ஆஸ்திரிய உடற்கட்டழகர் போட்டியில் லூசியன் புஷ்பராஜுக்கு வெள்ளிப் பதக்கம்

618
Luician Pushparaj
Photo Courtesy - Lucion Pushparaj Facebook page

தெற்காசியாவின் கறுப்பு சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற தேசிய உடற்கட்டழகர் சம்பியனான லூசியன் புஷ்பராஜ், ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஒன்பதாவது ஆஸ்திரிய சர்வதேச உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் அதிகமான வீரர்கள் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தனர்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைய காத்திருக்கும் இரண்டாவது இலங்கையர்

உலகின் மிக உயரமான மலைச் சிகரமாக விளங்குகின்ற…

இதில் 100 கிலோ கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் பங்குபற்றிய லூசியன் புஷ்பராஜ், உலகின் நட்சத்திர உடற்கட்டழகரையெல்லாம் பின்னுக்குத் தள்ளி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, ஐரோப்பிய உடற்கட்டழகர் போட்டியொன்றில் பதக்கமொன்றை வென்ற முதல் இலங்கையராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

அத்துடன், ஐரோப்பாவின் அதி சிறந்த உடற்கட்டழகராகவும், உலகின் முதல் நிலை வீரராகவும் விளங்கிய ஆர்மின் கென்கல்லை, புஷ்பராஜ் இப்போட்டியில் வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இறுதியாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவின் தலைநகர் சோலில் (Seoul) நடைபெற்ற ஆசிய உடற்கட்டழகர் போட்டித் தொடரில் இலங்கைக்கான முதலாவது சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த லூசியன் புஷ்பராஜ், 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் உடற்கட்டழகராகவும் தெரிவாகினார்.

இந்நிலையில் போட்டியின் பிறகு லூசியன் புஷ்பராஜ் கருத்து வெளியிடுகையில், ”2018 இல் நான் பங்குபற்றிய முதல் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனவே எதிர்வரும் காலங்களிலும் இது போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி இலங்கைக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன்” என தெரிவித்தார்.

  • Photo Courtesy - Lucion Pushparaj Facebook page

இவ்விசேட நிகழ்விற்கு ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதுவரும், இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஸ்ரீயானி விஜேசகரவும் கலந்துகொண்டு லூசியன் புஷ்பராஜுக்கான வெற்றிக் கிண்ணத்தை வழங்கிவைத்தார்.

குவைட் நாட்டில் உள்ள உடற்பயிற்சியகம் ஒன்றில் பயிற்சியாளராகக் கடமையாற்றுகின்ற லூசியன், 2013ஆம் ஆண்டு கோல்டன் ஸ்ரீலங்கா உடற்கட்டழகராகவும், அதே ஆண்டு 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் இலங்கையின் உடற்கட்டழகராகவும் தெரிவானார்.

இதன் பிறகு 2006ஆம் ஆண்டு குவைட்டில் நடைபெற்ற உடற்கட்டழகர் போட்டித் தொடரில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அவர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.