போலந்தில் போட்டிச் சாதனையுடன் முதலிடம் பிடித்த யுபுன் அபேகோன்

109

ஜப்பானில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறும் நோக்கில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், தற்போது ஐரேப்பாவில் நடைபெற்று வருகின்ற பல்வேறு மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குகொண்டு வெற்றிகளைக் குவித்து வருகிறார்.  

ஆதன்படி, போலந்தில் கடந்த 2 தினங்களில் நடைபெற்ற இரு வெவ்வேறு சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சிறந்த காலத்தைப் பதிவு செய்து வெற்றியீட்டியுள்ளார் 

இதில் கடந்த 6ஆம் திகதி போலந்தில் நடைபெற்ற Wieslaw Maniak Memorial – World Athletic Continental Tour மெய்வல்லுனர் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் (Final A) பங்கேற்ற யுபுன் அபேகோன் 10.29 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 

19 போட்டியாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மூன்று இறுதிப்போட்டிகளில், யுபுனின் நேரப்பெறுமதி ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது 

இதற்கிடையே, நேற்றுமுன்தினம் (08) போலந்தில் நடைபெற்ற zbigniew ludwichowski World Athletic Continental Tour மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றரில் பங்கேற்ற யுபுன், போட்டியை 10.36 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடம் பெற்றார். இதில் அவர் புதிய போட்டிச் சாதனையையும் நிகழ்த்தியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இந்த வெற்றிக்குப் பிறகு, யுபுன் தனது Facebook பக்கத்தில் குறிப்பிட்டதாவது, தூக்கமில்லா இரவுகளிலும், கடினமான அட்டவணைகளிலும், ஓரளவு ஆபத்துடன் கூட தான் ஓடிக்கொண்டிருப்பது வரவிருக்கும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டிக்கு தகுதி பெறுவதற்காகத்தான் என்று குறிப்பிட்டார். 

போட்டிச் சாதனையை முறியடித்து Timing Board இல் இலங்கையின் தேசியக் கொடியை காண்பிக்கச் செய்ததில் நான் பெருமைப்படுகிறேன். இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவுக்கு ஐரோப்பாவிலும் கூட ஒளிர முடியும் என்பதை உலகுக்குக் காட்டினோம். நாங்கள் இங்கே (ஐரோப்பாவில்) இருப்பது அதற்காகத்தான்.’ என தெரிவித்தார் 

எதிர்காலத்தில் மேலும் பல போட்டிகளில் பங்கேற்க தான் எதிர்பார்த்திருப்பதாகவும் யுபுன் இதில் குறிப்பிட்டிருந்தார். 

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<