வளர்ந்து வரும் ஆப்கானிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது பங்களாதேஷ்

228
Bangladesh v Afghanistan

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று (செப்.28) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுக்களால் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தொடரை 1-1 என்று சமப்படுத்தியுள்ளது. 

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.
 
முதல் இன்னிங்ஸுக்காக களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வணியின் முதல் விக்கெட் 45 ஓட்டங்களுக்கு வீழ்ந்தாலும், ஆப்கானிஸ்தானின் நேர்த்தியான பந்துவீச்சின் காரணமாக அடுத்தடுத்து சிறிய இடைவெளியில் பங்களாதேஷ் தனது விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தது. முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஹொசைன் முறையே 38, 45 ஓட்டங்களை பங்களாதேஷ் அணிக்காக கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர்

ஆப்கானிஸ்தான் அணிக்காக ரஷீத் கான் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், முஹம்மத் நபி மற்றும் மிர்வேய்ஸ் அஸ்ரப் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 5ஆம் விக்கெட்டுக்காக இணைந்த முஹம்மத் நபி மற்றும் அணித்தலைவர் அஸ்கார் ஆகியோர் 107 ஓட்டங்களை தமக்குள் பகிர்ந்துகொண்டு அணியின் ஓட்ட எண்ணிக்கையை 170க்கு  உயர்த்தினர்.

எனினும், மஷ்ரபி மோர்டசாவின் பந்து வீச்சில் முஹம்மத் நபி LBW முறையிலும், அஸ்கார், ஹோசைனின் பந்து வீச்சில் சபிர் ரஹ்மனிடம் பிடி கொடுத்தும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் போட்டியின் இறுதி ஓவரில் தவ்லாட் சடரன், பேக்வெர்ட் பொயிண்ட்டினுடாக பௌண்டரி ஒன்றை விளாசி தனது அணிக்கான வெற்றி ஓட்டத்தை பெற்றார். இதன்போது அரங்கதிலிருந்த ஒட்டுமொத்த பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்களும் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தனர்

இந்த வெற்றியின்மூலம், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை தற்பொழுது 1-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் சமப்படுத்தியுள்ள நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஒக்டோபர் 1ஆம் திகதி டாக்காவில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் அணி: 208 (49.2) – மோசடக் ஹொசைன் 45, முஷ்பிகுர் ரஹீம் 38, மொஹமதுல்லா 25, தமீம் இக்பால் 20, சௌம்யா சர்க்கார் 20,
ரஷீத் கான் 35/3, முஹம்மத் நபி 16/2, மிர்வேய்ஸ் அஸ்ரப் 23/2

ஆப்கானிஸ்தான் அணி 212/8 (49.4) – அஸ்கார் 57*, முஹம்மத் நபி 49, முஹம்மத் ஷ்ஹசாட் 35, நஜிபுல்லா சடரன் 22, சாகிப் அல் ஹசன் 47/4, மோசடேக் ஹோசைன் 30/2

ஆட்ட நாயகன்: முஹம்மத் நபி