சாதனைகளுடன் டி20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

459

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் 278 ஓட்டங்களை குவித்த ஆப்கானிஸ்தான் அணி, சர்வதேச டி20 போட்டிகளில் அதி கூடிய  ஓட்டங்களை பெற்ற அணியாக புதிய சாதனை படைத்துள்ளது. அது மாத்திரம் இன்றி இன்றைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஹசரதுல்லா ஷஸாய் மற்றும் உஸ்மான் கனி ஆகியோர் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக பெற்றுக் கொண்ட 236 ஓட்ட இணைப்பாட்டமும் மற்றுமொரு சாதனையாக பதியப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச டி20 போட்டி இன்று (23) நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களை குவித்து இலங்கை அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா அணி பெற்றிருந்த 263 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்தது.

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான்

போட்டியின் ஆரம்பம் முதலே ஹசரதுல்லாஹ் ஷஸாய் மற்றும் உஸ்மான் கனி ஜோடி அயர்லாந்து பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்ய தொடங்கினர். இருவரும் இணைந்து 236 ஓட்டங்களை பெற்று சர்வதேச டி20 போட்டிகளில் அதி கூடிய இணைப்பாட்டம் என்ற சதனையை படைத்திருந்த போது உஸ்மான் கனி 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷஸாய், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 16 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 162 ஓட்டங்களை குவித்திருந்தார்.

16 சிக்ஸர்களை விளாசிய ஹசரதுல்லாஹ் ஷஸாய் சர்வதேச டி20 போட்டியொன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ஞ்சின் 14 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடித்து தனது பெயரை சாதனை ஏட்டில் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் அதி கூடிய தனி நபர் ஓட்டமான 172 ஓட்டங்கள் என்ற ஆரோன் பின்ஞ்சின் மற்றுமொரு சாதனையை 10 ஓட்டங்களால் தவற விட்டிருந்தார். அவர் பெற்ற 162 ஓட்டங்கள், சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது அதி கூடிய தனி நபர் பெற்ற ஓட்டமாக பதியப்பட்டிருந்தது.

இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அயர்லாந்து அணி ஆரம்ப விக்கெட்டுக்காக அணித்தலைவர் போல் ஸ்டேர்லிங் மற்றும் கெவின் ஓப்ரைன் ஆகியோர் 126 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆப்கான் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கானின் மிரட்டலில் அயர்லாந்து அணியின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது என்றால் மிகையாகாது.

இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 84 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இவ்வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் 2-0 என ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணி சார்பாக அணித்தலைவர் போல் ஸ்டேர்லிங் 91 ஓட்டங்களையும் கெவின் ஓப்ரைன் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டதை தவிர ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை சாய்திருந்தார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது சர்வதேச டி20 போட்டி நாளை (24) நடைபெறவுள்ளது.

தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ள இலங்கை

  • போட்டியின் ஆட்ட நாயகன் – ஹசரதுல்லாஹ் ஷஸாய்

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 278/3 (20) – ஹசரதுல்லாஹ் ஷஸாய் 162*, உஸ்மான் கனி 73, ரான்ங்கின் 35/3

அயர்லாந்து – 194/6 (20) – போல் ஸ்டேர்லிங் 91, கெவின் ஓப்ரைன் 37, ராஷித் கான் 25/4

முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<