உலக மெய்வல்லுனர் தரவரிசையில் யுபுன் வரலாற்று பதிவு

129

உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வீரர்களுக்கான புதிய தரவரிசையில் இலங்கையின் நட்சத்தில குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், 40ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன்மூலம், இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டு வரலாற்றில் 100 மீட்டர் ஓட்ட வீரரொருவர் முதல் முறையாக உலக தரவரிசையில் அதிசிறந்த இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சூரிக் டயமண்ட் லீக்கில் இலங்கை வீரர் யுபுனுக்கு 9ஆவது இடம்

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக உலக தரவரிசையில் 45ஆவது இடத்தை யுபுன் பெற்றுக்கொண்டிருந்தார். எனினும், அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள டயமண்ட லீக் மெய்வல்லுனர் போட்டியில் 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதன் மூலம் 5 இடங்கள் முன்னேறி 40ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

26 வயதான யுபுன் அபேகோன், கடந்த மே மாதம் இத்தாலியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் 10.15 செக்கன்களில் 100 மீட்டர் போட்டியை ஓடிமுடித்து புதிய தெற்காசிய சாதனை படைத்ததுடன், உலக மெய்வல்லுனர் தரவரிசையில் முதல் முறையாக 79ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து கடந்த ஜுன் மாதம் நடுப்பகுதியில் உலக தரவரிசையில் 50ஆவது இடத்துக்கு முன்னேறிய அவர். ஜுன் 10ஆம் திகதி கோல்டன் காலா பியெட்ரோ மெனியா மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்டு 10.16 செக்கன்களில் 100 மீட்டர் போட்டியை நிறைவுசெய்தார்.

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதிபெற்று புதிய வரலாறும் படைத்தார்.

2021-2022 இற்கான மெய்வல்லுனர் அட்டவணை வெளியீடு

இதுஇவ்வாறிருக்க, ஆண்களுக்கான 100 மீட்டர் உலக தரவரிசையில் யுபுன் அபேகோனுக்கு முன்னால் மூன்று ஆசிய நாட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு வீரர்களும், சீனாவைச் சேர்ந்த ஒரு வீரரும் அடங்கும்.

இதனால் அடுத்த ஆண்டு இறுதியில் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் யுபுன் அபோகோனுக்கு பதக்கமொன்றை வெல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…