அகில தனன்ஜயவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜய விதிமுறைக்கு மாறாக பந்துவீசுவது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஒருவருட காலம் சர்வதேச போட்டிகளில் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) தடைவிதித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்துள்ளது.  

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசியின் விதிமுறையை மீறி அகில தனன்ஜய பந்துவீசினார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.  

மீண்டும் அகிலவின் பந்துவீச்சு முறையற்றது என குற்றச்சாட்டு

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்…..

இதன் பின்னர், அகில தனன்ஜய கடந்த மாதம் 18ம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்த வேண்டும் என ஐசிசி சுட்டிக்காட்டியிருந்ததுடன், அதுவரையில் அவர் சர்வதேச போட்டிகளில் பந்துவீச முடியும் என தெரிவித்திருந்தது.

அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், அந்த அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. குறித்த டெஸ்ட் தொடர் நிறைவுபெற்றதை தொடர்ந்து பந்துவீச்சு பரிசோதனையை மேற்கொள்வதற்காக கடந்த மாத இறுதியில் இந்தியாவின் சென்னை விளையாட்டு அறிவியல் மையத்திற்கு விஜயம் மேற்கொண்டார். 

இந்தநிலையில், அவரது பந்துவீச்சு பரிசோதனையின் முடிவினை இன்று வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியம், அகில தனன்ஜய 20 பாகை அளவில் கையை மடித்து பந்துவீசுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதன் காரணமாக அவரால் ஒரு வருட காலத்திற்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச முடியாது என அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர், அகில தனன்ஜய 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஐசிசி விதிமுறையை மீறி பந்துவீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 23ம் திகதி பிரிஸ்பேனில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, அகில தனன்ஜய விதிமுறையை மீறி பந்துவீசுவது உறுதிசெய்யப்பட்டது. 

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை A அணியில் அசேல குணரத்ன

சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன்…..

எனினும், இதன் பின்னர் அகில தனன்ஜய அவருடைய பந்துவீச்சு முறைமையை மாற்றியமைத்துக்கொண்டு, கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவின் சென்னையில் வைத்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த பரிசோதனையின் மூலம், கடந்த பெப்ரவரி 18ம் திகதி சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு அகில தனன்ஜய மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதியை பெற்ற அகில தனன்ஜய நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடியதுடன், தடைக்கு பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். இந்த நிலையில், அவர் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இவரது பந்துவீச்சு குறித்து மீண்டும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ஐசிசியின் விதிமுறையின் படி, இரண்டாவது முறையாக பந்துவீச்சு குற்றச்சாட்டுக்கு வீரர் ஒருவர் முகங்கொடுத்தால், அவருக்கு 2 வருட காலம் தடை விதிக்க முடியும். எனினும், அகில தனன்ஜயவுக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தடைக்காலம் நிறைவடைந்த பின்னரே, பந்துவீச்சில் மாற்றங்களை ஏற்படுத்தி, மீண்டும் பந்துவீச்சினை பரிசோதனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<