மைலோ அஞ்சலோட்ட போட்டித் தொடர் ஜுன் 24இல் பதுளையில் ஆரம்பம்

113

கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறைப் பிரிவு மற்றும் நெஸ்ட்லே லங்கா லிமிடெட்டின் மைலோ ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டிகள் (ரிலே கார்னிவெல் – 2018) பதுளை வின்செண்ட் டயஸ் மைதானத்தில் எதிர்வரும், 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இம்முறை 12, 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்கும் 38 பிரிவுகளில் இந்த அஞ்சலோட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 4X50 மீற்றர், 4X100 மீற்றர் ஆகிய இரண்டு அஞ்சலோட்டப் போட்டிகளும், 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 4X50 மீற்றர், 4X100 மற்றும் 4X200 மீற்றர் ஆகிய அஞ்சலோட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

அத்துடன், 16, 18, 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக 4X100 மீற்றர், 4X200 மீற்றர், 4X400 மீற்றர், 4X800 மீற்றர் ஆகிய அஞ்சலோட்டப் போட்டிகளுடன், கலவை அஞ்சலோட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 1984ஆம் ஆண்டு முதற்தடவையாக நடைபெற்ற இப்போட்டித் தொடர், 2004ஆம் ஆண்டு தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய 2016இல் கண்டியிலும், கடந்த வருடம் யாழ். துரையப்பா மைதானத்திலும் இதனை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்ட சம்பியன்களாக ரத்நாயக்க ம.ம.வி மற்றும் பெனடிக்ட்ஸ் கல்லூரி

“அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்ட தொடர் 2017” கடந்த 8ஆம் திகதி …

இதன்படி, தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் நெஸ்ட்லே லங்கா லிமிடெட்டின் மைலோவின் பூரண அனுசரணையுடன் பதுளையில் நடைபெறவுள்ள இம்முறை அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 263 ஆண்கள் பாடசாலைகளும், 225 பெண்களும் பாடசாலைகளும் பங்குபற்றவுள்ளன. இதில் 4,200 மாணவர்களும், 3,600 மாணவிகளும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் (19) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர், இன்று நாட்டில் பாடசாலை விளையாட்டுத்துறை முன்னேற்றம் கண்டு வருகின்றது. இதற்காக கடந்த 3 வருடங்களாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அதிலும் குறிப்பாக இப்போட்டித் தொடரை நடத்துவதன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் உள்ள மாணவர்களை ஒன்றுசேர்ந்து அவர்களுக்கிடையில் நல்லெண்ணத்தையும், குழு மனப்பாங்ககையும் ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். எனவே, இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அனுசரணை வழங்கி வருகின்ற நெஸ்ட்லே லங்கா நிறுவனத்துக்கு கல்வி அமைச்சின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற வருகின்ற அகில இலங்கை அஞ்சலோட்ட போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் வலள ரத்னாயக்க கல்லூரி அணியும் தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்விரண்டு பாடசாலைகளும் இம்முறையும் திறமைகளை வெளிப்படுத்தி சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…