ஒரே போட்டியில் பல சாதனைகளை குவித்த இந்தியா

Asia Cup 2023

77

ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக திங்கட்கிழமை (11) நடைபெற்ற சுபர் 4 போட்டியில் இந்திய அணி பல சாதனைகளை பதிவுசெய்துள்ளது.  

மழைக்காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றுவந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியினை பதிவுசெய்தது. குறித்த வெற்றியின் மூலம் பதிவுசெய்யப்பட்ட சாதனைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வரலாற்று வெற்றி  

  • இந்திய அணி இந்தப் போட்டியில் 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதன்படி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா பெற்றுக்கொண்ட மிகப்பெரிய (ஓட்டங்கள் அடிப்படையில்) வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த தோல்வியானது பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது மோசமான தோல்வியாகவும் பதிவாகியது. 
  • பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெறப்பட்ட அதிகூடிய ஒருநாள் ஓட்ட எண்ணிக்கையை இந்தியா பதிவுசெய்தது. இதற்கு முன்னர் 2005ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் 356/9 ஓட்டங்களை இந்தியா விளாசியிருந்தது. அதே ஓட்ட எண்ணிக்கையை மீண்டும் (356/2) நேற்று இந்தியா பதிவுசெய்தது. அதேநேரம் இந்த ஓட்ட எண்ணிக்கையானது ஆசியக் கிண்ணத்தில் பெறப்பட்ட 4வது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் பதிவாகியது. 
  • விராட் கோஹ்லி மற்றும் கே.எல். ராஹூல் ஆகியோர் 233 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பெற்றனர். இந்த இணைப்பாட்டமானது ஆசியக் கிண்ண ஒருநாள் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியது. இதற்கு முன்னர் மொஹமட் ஹபீஸ் மற்றும் நசீம் ஜெம்ஷட் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக 2012ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற போட்டியில் 225 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர். 
  • விராட் கோஹ்லி மற்றும் கே.எல். ராஹுலின் இந்த இணைப்பாட்டம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா பெற்றுக்கொண்ட அதிகூடிய இணைப்பாட்டமாகவும் பதிவாகியது. இதற்கு முன்னர் 1996ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் மற்றும் நவ்ஜோத் சிங் சிது ஆகியோர் 231 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர். 
  • ஒருநாள் போட்டிகளில் வேகமாக 13000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி பதிவுசெய்தார். இவர் 267 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளதுடன், சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார். 

  • ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பெற்றுக்கொண்டார். இவரை தவிர்த்து தென்னாபிரிக்காவின் ஹசிம் அம்லா சென்சூரியன் மைதானத்தில் 4 சதங்களை தொடர்ச்சியாக விளாசியுள்ளார் 
  • ஆசியக் கிண்ணத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி 2வது இடத்தை குமார் சங்கக்காரவுடன் பிடித்துள்ளார். கோஹ்லி மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் 4 சதங்களை விளாசியுள்ளதுடன், சனத் ஜயசூரிய 6 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<