விறுவிறுப்பிற்கும், சுவாரசியங்களுக்கும் என்றுமே பஞ்சம் இல்லாத இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் திருவிழாவின் 10ஆவது பருவகாலப் போட்டிகள் இன்றைய தினம் (புதன்கிழமை) மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடர் கடந்த காலங்களைப் போன்று இந்த முறையும் அனைத்துலக கிரிக்கட் இரசிகர்களுக்கும் விருந்து படைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இந்த கட்டுரையை ஆரம்பிப்போம்.  

கடந்த காலம்

இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் பருவகாலமானது கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி பெங்களுரில் கோலாகலமான முறையில் ஆரம்பமாகியிருந்தது. 46 நாட்களாக இடம்பெற்ற இந்த தொடரில் 59 போட்டிகளில் 58 போட்டிகள் நடைபெற்றிருந்த நிலையில், ஒரு போட்டி மழை காரணமாக கடைவிடப்பட்டிருந்தது.

குசல் பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடரின் முதல் போட்டியில்…

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் விரேந்திர சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய ஷேன் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்திருந்தது.

முதல் ஐ.பி.எல் வெற்றியாளர்கள் - ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி
முதல் ஐ.பி.எல் வெற்றியாளர்கள் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி

வெற்றிகரமான முறையில் நடைபெற்று முடிந்த இந்த தொடரினை தொடர்ந்து இரண்டாவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடரானது இந்தியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் காரணமாக தென்னாபிரிக்காவில் இடம்பெற்றது.

2009ஆம் அண்டு ஏப்ரல் 18ஆம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரை 37 நாட்கள் நடைபெற்ற இந்த தொடரில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த நிலையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.  

முதல் இரண்டு பருவகாலங்களிலும் பாகிஸ்தான் அணியின் வீரர்கள் விளையாடியிருந்தார்கள். எனினும், 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமான மூன்றாவது பருவகால போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் எவரும் இடம்பெற்றிருக்கவில்லை.

இந்த பருவகாலத்திற்காக 66 வீரர்கள் ஏலத்துக்கு விடப்பட்டாலும் 11 வீரர்கள் மாத்திரமே ஏலத்தில் எடுக்கப்பட்டனர். குறிப்பாக பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் எவருமே ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர், இதனைப் பாகிஸ்தான் வீரர்கள் அவமதிக்கப்பட்ட ஒரு செயலாகக் கூறியதையடுத்து இது அரசியல் விவகாரமாக மாற்றம் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சர், துடுப்பாட்ட வீரர் தெரிவிற்கும் இந்திய அரசிற்கும் தொடர்பேதும் கிடையாது என விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பிலான சர்ச்சை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

கோலாகலமான முறையில் நடைபெற்ற இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிண்ணத்தினை கைப்பற்றியது. எவ்வாறிருப்பினும் இந்தியாவில் இடம்பெரும் இந்த பெரும் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இல்லாமை ஒரு வித்தியாசத்தைக் காண்பித்தது.  

நான்காவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி புனே, கொச்சி ஆகிய இரு நகரங்கள் இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டு புதிய அணிகளாக அறிவிக்கப்பட்டன. இவை 2011 ஆண்டின் நான்காவது பருவகாலத்தில் இருந்து இத்தொடரில் இணைத்துக்கொள்ளப்பட்டன. இதன்படி நான்காவது பருவகாலத்தில் மொத்தமாக 10 அணிகள் விளையாடின.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது முறையாகவும் அபார வெற்றி பெற்று கிண்ணத்தினை சுவீகரித்திருந்தது.

ஐந்தாவது பருவகால .பி.எல் தொடரானது 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி ஆரம்பாகியிருந்தது. இந்த தொடரின் சில போட்டிகளை இலங்கையில் நாடாத்துமாறு இலங்கை கிரிக்கட் சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கையினை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நிராகரித்திருந்தது.

ஆசிய கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்து 12 நாட்களில் ஆரம்பமான இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிண்ணத்தினை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.

