கொழும்பு கால்பந்து கழகத்திற்கும் கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகத்திற்கும் இடையிலான போட்டி, இரண்டாம் பாதியின் முதல் 15 நிமிடத்தின் பின்னர் நடுவரால் இடைநிறுத்தப்பட்டது. போட்டியை பார்வையிடுவதற்காக சமூகமளித்திருந்த பார்வையாளர்களால் விடுக்கப்பட்ட தொடரான அச்சுறுத்தலின் பின்னரே போட்டி இடைநிறுத்தப்பட்டது.

டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் (DCL) இன்றைய தினத்திற்கான (29) போட்டிகள் மோசமான காலநிலைக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. எனினும் கம்பளை நகரின் வீகுலுவத்த மைதானத்தில் நடைபெற்ற கொழும்பு கால்பந்து கழகத்திற்கும், கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகத்திற்கும் இடையிலான போட்டியானது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தில் நடுவாரல் இடைநிறுத்தப்பட்டது.

மாலை 3.20 மணிக்கு போட்டியை கொழும்பு கால்பந்து கழகம் ஆரம்பித்தது. முதல் 10 நிமிடங்களில் இரு அணியினரும் போட்டியில் தம்மை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் மத்தியகளத்தின் வலது எல்லையில் கொழும்பு கால்பந்து கழகத்தின் வீரர்களான முஹீயுத்தீன் மற்றும் டி.சில்வா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின்னர், டி.சில்வா பெனால்டி எல்லையின் இடது பக்கத்தை நோக்கி உள்ளனுப்பிய பந்தை முஹமட் பஸால் சிறப்பாக நிறுத்தி கோலை நோக்கி உதைந்தார். எனினும் விரைவாக செயற்பட்ட கிரிஸ்டல் பெலஸ் அணியின் கோல் காப்பாளர் பந்தை சிறந்த முறையில் தட்டி விட்டார்.

த்ரீ ஸ்டாரை வீழ்த்தி மீண்டும் ஒரு வெற்றியைப் பதிவு செய்த லிவர்பூல் கழகம்

அதனைத் தொடர்ந்து போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் முஹமட் இபாம் வழங்கிய பந்தை மத்தியகளத்திலிருந்து பெற்ற அய்ஸக் அபா, கோலை நோக்கி பந்தை வேகமாக உதைந்தபோதும், கொழும்பு கால்பந்து அணியின் கோல்காப்பாளர் சிறந்த முறையில் பந்தை கோல் கம்பங்களிற்கு மேலால் தட்டிவிட்டார். இம்முயற்சியின் மூலம் பெறப்பட்ட கோணர் வாய்ப்பின் போது கிரிஸ்டல் பெலஸ் அணிக்கு மீண்டும் கோல் பெறுவாதற்கான சிறந்த வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றது. எனினும் அவ்வாய்ப்பினை பெற்ற முஹமட் இபாமால் தனது அணியை போட்டியில் முன்னிலைப்படுத்த முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து 2 நிமிடங்களின் பின்னர் நிரான் கனிஷ்க மூலம் முஹமட் பஸாலை நோக்கி உள்ளனுப்பப்பட்ட பந்தை, தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார் முஹமட் பஸால். எனினும் பந்தானது கோல் கம்பங்களில் பட்டு எல்லைக் கோட்டிற்கு வெளியால் சென்றது.

நீண்ட நேரத்திற்குப் பின்னர் போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் கிரிஸ்டல் பெலஸ் அணியால் மீண்டுமொரு சவால் எதிரணிக்கு விடுக்கப்பட்டது. சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின்னர் முஹமட் இபாம் மூலம் இரு பின்கள வீரர்களினுடாக அய்ஸக் அபாவிற்கு வழங்கப்பட்ட பந்தை பெற்ற அய்ஸக் அபா, பந்தை கோலை நோக்கி வேகமாக உதைந்தார் எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.  

