சுப்பர் 8 இல் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை இளையோர் கரப்பந்து அணி

168

மியன்மாரில் நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் இலங்கை அணி சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 3-1 என்ற செட் கணக்கில் தோல்வியை சந்தித்தது. 

மியன்மாரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் குழுநிலை போட்டிகளில் இலங்கை அவுஸ்திரேலியாவிடம் தோற்றபோதும் மியன்மார் மற்றும் ஹொங்கொங் அணிகளை வீழ்த்தியே சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது. 

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று (07) நடைபெற்ற போட்டியின் முதல் சுற்றில் இலங்கை அணி கடும் நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. பாகிஸ்தானின் வேகமான ஆட்டத்திற்கு முகம்கொடுக்க முடியாத இலங்கை இளம் வீரர்கள் அந்த சுற்றை 25–17 என பறிகொடுத்தனர்.  

ஆசிய இளையோர் கரப்பந்தில் மியன்மாரை வீழ்த்திய இலங்கை

இந்நிலையில் இரண்டாவது சுற்றின் ஆரம்பம் தொடக்கம் பாகிஸ்தான் வீரர்கள் இலங்கை அணியின் ஆட்டத்தின் பாணியை அவதானித்து ஆட ஆரம்பித்தது தெரிந்தது. அந்த சுற்றின் நடுப்பகுதியில் வந்த சங்க, பாகிஸ்தான் அணிக்கு கடும் சவாலாக இருந்து புள்ளிகளை அதிகரித்தார். அதற்கு அவர் வேகமாகன ஆட்டம் மற்றும் பந்தை வழங்குவதில் அதிக பங்களிப்புச் செலுத்தினார். எனினும் அந்த சுற்றில் பாகிஸ்தான் 25-20 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.  

முந்தைய சுற்றுகளில் ஏற்பட்ட குறைகளை சரிசெய்துகொண்டு எதிரணியை சரியாக புரிந்து சிறப்பாக ஆடிய இலங்கை அணி 3 ஆவது சுற்றில் பாகிஸ்தானை எதிர்பாராத வகையில் தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு சங்க மற்றும் பபசர இருவரும் அதிக பங்களிப்புச் செய்தனர். அந்த சுற்றை 25-21 என்ற புள்ளிகள் கணக்கிலேயே இலங்கை கைப்பற்றியது. 

மூன்றாவது சுற்றில் பெற்ற எதிர்பாராத வெற்றியுடன் நான்காவது சுற்று வரை போட்டி நீடித்தது. அந்த சுற்றின் ஆரம்பம் தொடக்கம் இரு அணிகளும் சரிசமமாக மோதிக்கொண்டன. போட்டியின் பெரும்பாலான நேரங்களில் இரு அணிகளினதும் புள்ளிகள் சம அளவில் இருந்ததோடு இறுதியில் பாகிஸ்தான் வீரர்கள் அந்தச் சுற்றை 30-20 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றினர். 

நாளை (08) இலங்கை அணி சுப்பர் 8 சுற்றில் தனது இரண்டாவது போட்டியில் சீன தாய்பே அணியை எதிர்கொள்ளவுள்ளது.    

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<