இந்திய ஒருநாள் தொடர்; முதல் போட்டியில் முன்னணி வீரர்களை இழக்கும் ஆஸி.

67

முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அடம் ஷம்பா மற்றும் இளம் விக்கெட்காப்பாளர் ஜோஷ் இங்லீஸ் ஆகியோர் பெர்த்தில் நடக்கவிருக்கும் இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியை தவறவிட உள்ளதாக  ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) இன்று  (14) உறுதிப்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து T20I குழாம் அறிவிப்பு!

இதன் காரணமாக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது 

எனினும் பிரதியீட்டு வீரர்களாக அவுஸ்திரேலிய அணியானது மேட் குஹ்னெமன் மற்றும் ஜோஷ் பிலிப் ஆகியோரை இணைத்துள்ளது. 

அவுஸ்திரேலிய அணியின் அனுபவமிக்க மணிக்கட்டு சுழல்வீரரான அடம் ஷம்பா, குடும்பக் கடமைகள் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவரது மனைவிக்கு விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதால், ஷம்பா சிட்னியில் உள்ள தனது வீட்டில் இருக்க முடிவு செய்துள்ளார். இருப்பினும், அவர் ஒக்டோபர் 23 அன்று அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது 

மறுபுறம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஜோஷ் இங்லீஸ், அவரது கால் தசைகளில் ஏற்பட்ட காயம் (Calf Strain) இன்னும் முழுமையாக குணமாகாததால் முதல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாகவே அவர் நியூஸிலாந்துக்கு எதிரான T20 தொடரையும் தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது. 

இங்லீஸ்குப் பதிலாக ஜோஷ் ஃபிலிப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் பிரதான விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி, ஆஷஸ் தொடருக்கான தயாராகும் விதமாக ஷெபீல்ட் ஷீல்ட் போட்டியில் விளையாடுவதற்காக முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் 

இதனால், ஃபிலிப் 2021-க்குப் பிறகு அவுஸ்திரேலியாவிற்காக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இங்லீஸ் ஒக்டோபர் 25 சிட்னியில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் திரும்புவார் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

ஷம்பாவின் இடத்தில், இடது கை சுழற்பந்து வீச்சாளர் மேட் குஹ்னெமன் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் தேவைப்படும் போது இந்திய தொடரில் மேட் ஷோர்ட் மற்றும் கூப்பர் கொனொல்லி ஆகியோருடன் இணைந்து அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சுப் பிரிவை வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. 

அவுஸ்திரேலியாஇந்தியா ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஒக்டோபர் 19 பேர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும், மிட்செல் மார்ஷ் தலைமையில் களமிறங்கும் அவுஸ்திரேலிய அணி, வலுவான இந்திய அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. 

  • இந்தியா – அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டி அட்டவணை: 
  • முதல் ஒருநாள் போட்டி: ஒக்டோபர் 19, பேர்த் 
  • இரண்டாவது ஒருநாள் போட்டி: ஒக்டோபர் 23, அடிலெய்ட் 
  • மூன்றாவது ஒருநாள் போட்டி: ஒக்டோபர் 25, சிட்னி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<