அதனைத் தொடர்ந்து போட்டியின் 35 மற்றும் 37 ஆவது நிமிடங்களில் முறையே கொழும்பு கால்பந்து அணிக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களை அவ்வணியின் வீரர்களான இஸ்மாயீல் அபுமேறே மற்றும் ஸர்வான்  ஆகியோர் தவறவிட்டனர்.

போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் எதிரணியின் வீரரை தாக்கிய குற்றத்திறகாக கிரிஸ்டல் பெலஸ் அணியின் முன்கள மற்றும் நட்சத்திர வீரரான அய்ஸக் அபா சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்வானது அவ்வணியின் ஆதரவாளர்களுக்கு பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியதைக் காணமுடிந்தது.

அத்துடன் முதற்பாதியானது இருஅணிகளும் எவ்வித கோலும் பெறாத நிலையில் முடிவுற்றது.

முதல் பாதி: கொழும்பு கால்பந்து கழகம் 0 – 0 கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம்

இரண்டாம் பாதியை ஆரம்பிப்பதற்காக இரு அணிகளும் மைதானத்திற்கு சமூகமளித்த போதும் போட்டியை நடாத்தி முடிப்பதற்கான சட்ட ரீதியான முழுப்பாதுகாப்பையும் வழங்கியதன் பின்னரே போட்டியை ஆரம்பிப்பதாக நடுவர் அறிவித்தார்.

சட்டரீதியான பாதுகாப்புடனும், 10 வீரர்களுடனும் போட்டியை ஆரம்பித்த கிரிஸ்டல் பெலஸ் அணி விரைவாக செயற்பட்டு போட்டியின் 50 ஆவது நிமிடத்தில் கோலின் மூலம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் போட்டியில் முன்னிலை பெற்றது. முஹமட் சாமில் மூலம் எதிரணியின் மத்தியகளத்தின் வலது பக்கத்திலிருந்து பெனால்டி எல்லைக்குள் உள்ளனுப்பப்பட்ட பந்தை பாஸித் அஹமட் தனது தலையால் முட்டி கோலாக்கியதன் மூலமே இக்கோல் பெறப்பட்டது.

இளையோர் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

கிரிஸ்டல் பெலஸ் அணியால் வெறும் 5 நிமிடங்கள் மாத்திரமே தான் பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற முடிந்தது. போட்டியின் 55 ஆவது நிமிடத்தில் கிரிஸ்டல் பெலஸ் அணியின் பெனால்டி எல்லையின் வலது பக்கத்திற்கு அருகில் வழங்கப்பட்ட ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கொழும்பு அணியின் பீயுரிக் முமாஸ் தனது அணிக்கான கோலைப் பெற்றார். இதன் மூலம் போட்டி 1-1 என்ற கோல் அடிப்படையில் சமநிலை பெற்றது.

போட்டி சமநிலை பெற்று 5 நிமிடங்களின் பின்னர், விறுவிப்பாய் நடைபெற்றுக் கொண்டிருந்த போட்டியை நடுவர் இரு அணியினதும் தலைவர்களுக்கு அறிவித்ததன் பின்னர் இடைநிறுத்தினார். ஆதரவாளர்களால் உதவி நடுவர்களுக்கும் பிரதான நடுவருக்கும் தொடராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களின் காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. போட்டி நிறைவடைவதற்கு மேலும் 30 நிமிடங்கள் காணப்படும் நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது பார்வையாளர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்தது.

கோல் பெற்றவர்கள்
கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் – முஹமட் பாஸித் 50’
கொழும்பு கால்பந்து கழகம் – பீயுரிக் முமாஸ் 55’

மஞ்சள் அட்டை
கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் – சமீர கிரிஷாந்த 15’
கொழும்பு கால்பந்து கழகம் – சலன சமீர 25’

சிவப்பு அட்டை
கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் – அய்ஸக் அபா 42’