2021-2022 இற்கான மெய்வல்லுனர் அட்டவணை வெளியீடு

227

இந்த ஆண்டின் இறுதியிலும், அடுத்த ஆண்டும் நடைபெறவுள்ள தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகளின் அட்டவணையை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதில் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயம் ஒக்டோபர் மாதம் 30ஆம், 31ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, எதிர்வரும் நவம்பர் மாதம் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டியும், டிசம்பர் மாதம் தேசிய மற்றும் சுப்பர் மெய்வல்லுனர் குழாம்களில் இடம்பெற்றுள்ள வீரர்களின் திறமைகளை மீள்பரிசீலனை செய்கின்ற தெரிவுப் போட்டியொன்றும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் 2ஆவது அத்தியாயம் ஒத்திவைப்பு

அதேபோல, 2022ஆம் ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஏப்ரல் 8ஆம், 9ஆம் மற்றும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மே மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம், 12ஆம் திகதிகளில் ஆசிய உள்ளக மெய்வல்லுனர் தொடர் கஸகஸ்தானில் நடைபெறவுள்ளதுடன், அதே மாதம் ஆசிய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்தமட்டில் மார்ச் முதலாம் திகதி முதல் 4ஆம் திகதி வரை குவைத்தில் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரும், மார்ச் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி செர்பியாவில் உலக உள்ளக மெய்வல்லுனர் தொடரும் நடைபெறவுள்ளன.

சூரிக் டயமண்ட் லீக்கில் இலங்கை வீரர் யுபுனுக்கு 9ஆவது இடம்

இதுஇவ்வாறிருக்க, ஆசிய இளையோர் மெய்வல்லுனர் தொடர் ஜூன் மாதம் தென்கொரியாவிலும், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஜூலை மாதம் அமெரிக்காவிலும், பொதுநலவாய விளையாட்டு விழா ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்திலும், ஆசிய விளையாட்டு விழா செப்டம்பர் மாதம் சீனாவிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…