இலங்கை அணி சுமார் 40 நாட்களைக் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணியோடு விளையாடி தற்போது சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாட பயிற்சிகளில் இறங்கி உள்ளது.

இந்த நிலையில் தங்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பனவுகளை வழங்கவில்லையெனத் தெரிவித்து, சிம்பாப்வே அணிக்காக விளையாடும் ஹராரேயைச் சேர்ந்த வீரர்கள், பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு மறுப்புத் தெரிவித்து, எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இம்மாத முடிவில், பாகிஸ்தான்அணிக்கெதிரான தொடரொன்று இடம்பெறவுள்ளதோடு, அதைத் தொடர்ந்து, இலங்கை அணிக்கெதிரான தொடர் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், சிம்பாப்வே கிரிக்கெட் சபையின் இந்நிலைமையால், அவ்விரு தொடர்கள் தொடர்பாகவும் கேள்விக்குறிகள் எழுந்துள்ளன.

ஹராரேயில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சி முகாமில், ஹராரேக்கு வெளியே வசிக்கும் வீரர்கள் பங்குபற்றவில்லை. அவர்களை ஹராரேக்கு அழைப்பதற்குப் போதிய பணம் இல்லாத நிலையில், ஹராரேயில் வசிக்கும் வீரர்கள் மாத்திரமே, இதில் பங்குபற்றவிருந்தனர். அவர்களே, இப்போது இம்முகாமில் பங்குபற்ற மறுத்துள்ளனர். இவற்றுக்கு மேலதிகமாக, பயிற்சிகளுக்குத் தேவையான பந்துகளோ அல்லது வலைப் பயிற்சிகளுக்குத் தேவையான வலைகளோ வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம்  ஜூலை தொடக்கம், வீரர்களுக்கான போட்டி ஊதியங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுவதோடு, இவ்வாண்டு ஜூலையுடன், வீரர்களின் ஒப்பந்தங்கள் காலாவதியாகியுள்ளதாகவும், புதிய ஒப்பந்தங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறு இருந்தாலும் சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் இலங்கை, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்குகொள்ளும் முக்கோண ஒருநாள் தொடர் நடைபெற உள்ளதோடு இந்த தொடருக்கான போட்டிகள் நடைபெறும் தினங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.