அதற்கு முன்னர் நடைபெற்று முடிந்த நான்கு தொடர்களிலும் பிரகாசிக்காத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் தடவையாக கிண்ணத்தினை கைப்பற்றி .பி.எல் வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றினை ஏற்படுத்தியிருந்தது.

2012ஆம் ஆண்டின் ஐ.பி.எல. வெற்றியாளர்கள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி - AFP PHOTO
2012ஆம் ஆண்டின் ஐ.பி.எல. வெற்றியாளர்கள் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – AFP PHOTO

இந்த தொடரினையடுத்து ஆறாவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடர் 2013ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த நிலையில், அதில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக கிண்ணத்தினை சுவீகரித்திருந்தது.

2014ஆம் நடைபெற்ற ஏழாவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தினை கைப்பற்றிருந்தது. இதன்மூலம் அவர்கள், கிண்ணத்தை இரண்டு தடவைகள் கைப்பற்றிய பதிவை சென்னை அணியுடன் சமன் செய்துகொண்டது.

இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு நடைபெற்ற 8ஆவது பருவகால போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாகவும் வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்திருந்தது.

8ஆவது பருவகாலத்திற்கான வெற்றிக் கிண்ணத்தினை மும்பை இந்தியன்ஸ் அணி சுவீகரிப்பதற்கு இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க முக்கிய பங்காற்றியிருந்தார். இதில் அவர் 15 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுக்களை வீழ்த்தி பந்து வீச்சில் பெரிதும் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

2015 ஐ.பி.எல் இல் 24 விக்கெட்டுக்களை வீழ்த்திய மாலிங்க
2015 ஐ.பி.எல் இல் 24 விக்கெட்டுக்களை வீழ்த்திய மாலிங்க

இந்தத் தொடர்களைப் போன்று 2016ஆம் ஆண்டுக்கான .பி.எல் தொடர் அமையவில்லை. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சலேஞ்சஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் .பி.எல் தொடர்களில் விளையாடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தமையே அதற்கான காரணமாகும்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றத்தினை வழங்கியிந்தாலும், இரண்டு புதிய அணிகள் 9ஆவது பருவகாலத்தில் களம் கண்டன.

குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சுப்பர்கேன்ஸ் ஆகிய அணிகளே இந்த தொடரில் புதிதாக களம் இறங்கியிருந்தன. எனினும் இந்த இரண்டு அணிகளுமே பெரிதாக சோபிக்கவில்லை என்கின்ற ஏக்கம் அனைத்து கிரிக்கட் ரசிகர்கள் மத்தியிலும் காணப்பட்டது.

ஆசிய கிரிக்கெட் சபையின் வளர்ந்துவரும் அணிகளின் சம்பியனாக முடிசூடிய இலங்கை

சிட்டகொங், சஹூர் அகமத் சௌத்ரி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற…

இந்த நிலையில் 9ஆவது பருவகாலத்திற்கான கிண்ணத்தினை டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதல் முறையாக சுவீகரித்திருந்தது.

ஐ.பி.எல் சாதனைகள்

இவ்வாறான வரலாற்றினை கொண்ட .பி.எல் தொடரின் மேலும் சில சாதனைப்பக்கங்களை இங்கு சற்று விரிவாக ஆராய்வோம்.

இதுவரை இடம்பெற்ற போட்டிகளிலே பெங்களுர் ரோயல் சலேன்ஜர்ஸ் அணியினர் 263 ஓட்டங்களைப் பெற்று, இதுவரை பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினர், ரோயல் சலேன்ஜர்ஸ் அணிக்கெதிராக இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் போது பெற்றுக்கொண்ட 58 ஓட்டங்கள் தான் இதுவரை பெறப்பட்ட அதிகுறைவான ஓட்ட எண்ணிக்கையாகும்.

விராட் கோலி மொத்தமாக 139 போட்டிகளில் 131 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி மொத்தமாக 4,110 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதற்கு அடுத்த நிலையில் சுரேஷ் ரெய்னா 4,098 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவர்களைத் தொடர்ந்து ரோஹித் சர்மா, கௌதம் கம்பீர் மற்றும் கிறிஸ் கெயில் ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.

கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 17 சிக்சர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் உள்ளடங்களாக பெற்றுக்கொண்ட 175 ஓட்டங்களே இதுவரை ஒரு தனிநபர் பெற்றுக் கொண்ட அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

ஐ.பி.எல் இல் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராண கிறிஸ் கெயில்
ஐ.பி.எல் இல் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராண கிறிஸ் கெயில்

இந்த சாதனையே ஒரே போட்டியில் அதிக ஆறு ஓட்டங்களைப் பெற்ற சாதனையாகவும் இன்று வரை தகர்க்க முடியாத சாதனையாகவும் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 158 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட பிரெண்டன் மெக்கலம் காணப்படுகின்றார்.

2014-2016 பருவகாலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சிமொன்ஸ் 47.10 என்ற அதிகூடிய சராசரியைப் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து கிரிஸ் கெயில், இக்பால் அப்துல்லா ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.

251 ஆறு ஓட்டங்களை இதுவரை பெற்றுக் கொண்ட கிரிஸ் கெயில், ஆறு ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டவர்களில் முதன்மையானவராக உள்ளார். இதற்கு அடுத்தபடியாக 163 ஆறு ஓட்டங்களைப் பெற்ற ரோஹித் சர்மா உள்ளார்.

டேவிட் வோர்னர் 34 தடவைகள் ஐம்பதுக்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து கம்பீர் 31 தடவைகளும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 30 தடவைகள் ஐம்பதுக்கு மேற்பட்ட ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.  

2016ஆம் ஆண்டு ஐ.பி.ல் தொடரிலே விராட் கோலி 16 போட்டிகளில் 16 போட்டிகளிலுமே துடுப்பெடுத்தாடி 973 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ஒரு தொடரிலே இதுவரை ஒரு தனிநபர் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்களாக இது உள்ளது. அதனைத் தொடர்ந்து டேவிட் வோர்னர், கிரிஸ் கெயில் மற்றும் மைக்கல் ஹஸி போன்றவர்கள் உள்ளனர்.  

இதுவரை ஹர்பஜன் சிங் மற்றும் கம்பீர் ஆகியோர் 12 தடவைகள் பூச்சியதிற்கு ஆட்டமிழந்துள்ளனர்.

லசித் மாலிங்க இதுவரை 98 போட்டிகளில் விளையாடி 143 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து மிஸ்ரா 124 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

விளையாட்டின் மூலம் ஒற்றுமை மற்றும் அமைதியைக் கட்டியெழுப்ப மற்றொரு முயற்சி

ஜக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு ஆகியன இணைந்து 2014ஆம் ஆண்டு முதல்..

பந்து வீச்சில் சிறப்புப் பெறுதியாக பாகிஸ்தான் வீரர் சொஹைல் தன்வீர் நான்கு ஓவர்கள் பந்து வீசி 14 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். அதேபோல சம்பா, சன்ரைசஸ் அணிக்காக 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

பந்துவீச்சில் சிறந்த சராசரியான 17.80 என்பதனை மலிங்க தன்னகத்தே கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஞ்சர் 18.72 சராசரியினை வைத்துள்ளார்.

ஜெம்ஸ் போக்னர் மாத்திரமே ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களை இரு தடவைகள் பெற்றுள்ளார்.

பிராவோ ஒரே தொடரில் 18 போட்டிகளில் பந்து வீசி 32 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து மாலிங்க மற்றும் போக்னர் 28 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளனர்.

விக்கெட் காப்பாளர்கள் வரிசையில் தினேஷ் கார்த்திக் 138 போட்டிகளில் விக்கெட் காப்பாளராகப் பணிபுரிந்து 98 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற உறுதுணையாக இருந்துள்ளார். அவரைத் தொடர்ந்து டோனி, 143 போட்டிகளில் விக்கெட் காப்பாளராகப் பணிபுரிந்து 89 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற பக்க பலமாக இருந்துள்ளார்.  

இதுவரை சுரேஷ் ரெய்னா 147 போட்டிகளில் விளையாடி, 82 பிடி எடுப்புக்களை எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஏ பிடி வில்லியர்ஸ் 66 பிடி எடுப்புக்களை எடுத்திருந்தார்.

