சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு இரண்டாவது தோல்வி

235

19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன்-II பாடசாலைகள் பங்குபெறும் ஒருநாள் தொடரில் இன்று (23) லைசியம் சர்வதேச பாடசாலை யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை 85 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

மேலும் இந்த தோல்வி யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு இந்த ஒருநாள் தொடரில் கிடைத்த இரண்டாவது தோல்வியாக பதிவாகியிருக்கின்றது.

இரு அணிகளும் பங்குபற்றியிருந்த இந்தப் போட்டி இன்று (23) வத்தளை புனித அந்தோனியார் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி முதலில் லைசியம் அணியினை துடுப்பாடப் பணித்தது.

திறப்பு விழாக்காணும் கிழக்கின் முதல் கிரிக்கெட் புற்தரை மைதானம்

அதன்படி போட்டியில் துடுப்பாடிய லைசியம் அணி சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வீரர் அஷ்னாத்தின் பந்துவீச்சில் ஆரம்பத்தில் தடுமாறியது. எனினும் அவ்வணிக்காக நெத்மல் டி சொய்ஸா மற்றும் தீக்ஷன சேஹான் ஆகியோர் சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்த லைசியம் சர்வதேச பாடசாலை 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 220 ஓட்டங்களை எடுத்தது.

லைசியம் அணியின் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் தாண்டிய தீக்ஷன செஹான் 80 ஓட்டங்களை எடுக்க, ஏனைய அரைச்சதம் பெற்ற வீரரான நெத்மால் டி சொய்ஸா 54 பந்துகளில் 13 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதேநேரம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் ஜெயச்சந்திரன் அஷ்னாத் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், அன்டொன் அபிஷேக் மற்றும் கமலபாலன் ஜனாதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

அபிஷேக்கின் பந்துவீச்சில் சுருண்ட களுத்துறை திருச்சிலுவை கல்லூரி

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 221 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சிறந்த ஆரம்பத்தினைப் பெற்ற போதும் 80 ஓட்டங்களில் பறிகொடுத்த தமது முதல் விக்கெட்டினை அடுத்து தடுமாற்றம் காண்பித்திருந்ததோடு இறுதியில் 34.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் தாண்டிய குகணேஸ்வரன் கரிசன் 62 பந்துகளுக்கு 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லைசியம் சர்வதேச பாடசாலையில் பந்துவீச்சு சார்பில் ரயான் பெரேரா மற்றும் ஜயது சத்துரங்க ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

லைசியம் கல்லூரி, வத்தளை – 220 (44.2) தீக்ஷன செஹான் 80, நெத்மல் டி சொய்ஸா 68, ஜெயச்சந்திரன் அஷ்னாத் 58/4

சென்.ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் – 135 (34.5) குகணேஸ்வரன் கரிசன் 55, ரயான் பெரேரா 32/4, ஜயது சத்துரங்க 33/4

முடிவு – லைசியம் சர்வதேச பாடசாலை 85 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<