ஸ்டீவ் ஸ்மித்தின் தடையை நீக்கிய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

410

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த தடையினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நீக்கியுள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மேலும் பல ரகசியங்களை வெளியிட்ட ஸ்மித்

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் தடைக்கு உள்ளான முன்னாள் ….

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கின் கொமிலா விக்டோரியன்ஸ் (Comilla Victorians) அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இலங்கை அணி வீரர் அசேல குணரத்னவுக்கு பதிலாக கடந்த நவம்பர் மாதம், இந்த ஒப்பந்தத்தினை கொமிலா விக்டோரியன்ஸ் அணி மேற்கொண்டிருந்தது. எனினும், ஸ்மித்தின் பெயர் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் வீரர்கள் வரைவில் இல்லாத காரணத்தால், அவர் விளையாட முடியாது என ஏனைய அணிகள் தெரிவித்திருந்தன.

இது தொடர்பில் ஆராய்ந்த பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கின் நிர்வாகக்குழு, ஸ்மித் விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்த இறுதி முடிவை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எடுக்கும் என குறிப்பிட்டிருந்தது. இதன்படி தங்களது முடிவை கடந்த 20ஆம் திகதி அறிவித்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, ஸ்டீவ் ஸ்மித்தின் ஒப்பந்தம் தொடரின், சட்டத்திட்டத்துக்கு முரணாக உள்ளது. அதனால், அவர் இம்முறை விளையாட முடியாது என அறிவித்தது.

எனினும், தற்போது ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவதற்கு ஏனைய அணிகள் சம்மதம் தெரிவித்துள்ளதுடன், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கின் வீரர்கள் ஒப்பந்தத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வீரர்கள் வரைவுக்கு வெளியில் இருந்து அணிகள் ஒரு வீரரை ஒப்பந்தம் செய்ய முடியும். இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் விளையாடுவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்தின் தடை நீக்கப்பட்டமை குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பணிப்பாளர்களில் ஒருவரான ஜலால் யூனுஸ் குறிப்பிடுகையில்,

பந்தை சேதப்படுத்துமாறு கூறியது யார்? ; உண்மையை வெளியிட்ட பென்கிரொப்ட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் பந்தை சேதப்படுத்திய ….

“நாம் தொடரின் மீதுள்ள ஆர்வத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுத்து வருகிறோம். ஆனால் முடிவுகள் நீதியாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறோம். ஆரம்பத்தில் பெரும்பான்மையான அணிகள் ஸ்மித் விளையாடுவதை ஏற்கவில்லை. எனினும், தற்போது அணிகள் தொடரின் மீதுள்ள ஆர்வத்தால் ஸ்மித் விளையாடுவதை ஏற்றுக்கொண்டு, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் கடிதமொன்றை வழங்கியது. இதன் அடிப்படையிலேயே ஸ்மித் மீதான தடைநீக்கப்பட்டுள்ளது” என்றார்.

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி முதல் பெப்ரவரி 09 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<