல்லூரி

நேற்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான 112 ஆவது ‘காதலர்களின் சமர்’ எனப்படும் ரிச்மண்ட் மற்றும் மஹிந்த கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது. ரிச்மண்ட் கல்லூரியானது முதல் இன்னிங்சில் 4 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டதுடன் இரண்டாவது இன்னிங்சிலும் துடுப்பாட்டத்தில் அசத்தியிருந்தது.

ரிச்மண்ட் கல்லூரி முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்ட 184 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மஹிந்த கல்லூரி முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 96 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

எவ்வாறாயினும் இன்று பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட அவிந்து தீக்ஷண 4 விக்கெட்டுகளையும், சந்துன் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த மஹிந்த கல்லூரி 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக வினுர ஹிரஞ்சித் அதிகபட்சமாக 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

4 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ரிச்மண்ட் கல்லூரி, இம்முறை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. எதிரணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த தனஞ்சய லக்ஷான் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களையும், அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் 92 ஓட்டங்களையும் விளாசினர். அதன்படி போட்டி நிறுத்தப்படும் போது ரிச்மண்ட் கல்லூரி 33 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 205 ஓட்டங்களை குவிந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 184 (47.1) – அவிந்து தீக்ஷண 38, கவிஷ அபிஷேக் 37, கமிந்து மெண்டிஸ் 32, தனஞ்சய லக்‌ஷான் 30, ஆதித்ய சிரிவர்தன 26, கலிந்து எதிரிசிங்க 2/19, கவிந்து எதிரிவீர 2/24, நிபுன் மாலிங்க 2/50 

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 180 (105.5) – வினுர ஹிரஞ்சித் 57, கவிந்து எதிரிவீர 27, அவிந்து தீக்ஷண 4/59, சந்துன் மெண்டிஸ் 3/47  

ரிச்மண்ட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 205/1 (33) – தனஞ்சய லக்ஷான் 101*, கமிந்து மெண்டிஸ் 92

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது

[rev_slider dfcc728]


தர்மராஜ கல்லூரி, கண்டி எதிர் கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி

தர்மராஜ கல்லூரி மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரி அணிகள் மோதிக் கொள்ளும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் சமர் 111ஆவது முறையாக இடம்பெற்றதுடன் இப்போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது. போட்டியின் முதல் இன்னிங்சில் கிங்ஸ்வூட் அணி முன்னிலை பெற்றிருந்தது.

கிங்ஸ்வூட் அணி முதலில் பெற்றுக் கொண்ட 167 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய தர்மராஜ கல்லூரி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 41 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நிவந்த ஹேரத் மற்றும் துலாஜ் பண்டார 40 ஓட்டங்களைக் கடந்து தமது அணியை வழிநடத்திய போதிலும், அற்புதமாக பந்துவீசிய கனிந்து கௌஷல்ய 62 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி எதிரணியை நிலைகுலையச் செய்தார். இதன் காரணமாக தர்மராஜ கல்லூரி 161 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த கிங்ஸ்வூட் கல்லூரி நிதானமாக துடுப்பெடுத்தாடி 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது. அவ்வணியின் யசோத் கவிந்த அரைச்சதம் ஒன்றினை குவித்து 58 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

போட்டியின் சுருக்கம்

கிங்ஸ்வூட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 167 (64.4) – விமுக்தி விஜேசிறிவர்தன 87*, நிவந்த ஹேரத் 4/27, நவிந்த டில்ஷான் 2/27, கிஹான் விதாரண 2/55

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 161 (92.5) – துலாஜ் பண்டார 41, நிவந்த ஹேரத் 40, கனிந்து கௌஷல்ய 7/62 

கிங்ஸ்வூட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 102/1 (33) – யசோத் கவிந்த 58, அமில ஜயவீர 25*

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது