இலங்கை T20 அணியின் தலைவராக மீண்டும் திசர பெரேரா

3196

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு போட்டி கொண்ட T20 தொடருக்கான இலங்கை குழாமின் தலைவராக சகலதுறை வீரர் திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இளம் சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் முதன்முறையாக தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி கொண்ட T20 தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (22) அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ் செயற்பட்டு வந்தார். எனினும் அவர் ஆசியக் கிண்ணத்தை தொடர்ந்து திடீரென பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அவருக்கு பதிலாக திசர பெரேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திசர பெரேரா ஏற்கனவே கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் தலைவராக செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்.பிரேதாஸ மைதானத்தில் ஆறுதல் வெற்றியை தேடும் இலங்கை

அத்துடன்,  இலங்கை அணியில் துடுப்பாட்டம் மற்றும் இரண்டு கைகளாலும் சுழல் பந்து வீசக்கூடிய திறமையைக் கொண்டு பிரகாசித்து வரும் கமிந்து மெண்டிஸ் முதன்முறையாக தேசிய அணிக்குள் இடம்பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடி 61 ஓட்டங்களை குவித்திருந்தார்.

காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ், இவ்வருட ஆரம்பத்தில் நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணித் தலைவராக செயற்பட்டார். அதேவேளை, டயலொக் 4G – சண்டே டைம்ஸ் வழங்கும் அதியுயர்ந்த விருதான சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதையும் கடந்த ஜுலை மாதம் பெற்றிருந்தார்.

இதேவேளை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள 15 பேர் கொண்ட குழாமில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய குசல் பெரேரா இடம்பெற்றுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை வென்ற இசுறு உதானவும் இடம்பிடித்துள்ளார். அதேநேரம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு T20 குழாமிலும் இடம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை T20 குழாம்

திசர பெரேரா (தலைவர்), தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, தசுன் சானக, கமிந்து மெண்டிஸ், இசுறு உதான, லசித் மாலிங்க, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, கசுன் ராஜித, நுவன் பிரதீப், லக்ஷான் சந்தகன்

மேலதிக வீரர்கள் – அமில அபோன்சோ, சதீர சமரவிக்ரம, ஷெஹான் ஜயசூரிய, ஷெஹான் மதுசங்க

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<