குஜராத் லயன்ஸ் அணிக்கெதிராக பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இரண்டாவது விக்கெட்டுக்காக ஒன்றிணைந்த விராத் கோலி மற்றும் டி வில்லியர்ஸ், தம்மிடையே 229 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இணைப்பாட்டத்தில் இதுவரை பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்களாக இது உள்ளது.  

இத்தொடரில் அதிக தடவைகள் விளையாடிய வீரர்கள் வரிசையில் இதுவரை சுரேஷ் ரய்னா 147 போட்டிகளிலும், டோனி 143 போட்டிகளிலும், ரோஹித் சர்மா 142 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.  

2017ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர்

இவ்வாறான பல சாதனைகளைக்கொண்ட .பி.எல் தொடரின் 10ஆவது பருவகாலம் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய முதல் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்சலேஞ்சஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி வரை மொத்தமாக 60 போட்டிகள் நடைபெறவுள்ளமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாகும்.

இம்முறை ஆரம்பமாகவுள்ள இந்த தொடர் கிரிக்கட் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளமை அணிகளுக்கு பெரும் பின்னடைவாக காணப்படுகின்றது.

10ஆவது ஐ.பி.எல் இன் கிண்ணம்
10ஆவது ஐ.பி.எல் இன் கிண்ணம்

ரோயல் சலேன்ஜர்ஸ் அணியின் தலைவர் விராட் கோலி காயம் காரணமாக விலகியுள்ளார். அதேபோன்று அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஏ பிடி வில்லியர்சும் காயமடைந்துள்ள நிலையில் அவர் விளையாடுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. அதேபோன்று, அந்த அணியின் மிக முக்கிய வீரர்களான மிச்சல் ஸ்ராக், லோகேஸ் ராகுல், சப்ராஸ் கான் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ரோயல் சலேன்ஜர்ஸ் அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் சேன் வொட்சன் செயற்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எவ்வாறிருப்பினும் குறித்த வீரர்களின் பங்களிப்பு இல்லாமை அணிக்கு மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதேபோன்று, ரைசிங் புனே சுப்பர்கேன்ஸ் அணியினைச் சேர்ந்த கெவின் பீற்றர்சன், மிச்சல் மார்ஷ், ரவீச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.

டெல்லி டெயாடேவில்ஸ் அணியின் ஜே.பி டுமினி, குயின்டன் டி கொக், அஞ்சலோ மத்தியுஸ் ஆகிய முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளமை அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது. இவர்கள் மூவரும் அவ்வணி எதிர்பார்த்திருந்த 3 நட்சத்திரங்களாகும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினைச் சேர்ந்த தமிழக வீரர் முரளி விஜய்யும் காயமடைந்துள்ளார். அதுபோன்று, கடந்த தொடரில் அறிமுகமான குஜராத் லன்ஸ் அணியின் முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் பிராவோ ஆகிய வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

இம்முறை மற்றொரு முக்கிய விடயமாக தமிழக வீரர் ஒருவர் இந்த தொடரில் அறிமுக வீரராக களமிறங்கவுள்ள நிலையில், அவர் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் தன்பக்கம் திரும்ப வைத்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சளாரான தங்கராசு நடராஜனை 3 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.

25 வயதான நடராஜனின் அடிப்படை ஏலத்தொகை 10 லட்சம் ரூபாவாக இருந்தது. இந்நிலையில் இந்த தொகையில் இருந்து 30 மடங்கு உயர்வாக, அவரை ஏலத்தில் எடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளர் சவாக்.

இந்த தொடர் அவருக்கு சிறந்ததொரு தொடராக அமைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் காணப்படுகின்றது.

இந்த முறை இடம்பெறும் பத்தாவது ஐபில் போட்டிகளில் மேற்கூறிய சாதனைகள் தகர்க்கப்படுமா? வியக்கும் விதத்தில் புதிதாக என்ன நிகழ்வுகள் இடம்பெறும் என்பதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இத்தொடர் குறித்த முக்கிய செய்திகளை உங்களுக்கு தொடர்ந்து வழங்குவதற்கு ThePapare.com தயாராக உள்ளது என்பதனையும் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு <<